Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி போராட்டமும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலையும்...!

 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசுத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘காவிரியில் 10 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 15,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்’’ எனக் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 6-ம் தேதி மாலை கனத்த இதயத்தோடு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாகத் தமிழர்கள்  தாக்கப்பட்டனர். மனித உரிமை மீறல்களும் ஆங்காங்கே நடந்தன. தண்ணீருக்காகப் போராடிய தமிழர்கள், தற்போது தாக்கப்படும் தமிழர்களுக்காகப் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழக பந்தின் நிலை?

விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் அழைப்புவிடுத்த இந்த முழு அடைப்புக்கு அனைத்துத் தரப்பும் ஆதரவைத் தந்தன. அ.தி.மு.க. தவிர, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. ‘‘தேசியக் கட்சிகளான பி.ஜே.பி., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் ஓட்டு அரசியலை மையமாகவைத்தே ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தக் கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளது’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்தப் போராட்டத்தில் தேசியக் கட்சிகளின் முழு ஆதரவு என்பது சம்பிரதாய நடைமுறையாக மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

‘‘சி.ஐ.டி.யு முழு ஆதரவு கொடுக்கவில்லை!’’

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ சங்க பொதுச்செயலர் சேஷசயனம், ‘‘அ.தி.மு.க தொழிற்சங்கம் தவிர்த்து, 11 ஆட்டோ சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மொத்தம் 2.5 லட்சம் ஆட்டோக்கள்  ஓடாது’’ என்று கூறியிருந்தார். ஆனால், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் இயங்காமல் மூடப்பட்டிருந்தாலும் சில ஆட்டோ சங்கங்கள் போக்குவரத்தை நிறுத்தாமல் பணியில்  ஈடுபட்டிருந்தன. ‘‘ஏ.ஐ.டி.யு.சி முழு ஆதரவு கொடுத்துவந்த நிலையில், சி.ஐ.டி.யு முழு ஆதரவைக் கொடுக்கவில்லை. அந்தச் சங்கத்தைச் சேர்ந்த வாகனங்கள், ஆட்டோக்கள் ஓடின. அதேபோன்று மற்ற துறைகளிலும் முழு ஆதரவு  இல்லை’’ என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு-வின் பொதுச்செயலாளர் சுகுமாறன், ‘‘போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தோம்.  ஆனால், எங்கள் சங்கத்தைச் சேர்ந்துள்ளவர்கள் வண்டியை இயக்கியதாகச் சொன்னார்கள். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். கர்நாடகத்தில் நடந்த போராட்டத்துக்கு எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுத்திருப்பது அந்த மாநில மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும் முறையாகும்’’ என்றார்.

‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவில்லை!’’

‘‘பொதுப் போராட்டம் என்று வரும்போது, தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகளின் கொள்கை மாநிலத்துக்கு மாநிலம் பிரிந்துகிடக்கிறது. இதுதான் தேசியக் கட்சியா? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கொள்கை என்றால், தேசியக் கட்சி என்று எதற்குப் பெயர்’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் பேசினோம். ‘‘எங்களுடைய சங்கத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் போராட்டத்துக்குத் தமிழகம் முழுவதும் ஆதரவைக் கொடுத்துள்ளனர். கட்சிகளின் நிலைப்பாட்டை விட்டுவிடுங்கள். ஏன் மோடி தலைமையிலான மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவில்லை... காவிரி ஒழுங்காற்று  வாரியத்தை அமைக்கவில்லை? பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய எந்த ஒரு செயல்பாட்டையும் செய்யாமல் மத்திய  அரசு மௌனம் காத்துவருவதே இரு மாநிலங்களும் சண்டைபோட்டுக் கொள்வதற்கான காரணம்’’ என்றார்.
 
‘‘தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படும் பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகளும் மாநிலத்துக்கு ஒரு கொள்கையும், அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ற போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றன. இது ஓட்டு அரசியலுக்கான போராட்டம்தானே தவிர, தமிழரின் தண்ணீர்க்கான போராட்டம் இல்லை’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

- கே.புவனேஸ்வரி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ