Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீமான் பேரணியில் தீக்குளித்த மாணவரணி செயலாளர் மரணம்

கர்நாடகா அரசை கண்டித்து சென்னையில் நேற்று நடந்த சீமான் பேரணியில் தீக்குளித்த திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி பாசறை செயலாளர் விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்பட்டதற்ஏ எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் நடந்தன. அப்போது, கன்னட அமைப்பினரால் தமிழர்கள் தாக்கப்பட்டதோடு, தமிழக வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து சிந்தாதிரிப் பேட்டை வரை நேற்று பேரணி நடைபெற்றது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் அமீர், சேரன், ரவி மரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி பாசறை செயலாளர் விக்னேஷ் (23) என்பவரும் கலந்து கொண்டார். புதுப்பேட்டை அருகே பேரணி வந்தபோது விக்னேஷ் உடலில் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக தீ அணைக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விக்னேஷ் அனுமதிக்கப்பட்டார்.

90 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். உடலில் பெரும்பாலான இடங்கள் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூறு பரிசோதனை முடிந்த பின்னர் விக்னேஷின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.


தகவல் அறிந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு விக்னேஷ் உடலுக்கு அவர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தற்கொலை மூலமாக போராடுவது சரியான வடிவல்ல, யாரும் இதுபோன்று ஈடுபட வேண்டாம். விக்னேஷின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் நடக்கும் என்று கூறினார்.  

மேலும்,, விக்னேஷ் உடலுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

விக்னேஷ் உடலை கொண்டு செல்வதில் போலீசுடன்வாக்குவாதம்

இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்  விக்னேஷின் உடல் அஞ்சலிக்காக சென்னை உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை வைத்தனர். இதனை நிராகரித்த காவல்துறையில், சொந்த ஊரான மன்னார்குடிக்கு கொண்டு செல்ல வேண்டும் கூறியது.

இதனால் காவல்துறையினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆம்புலன்ஸ் மீது ஏறி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை காவல்துறையினர் வாகனத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். விக்னேஷ் உடலை கொண்டு செல்வது தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல்துறை அனுமதி

இந்த நிலையில், சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து விக்னேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து, விக்னேஷ் உடல் வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாலை 6 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு விக்னேஷ் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.

இதனிடையே, நாம் தமிழர் கட்சியினர் எவ்வித வன்முறையிலும் ஈடுபடக்கூடாது என்றும், அமைதியான முறையில் விக்னேஷ் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என்றும் சீமான் கூறினார்.

சகாயராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ