Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புழல் சிறையும் ராம்குமார் 'தற்கொலை'யும்!- புதிரை உடைக்கும் முன்னாள் விசாரணைக் கைதி!

சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் மர்ம மரணம் பல்வேறு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளது. 90 நாட்களுக்குள் கொலைவழக்கில் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையெனில் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் தரவேண்டியது சட்டப்படியான சலுகை. சொந்த ஊரில் கைதானதிலிருந்து சிறையிலேயே அடைபட்டிருந்த ராம்குமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.

'இது தற்கொலை அல்ல; கொலை' என்கிறது மனித உரிமை அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள்.
இந்நிலையில் சிறையில் ஒரு கைதி மின் ஒயரை கடித்து இறக்கும்படியாக பாதுகாப்பு ஓட்டைகள் உள்ளதுதானா தமிழக சிறைகள் என பலரிடம் விசாரித்தோம். கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிய லெனினிய பிரிவு மாநிலக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு மக்கள் விடுதலை அமைப்பின்  சென்னை பொறுப்பாளருமான சதீஷ்குமார் கட்சி முன்னெடுத்த போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். பல வருடங்கள் புழல் சிறையில் விசாரணைக்கைதியாக அடைபட்டிருந்தவர். அவரிடம் பேசினோம்.

“எங்கள் அமைப்பின் சார்பான பல போராட்டங்களில் பங்கெடுத்து விசாரணைக்கைதியாக புழலில் அடைபட்டிருந்த அனுபவம் எனக்கு உண்டு. இந்திய அளவில் குறிப்பிடத்தக்க பிரத்யேக பாதுகாப்பு அம்சங்களுடனான கட்டமைப்பு கொண்டது புழல் சிறை. மற்ற மத்திய சிறைகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. புழல் சிறை வளாகத்தில் விசாரணைக்கைதிகள், தண்டனை பெற்றவர்கள் மற்றும் பெண்கள் சிறை என 3 வித தனித்தனி சிறைகள் உண்டு. மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள், தனித்தனி நிர்வாகம் என செயல்படுகிறது.

இதில் விசாரணை சிறையில்தான் உயர்பாதுகாப்பு தொகுதியில் ராம்குமார் அடைபட்டிருந்தார். இதிலும் 2 பிரிவு உண்டு. ஒன்றில் நக்ஸலைட்டுகள், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்,எல்டிடிஇ, தமிழ்த்தீவிரவாதிகள் மற்றும் அல் உமா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டிருப்பார்கள். இன்னொன்றில் சிறையில் ஏற்கனவே தண்டனை பெற்றவர்களில் அச்சமூட்டக்கூடிய, அடிக்கடி பிரச்னை எழுப்புபவர்கள், அச்சுறுத்தல் உள்ள நபர்களை அடைத்துவைப்பார்கள்.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இரண்டுக்கும் ஒரேவிதமான கட்டமைப்புதான். உயர் பாதுகாப்பு தொகுதிக்கு டெபுடி வார்டன் பொறுப்பாவார். அங்குள்ள ஒவ்வொரு பிளாக்குக்கும் 3 முதல் 4 காவலர்கள் வரை பாரா பார்ப்பார்கள். 24 மணிநேரமும் இது நடக்கும். பொதுவாக மற்ற பிளாக்குகளுக்கு வார்டனும் ஹெட் வார்டனும் பொறுப்பாக இருப்பர். ஆனால் உயர் பாதுகாப்பு தொகுதிகளுக்கு ஹெட் வார்டனுக்கு மேல் அசிஸ்டென்ட் ஜெயிலர், டெபுடி ஜெயிலர்,  இவர்களுக்கு மேல் ஜெயிலர் இருப்பார்.
ராம்குமார் சமயலறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சொன்ன காவல்துறை, சிறை டிஸ்பென்சரியில் தற்கொலை செய்ய முயன்றதாக இப்போது  மாற்றிச் சொல்கிறது. இரண்டுமே நம்புவதற்கு இல்லை.

காரணம் ராம்குமார் தங்கியிருந்த உயர் பாதுகாப்பு தொகுதியிலிருந்து ஒருவன் வெளியே பொதுவான  கைதிகள் புழங்கும் இடத்திற்கு வர 11 கதவுகளை தாண்டி வரவேண்டும். அது அத்தனை எளிதானதல்ல. அதிகாரிகள் அனுமதியின்றி யாரும் இதை கடந்துவிடமுடியாது. அதுமட்டுமின்றி ராம்குமார் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக சொல்லப்பட்ட சமயலறைக்கே 3 கதவுகள் உண்டு.

இத்தனையையும் மீறி ஒரு கைதி சாதாரணமாக வெளியே வந்துவிடமுடியாது. இதுதான் உண்மை. உயர்பாதுகாப்பு தொகுதியில் உள்ள கைதிகளுக்கான உணவைக்கூட தள்ளுவண்டியில் கொண்டுவந்து அவர்கள் இருக்கும் இடத்திலேயே கொடுத்துவிட்டுச் செல்வர். இப்படி உயர் பாதுகாப்பு தொகுதியில் உள்ள ஒரு கைதி எந்த காரணத்திற்காகவும் பிளாக்கிலிருந்து வர அவசியமே இருக்காது. மற்ற கைதிகளுடன் இவர்கள் எந்த தொடர்பும் கொள்ளமுடியாது. அப்படி ஒரு பலத்த கண்காணிப்பும், பாதுகாப்பும் அங்கு உண்டு. சிறைவளாகத்திற்குள் கைதிகளின் தற்கொலைகளை தடுக்க 2007 ம் ஆண்டு வரை மின்விசிறியைக் கூட அரசு தடை செய்திருந்தது.

சிறைவிதிப்படி ஒரு கைதி தான் உடுத்தும் உடையைத் தவிர வேறு எதையும் உள்ளே கொண்டுபோக முடியாது. எச்சரிக்கை உணர்வில் பல்பு கூட அறைக் கதவின் வெளிப்பக்கத்தில்தான் பொருத்தப்பட்டிருக்கும். மின்விசிறி வந்தபின்னும் அதை எளிதாக எட்டிவிடமுடியாதபடி அத்தனை உயரத்திற்கு அமைத்து அரசு நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் சர்வசாதாரணமாக இதை தற்கொலை என்கிறது காவல்துறை.

இத்தனை பாதுகாப்புகளை மீறி சமயலறைக்கே போகமுடியாதபோது மருத்துவமனைக்குள் ராம்குமாரால் கண்டிப்பாக வந்திருக்கமுடியாது. 11 கதவுகளை தாண்டி வந்தாரென்றால் அது டெபுடி ஜெயிலரின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் அனுமதி பெற்று வந்தார் என்றாலும் வெளிநோயாளி என்பதால் அவருடன் கண்டிப்பாக ஒரு காவலரையும் அனுப்பிவைத்திருப்பார்கள். அவர் மின் ஒயரை மேல் ஏறி இழுத்து வாயில் வைக்கும் வரை காவலர் என்ன செய்துகொண்டிருந்தார். அஜாக்கிரதையா இருந்தாரா?...

அனுமதியுடன் மருத்துவமனைக்கு வந்தார் என்றால் அவருக்கு என்ன நோய் இருந்தது. அது லெட்ஜரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?.... இப்படி ஆயிரம் கேள்விகள் இந்த மரணத்தில் உண்டு. இப்படி ராம்குமார் தனிப்பட்ட முறையில் தாமாக தம் பிளாக்கில் இருந்து வெளியேறி எந்த இடத்திற்கும்  வந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டிருக்க முடியாது. அதிகாரிகள் அனுமதியின்றி அது சாத்தியம் இல்லை” என்றார் சதீஷ்.

காவல்துறை என்ன பதில் வைத்திருக்கிறது?

- எஸ்.கிருபாகரன் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ