Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஜினீயர்களுக்குத் தண்ணி காட்டிய திருடன்..! கொள்ளையில் இது புதுசு (வீடியோ)

சென்னை கோடம்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இன்ஜினீயர்களிடம் லேப்-டாப், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோதும், இன்னொருவர் தூங்கிக் கொண்டிருந்தபோதும் இந்த கொள்ளை நடந்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம், வரதராஜபேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வருபவர் இர்ஷத்அமீன். இவரது நண்பர் விஸ்வநாதன். இவர்கள் இருவரும் இன்ஜினீயர்கள். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இதுதவிர இர்ஷ்த்அமீனின் மேலும் இரண்டு நண்பர்கள் அங்கு தங்கியிருந்தனர். இன்று இர்ஷத் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். விஸ்வநாதன், குளித்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது.

முன்பக்க ஹாலில் இவர்களது லேப்-டாப்கள் உள்ளிட்ட உடமைகள் இருந்தது. குளித்து விட்டு வெளியே வந்த விஸ்வநாதன், ஹாலில் இருந்த லேப்டாப் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதோடு பணம், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவைகளும் காணவில்லை. இதுகுறித்து இர்ஷத்அமீனிடம் அவர் சொல்ல, இருவரும் வீடு முழுவதும் தேடினர். பிறகு அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை பார்த்தனர். அப்போது நீல நிற சட்டை முழுக்கை அணிந்த கொள்ளையன், வரதராஜப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில், லேப் டாப் பேக்கை சத்தமின்றி கொள்ளையடித்துச் செல்லும் காட்சியைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து இர்ஷத்அமீன்  கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றார். அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி, லேப்-டாப் வாங்கிய பில்லைக் கொடுத்தால்தான் புகாரை பதிவு செய்ய முடியும் என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார்.

இதுகுறித்து இர்ஷத் அமீன் கூறுகையில், "எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம். விஸ்வநாதனுக்கு காரைக்குடி. நான் உள்பட 4 பேர் இங்கு மூன்று ஆண்டுகளாக இந்த குடியிருப்பில் 2வது மாடியில் வாடகைக்கு தங்கியுள்ளோம். இன்று காலையில் முன்பக்க கதவு திறந்திருந்தது. ஹாலில் இரண்டு லேப்-டாப்கள், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் மற்றும் நண்பர் ஒருவர் கொடுத்த பணம் ஆகியவை பேக்கில் இருந்தது. அதை வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் கொள்ளையடித்து விட்டு சென்று விட்டான். அவன் திருடிச்செல்லும் காட்சி சி.சி.டி.வி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. காலை 8.45 மணிக்கு உள்ளே வரும் மர்மநபர் 8.47 மணிக்கு வெளியே செல்கிறார். டிப்டாப்பாக உடை அணிந்து சர்வசாதாரணமாக அவர் நடந்து வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் குடியிருப்பில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் லேப்-டாப் வாங்கிய பில்லை போலீஸார் கேட்கின்றனர். பில் இல்லை என்றதும் புகாரை வாங்கவில்லை. அந்த லேப்-டாப்களில் அலுவலகம் தொடர்பான பல முக்கிய பைல்கள் இருக்கின்றன. பென்டிரைவ்வில் சில ப்ராஜெட் பைல்கள் இருக்கின்றன" என்றார்.

 

 

இந்த கொள்ளை சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்புகின்றன. குறிப்பாக லேப்-டாப்களையும், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க்கை திருடிய கொள்ளையன், வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் செல்போன்களை திருடாமல் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய பைல்கள் அந்த லேப்-டாப்களில் இருப்பதால் அதை கொள்ளையடிக்கும் நோக்கில் ஐடி துறையில் உள்ளவர்கள் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எஸ்.மகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ