Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஆதரவற்றோர் இல்லங்களுக்குத்தான் நாங்க போகணும்!’- அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு

         

ழைய பென்ஷன் திட்டமே வழங்கப்படவேண்டும் என்று 13 ஆண்டுகளாகப் போராடி வரும் அரசு ஊழியர்கள், புதிய பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்தால் நாங்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்று வல்லுநர் குழுவிடம் அரசு ஊழியர்கள் கொந்தளித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில்,கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது. சென்ற வாரம் வியாழக்கிழமை   தலைமைச் செயலகத்தில்,தமிழக முதல்வர் அலுவலக சிறப்புப்பணி அலுவலர் சாந்த ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு  கூடியது. இதில்,தலைமைச் செயலகச் சங்கம் முதலாவதாகத் தங்களது கருத்தைப் பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்,தமிழ் நாடு அரசுப் பணியாளர் சங்கம்,தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்,தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம்,தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை,தமிழ் நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு,தமிழ் நாடு அரசு அலுவலர் கழகம், தமிழ் நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு,தமிழ் நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற  சங்கம் ஆகிய சங்கங்கள் வல்லுநர் குழு  முன்பு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தன.

இது தொடர்பாக அரசு ஊழியர்கள் அமைப்பினர் சிலரிடம் பேசினோம்.கொந்தளிப்போடும் வேதனையோடும் பேசிய அவர்கள்  நம்மிடம் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டினர்."அரசு வேலை என்ற பெருமிதத்தை எங்களிடம் இருந்து பிடுங்கிவிட்டனர். ஆன்மா இல்லாத உடலைப் போல நாள்தோறும் கடுமையான மன நெருக்கடியோடே வேலை  செய்து வருகிறோம்.வாழ் நாளின் துடிப்பான பருவங்களை அரசுக்கென செலவழித்துவிட்டு இறுதிக்கு காலங்களை ஓய்வூதியத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம். இதெல்லாம் போன தலைமுறையோடு போய்விட்டது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பழைய பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டு,புதிய பென்ஷன்  திட்டம் கொண்டுவரப்பட்டது. இது கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு வேலையில் புதியதாகச் சேருபவர்களுக்குப் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மனநெருக்கடி மற்றும்  நிதி நெருக்கடியைத் தந்து வருகிறது. இதனை அடுத்து கடந்த 13 ஆண்டுகளாக தமிழக அரசிடம் புதிய பென்சன் திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறோம்.

எங்களது கோரிக்கைகளை  ஏற்றது தமிழக அரசு.அதனையடுத்துக் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல்வர் வெளியிட்ட 110வது விதியின் கீழான அறிவிப்பில், ''அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும்'' என்று அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இப்போது, முதல்வர் அலுவலக சிறப்புப்பணி அலுவலர் சாந்த ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு  கூடி எங்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரவேண்டும் என்று குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக  ஆதரவற்றோர் இல்லங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்றும் வேதனையை வெளிப்படுத்தினோம்." என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், "பெற்ற குழந்தையைத் தாயே கையைப் பிடித்து அழைத்துச் சென்று தெருவில் தொலைத்ததைப் போல அரசு எங்களை வைத்துள்ளது.இதுதான் நிதர்சனமான உண்மை. அரசு அமைப்புச் சட்டத்திலேயே அரசாங்க ஊழியர்களுக்கு  உரிய பாதுகாப்பு கொடுக்க வழிவகை செய்துள்ளது.ஆனால் இதனை அரசே இப்போது மீறுகிறது. இதில் காட்சிகள் வேறுபாடு இல்லை.எல்லா அரசாங்கமும் கடனில்தான் தங்களின் இயக்கத்தைத் தொடருகின்றன. ஆனால் அதற்காக பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யாமல் அரசு ஊழியர்கள் வயிற்றில் அடித்தால் அரசின் கடன் தீருமா,நிதி நெருக்கடி விலகுமா என்றால் இல்லையே.

அரசு ஊழியர்களின் வாழ்க்கை நிரந்தரமானது இல்லை.ஓய்வுக்குப் பிறகு யாருமே அரசு ஊழியர்களைக் காப்பாற்ற மாட்டார்கள்.அதனால் அது மீண்டும் சுமையாக அரசுக்கே வந்து சேரும்.ஓய்வுக்குப்பிறகு அரசு ஆதரவற்றோர் இல்லங்கள் அமைக்கும்  நிலை ஏற்படும்.அது அரசுக்கு கூடுதல் செலவுதானே. அதனால் இப்போதே அரசு முன் எச்சரிக்கையோடு செயல்பட்டு  பழைய பென்சன் திட்டத்தையே அமலுக்கு கொண்டுவரவேண்டும்" என்று தெரிவித்தனர்.

-சி.தேவராஜன்
                                 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ