Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"பகை வேண்டாம்... நீர் வேண்டும்!” - கர்நாடகாவிலிருந்து சில குரல்கள்

காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில், இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்." என்று மத்திய அரசின் பொறுப்பு உணர்வை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் தத்தமது மாநில கட்சிகளை கருத்திற்கொண்டு 'இரு மாநிலங்களும் பேசித் தீர்க்கவேண்டும்' என்று பட்டும்படாமல் பேசி ஒதுங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலச் செயலர் வி.ஜே.கே. நாயரிடம் பேசினோம்...

தற்போது கர்நாடகாவில் கலவர நிலவரம் எப்படி உள்ளது?

தமிழகத்தில் மாநில அளவில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டதால் இங்கும் பிரச்னை உருவாகலாம் என எண்ணினோம். ஆனால் நேற்று நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள்தான் இருந்தது.

'தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை' என்றே கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்லுங்கள் தண்ணீர் இல்லையா?

உண்மைதான், பருவமழை என்றார்கள், மேற்குத்தொடர்ச்சி மலைக்கு மட்டும் பெய்துவிட்டு நகர்ந்துவிட்டது. காவிரியின் பகுதிகளில் பொய்த்துவிட்டது. அதனால் ஹேமாவதியில் நீர் இல்லை. பெங்களூருவுக்கான அத்தனை நீரும் ஹேமாவதியிலிருந்துதான் வரவேண்டும். அந்த நகரத்திற்கே இங்கு குடிநீர் இல்லாத நிலையில் அதைத்தாண்டி தமிழகத்திற்கு எப்படி நீர் அனுப்பமுடியும்.

இந்த விஷயத்தை கையாளும் விதத்தில் யாரிடம் தவறு இருப்பதாகப் பார்க்கிறீர்கள்?

பிரதமர்  இரு மாநில முதல்வர்களிடமும் தொடர்புடைய நீர்வளத்துறை அலுவலர்களையும் அமரவைத்துப் பேசி இருக்கவேண்டும். இதை எதையுமே அவர் செய்யவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க அவரை எது தடுத்து நிறுத்துகிறது? ஜனநாயக நாடு என்று பெயரளவில் மட்டுமே இருக்கிறது. எங்களவில் குடிக்க நீர் இருந்தால்தானே பங்கீட்டுக்கொள்ள முடியும் என்பதே எங்கள் வாதம்.

காவிரி விவகாரத்தில், உங்களது தேசியக் கட்சி நடுநிலையாகத்தானே இருக்கிறது, அப்படியென்றால் அவர்கள் கருத்துடன் நீங்கள் வேறுபடுகிறீர்களா?

தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ நாங்கள் என்றைக்குமே வன்முறைக்குத் துணைபோனது இல்லை. இந்த பிரச்னை உருவெடுத்தபோது எங்கள் கட்சிதான் இரு மாநில விவசாய மக்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. அது மட்டுமல்ல.... 1990-ம் வருடம் இதே பிரச்னை பெரிதாக வெடித்தபோது கர்நாடகத்தில் தமிழர்களுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தது எங்கள் கட்சிதான். காவிரி நதி நீர்மீதான  நியாயமான உரிமையைத்தான் இங்குள்ள மக்கள் கோருகிறார்களே தவிர தமிழர்களை நாங்கள் யாரும் எதிரியாகப் பார்க்கவில்லை.

கர்நாடகாவின் மிகப்பெரும் விவசாய மாவட்டம் மாண்டியா. இங்குள்ள விவசாயிகளின் உண்மை நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இயற்கை வேளாண்மை செய்துவரும் பொறியியலாளர் மதுசந்தன் பேசுகையில், “தமிழகம் - கர்நாடகம் என இரு மாநிலங்களுக்குமே நீருக்கான தேவை இருக்கிறது. காரணம் இரு மாநிலங்களும் கரும்பு மற்றும் நெற்பயிர்களைத்தான் அதிகம் பயிரிடுகின்றன. இம்முறை வன்முறை ஏற்பட்டதற்கு காரணம் தமிழகத்துக்கு நீர் தரக்கூடாது என்பதற்காக அல்ல; எங்களுக்கு ஏன் நீர் தரவில்லை என்கிற கேள்வியைத்தான் விவசாயிகளான நாங்கள் முன்வைத்தோம். மாண்டியாவைச் சுற்றி மாற்றுக் கால்வாய்ப் பாசன முறைக்கான பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அதனால் அரசும் எங்களை இம்முறை பயிரிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது. கடந்த ஒன்றரை வருடங்களாக எங்களுக்கும் நீர் இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவிரியின் நீரைத் திறந்துவிடுவது தொடர்பான பேச்சு எழுந்தபோது வரும் நவம்பர் வரை தண்ணீர் திறந்துவிடப்படும் எனக் கூறினார்கள். இடையே உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடவேண்டும் எனக் கூறியது. பெரும்பாலான விவசாயிகள் கர்நாடக மாநிலமே முன்வந்துதான் இந்த செயலைச் செய்கிறது என தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதனால்தான், ஒன்றரை வருடங்களாக எங்களூக்குத் தண்ணீர் இல்லை என்று கூறிவிட்டு தமிழகத்துக்கு மட்டும் எப்படித் தண்ணீரைத் திறந்துவிடுகிறீர்கள் எனப் போராட்டம் வெடித்தது. இங்கு யாரும் தமிழக விவசாயிகளுக்கு எதிராக இயங்கவில்லை. நாங்கள் ஆளும் காங்கிரஸ் அரசைத்தான் கேள்வி கேட்டோம். ஆனால் அரசு அந்த கேள்வியை தமிழகத்துக்கு எதிராகத் திருப்பிவிட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிவதற்காக மாண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வான அம்பரீஷைத் தொடர்புகொண்டோம். எதிர்முனையிலோ, 'அவர் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் பேசமுடியாது' என்று லைனைத் துண்டித்துக்கொண்டனர்.

-ஐஷ்வர்யா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ