Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாராயணசாமிக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ ஜான்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியை முதலமைச்சராக அறிவித்தது கட்சி மேலிடம். தேர்தலில் போட்டியிடாதவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் எதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டுமென்பது விதி.

அதன்படி நாராயணசாமி நிற்பதற்கு வசதியாக தனது நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக் கொடுத்து அவருக்காக எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார் ஜான்குமார். அப்போது, “எம்எல்ஏ பதவியை நான் ராஜினாமா செய்வதற்காக பணம் பெற்றதாக எதிர்கட்சிகள் நிரூபித்தால் எனது சொத்துக்கள் முழுவதையும் எழுதி வைக்கிறேன் என பகிரங்க சவால் விடுகின்றேன். 100 கோடி வாங்கியதாக கூறுகிறார்கள்.  கோடிகளை பார்த்தவன் நான்” என்று பேட்டியளித்தார்.

 

அதோடு ராஜினாமா செய்த அன்றே நெல்லித்தோப்பு தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் நான்ஸ்டிக் தவாவும் கொடுத்தார். ஜான்குமார் பேட்டியைப் பார்த்த சென்னை வருமான வரித்துறை உஷாரானது. அன்றைய தினமே புதுச்சேரிக்கு வந்து நிலையை ஆராய்ந்து சென்றது. இந்நிலையில் இன்று மதில் 2.30 மணியளவில், நெல்லித்தோப்பு சவரிபடையாட்சி வீதியில் உள்ள அவரது வீட்டோடு சேர்ந்த அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த ஐந்து பேர்  கொண்ட வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

-ஜெ.முருகன்
படம்: ஏ.கே.தனம்

எடிட்டர் சாய்ஸ்