Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் பள்ளிகள் தேர்வுகளைத் தள்ளிவைத்தது சரியா?


காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் விட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகா மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் முழு அடைப்பு நடந்தது. முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து தனியார் நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூடப்படும் என்று கூறப்பட்டது. அதே நேரம் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும்  என்று கூறப்பட்டது.

தேர்வுகள் தள்ளி வைப்பு


காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் முரண்பட்ட அறிவிப்புகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். பெற்றோர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அறிவித்தபடி பல தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. சில தனியார் பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. அரசு பள்ளிகளும் இன்று முழுமையாக இயங்கின. தமிழகத்தின் பல இடங்களில் காலை 9 மணி வரை வாகனங்கள் போதுமான அளவு ஓடவில்லை. எனவே, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வருவதில் பெற்றோர் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். டூ வீலர் வைத்திருக்கும் பெற்றோர் மட்டுமே தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றனர். குழப்பம் காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத மாணவர்கள் காலாண்டுத் தேர்வு எழுதவில்லை.  
இது ஒருபுறம் இருக்க, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் பின்பற்றப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்து திடீரென்று தேர்வுகள் தள்ளிவைப்பது சரியாகுமா? ஒரே வினாத்தாள் முறை என்ன ஆனது?

தேர்வுகள் தள்ளி வைப்பு சரியல்ல


இது குறித்து மாநிலப் பொதுப்பள்ளிகளுக்கான மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்."தனியார் பள்ளி நிர்வாகம், தன்னிச்சையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க முடியாது. மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்புகளைப் புறகணிக்கலாம். விடுமுறை எடுக்கலாம். இப்படித்தான் அவர்கள் முழு அடைப்பில் பங்கேற்கமுடியும்.
அதே நேரத்தில், பக்கத்து மாநிலத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதில் தவறு இல்லை. மழையின் போது விடுமுறை அளிக்கின்றனர். அதேபோல இதற்கும் விடுமுறை அளித்திருக்கலாம். பந்த் போராட்டத்துக்கு அரசு ஆதரவு அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியதை தமிழக அரசு மதிக்கலாம். ஆனால், முழு அடைப்பின் போது மாணவர்கள் தாக்கப்பட்டால் அதற்கு யார்பொறுப்பு? தனியார் பள்ளிகள் தனியாக இன்னொரு நாள் தேர்வு நடத்துவதை எப்படி அனுமதிக்க முடியும்? என்று தெரியவில்லை. இதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

அரசு வினாத்தாள் பயன்படுத்த மாட்டோம்


தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளின் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் நந்தகுமாரிடம் பேசினோம். "முழு அடைப்பில் 90 சதவிகிதப் பள்ளிகள் பங்கேற்றன. முழு அடைப்பின் போது மாணவர்கள் பாதுகாப்புக் கருதித்தான் நாங்கள் விடுமுறை அளித்தோம். வெள்ளிக்கிழமை நடக்க வேண்டிய காலாண்டுத் தேர்வு சனிக்கிழமை நடக்கிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கு அரசு தரும் வினாத்தாள்கள்படி நாங்கள் தேர்வு நடத்துவதில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு நாங்கள் தயாரிக்கும் கேள்வித்தாளின்படிதான் தேர்வு நடத்துகின்றோம். அதே நேரத்தில் முழு ஆண்டு தேர்வின்போது அரசு தரும் வினாத்தாளின்படிதான் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை" என்றார்.


-கே.பாலசுப்பிரமணி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close