Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம்..! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்தில் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை 6 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

50 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களும் காவிரி மேற்பார்வை குழுவை அணுகலாம் என்றும் கூறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்றதால், இடைக்கால உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி கர்நாடக அரசின் சார்பில் 11ஆம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 12ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், காவிரி மேற்பார்வை குழு தலைவர் சஷி சேகர் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில் நுட்ப குழு துணைத் தலைவர் ராம்குமார் ஆகியோரும், கர்நாடக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ், நீர்பாசனத்துறை செயலாளர் ராகேஷ் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர். புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதாவும் மற்றும் கேரளா அரசின் அதிகாரிகளும், மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஷி சேகர், காவிரி மேற்பார்வை குழுவின் தலைவர் என்ற முறையில், கர்நாடகம் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.. 

இந்த நிலையில், காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறந்துவிட அணைகளில் நீர் இருப்பு இல்லை. குடிநீர், பாசனத்துக்கே கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. மாதம் தோறும் எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் இல்லை. தீர்ப்பில் தெளிவாக இல்லாத போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், தமிழகத்திற்கு திறக்க வேண்டிய அளவுக்கு கர்நாடக அணைகளில் நீர் உள்ளது. தமிழகத்திற்குரிய நீரை திறக்கவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அணைகளில் நீர் இல்லை என கர்நாடகா கூறுவது பொய்" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் உடனே அமைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, காவிரி மேற்பார்வை குழுவை இரு மாநிலங்களும் எதிர்ப்பதால் காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்தில் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நாளை முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை 6 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும்
உத்தரவு தொடர்பாக எதிர்ப்பு இருந்தால் காவிரி மேற்பார்வை குழுவை அணுகலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ