Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி படுகொலையும் ராம்குமார் மரணமும்!   -பா.ஜ.க 'கருப்பு' முருகானந்தம் பேட்டி 

சுவாதி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் சிறைக்குள் இறந்துவிட்டார். ' தொடக்கம் முதலே வழக்கில் தொடர்புடையவராகச் சொல்லப்படும் பா.ஜ.க பிரமுகர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் போலீஸ் இறங்கியுள்ளது' என்கின்றனர் ராம்குமார் தரப்பில். 

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில், செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சுவாதி வழக்கு தொடர்பாக அதிரடியாக சில தகவல்களை வெளியிட்டு வந்தார் ஃபேஸ்புக் பதிவாளர் தமிழச்சி. சிறையில் ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து, நேற்று இரவு அவருடைய பதிவில், ' சுவாதி படுகொலை விசாரணையில் இன்னும் பல கொலைகள் தொடரும். அது ராம்குமாரோடு முடியாது' என்று தலைப்பிட்டு, தொடர்ந்து, ' சுவாதி படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வீடியோவில் பதிவான ஒரு மர்ம நபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதற்கு பிறகே இன்னொரு வீடியோவில் ராம்குமார் நடந்து செல்வதாக கூறி மற்றொரு வீடியோ காட்சியை காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது. முதலில் காட்டிய மர்ம நபர் யார்? அவர் குறித்து தமிழக காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. 

இரண்டு காட்சியில் இருப்பவர்களும் ராம்குமார் தான் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள். ஆனால், முதல் காட்சியில் உள்ள மர்ம நபரை காப்பாற்றத்தான் அரசு அதிகார அமைப்புகள் ராம்குமாரை குற்றவாளியாக்க முற்பட்டது. அவர் கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படையைச் சேர்ந்தவர். அவருடைய உயிருக்கும் ஆபத்து இருக்கிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். வழக்கின் தொடக்கத்தில் இருந்தே, திலீபன் மகேந்திரன் என்பவரும், கருப்பு முருகானந்தத்திற்கு எதிராக செய்திகளை பதிவிட்டு வந்தார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. ' சுவாதி குடும்பத்தினருடன் சேர்ந்து பா.ஜ.கவின் கருப்பு முருகானந்தம் கொலைச் சதியில் ஈடுபட்டார்' என்றுதான் தமிழச்சியில் பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர் குறிப்பிடும் கருப்பு முருகானந்தம், தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார். 

' உங்களை குறிவைத்து சுவாதி கொலை வழக்கின் மர்மங்கள் பேசப்படுவது ஏன்?' என்ற கேள்வியை, முருகானந்தத்திடமே முன்வைத்தோம். " சுவாதி யார் என்று எனக்குத் தெரியாது. அவர் அப்பா யாரென்றும் நான் பார்த்தது இல்லை. 'அவர் அப்பாவோடு சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தேன்' என்று தகவல் பரப்புகிறார்கள். என்னைத் தொடர்புபடுத்திப் பேசுவதற்கு முன்பு குறைந்தபட்ச ஆதாரத்தையாவது அவர்கள் காட்டட்டும். யார் என்றே தெரியாத ஒரு நபரை கற்பனையாகவே உருவாக்குகிறார்கள். இந்த வழக்கில், ' சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று நானே மனுதாக்கல் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

அவர் அப்பா விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஏதோ ஒரு பெண்மணி எங்கேயோ உட்கார்ந்து கொண்டு, ஃபேஸ்புக்கில் என்னைப் பற்றி அவதூறாக எழுதிக் கொண்டிருக்கிறார். அதை சிலர் எடுத்து வைத்துக் கொண்டு பேசி வருகிறார்கள். எனக்கு அதுதான் வேலையா? மதம் மாறுகிறவர்களை எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்றால், நாட்டில் எத்தனை பேரைக் கொல்வது? எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பா.ஜ.கவில் துடிப்போடு செயல்படுபவர்கள் யார் என்பதை பார்த்து வைத்துக் கொண்டு, விமர்சனம் செய்கிறார்கள். 

எனக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவுகளைப் போட்ட, திலீபன் யார் என்பதை விசாரித்தபோது, நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவரைத் தாக்கினார்கள் என்றால், காயம் இருக்க வேண்டாமா? காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியதுதானே? தமிழச்சி என்பவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்; பிரான்சில் இருக்கிறார் என்கிறார்கள். என்னை மட்டும் இவர்கள் மையப்படுத்தி பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இதை பா.ஜ.கவுக்கு எதிராகக் கொண்டு செல்லும் முயற்சியாகவே பார்க்கிறேன். கட்சி வேலை பார்க்கவே எங்களுக்கு நேரமில்லை.

சுவாதி என்ற பெண் மதம் மாறினாரா இல்லையா என்பதுகூட எனக்குத் தெரியாது. ஒரு பெண்ணை பொது இடத்தில் கொல்வது என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒரு செயல். அப்படித்தான் நானும் அதிர்ச்சியடைந்தேன். ஜெயிலில் ராம்குமார் செத்துப் போனதுக்குக்கூட நான்தான் காரணம் என்றுகூட சொல்வார்கள். அவரை சிறைக்குள் கொல்லக் கூடிய அளவுக்கு நான் பெரிய ஆளா? ஆளுங்கட்சி அமைச்சர்களால்கூட இப்படிச் செய்ய முடியாது. நான் கஞ்சா விற்பனை செய்பவன் என்றெல்லாம் எழுதுகிறார்கள். அரசியலில் ஆயிரம் சொல்வார்கள். எனக்கு எதிராக ஆதாரம் இருந்தால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும்" என்றார் கொந்தளிப்போடு. 

-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ