Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு வாக்காளர்; ஒன்பது ஓட்டு..! கலவரமாகும் உள்ளாட்சி நிலவரம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்பு மற்றும் திருத்தம், போலி வாக்காளர்களை நீக்க உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.  இந்நிலையில் தேர்தல் ஆணையம், செப்டம்பர் 1ல் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றம் சாட்டியதோடு அதை ஆதாரத்துடன் நிரூபித்து காட்டியிருக்கிறது.

இது குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஜெய்கணேஷ் கூறுகையில், "ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக அரசியல் கட்சிகள் தொடங்கி மக்களும் குற்றம் சாட்டுவதுண்டு. தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற காரணத்துக்காக ஓட்டு உரிமையை பறிக்கொடுத்தவர்களும் உண்டு. இப்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஒரே பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் அதை நீக்க பிரத்தேயக சாப்ட்வேர்களும் இருக்கின்றன. ஆனால் இன்றும் ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் இடம் பெறுவது வாடிக்கையாக உள்ளது. இறந்தவர்கள் கூட இன்னும் வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருக்கின்றனர்.

இதனால் எங்கள் அமைப்பை சேர்ந்த ஒரு குழு தமிழகத்திலேயே பெரிய தொகுதியான சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் களமிறங்கினோம். அந்த தொகுதியில் உள்ள துரைப்பாக்கம் பகுதியான 193வது வார்டில் நான், செந்தில் ஆறுமுகம், சத்யசீலன், சலீம், நாராயணன், சண்முகம், மணிவாசகம் ஆகியோர் சரிப்பார்ப்பில் ஈடுபட்டோம். ஆனந்தா நகர், எம்.சி.என் நகர், அறிஞர் அண்ணா நகர், சாய் நகர், மகாத்மாகாந்தி நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ததில் ஒரே பெயர், முகவரி, வயது, பாலினம் கொண்ட வாக்காளர் பல இடங்களில் இடம்பிடித்தது கண்டுபிடித்தோம். உதாரணத்துக்கு வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 224ல் வரிசை எண் 237ல் பழனியின் மனைவி யசோதா என்ற பெயர் வரிசை எண் 248ல் உள்ளது. அவரது வயது, முகவரி எல்லாம் ஒன்றாக இருக்கிறது. யசோதா பெயருக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளன. நீலாங்கரை அண்ணாநகர் 8வது தெருவில் பாகம் எண் 224ல் வரிசை எண் 393, 1204ல் வாசுதேவன் பெயரும், 530,532ல் ராமு பெயரும், 537,538ல் சுப்பிரமணியம் பெயரும், 539,540ல் காயத்ரி பெயரும், 467,504ல் மகேஸ்வரி பெயரும் இரண்டு இடங்களில் இடம்பிடித்துள்ளன. 

கடந்த ஒருவாரமாக நடத்திய ஆய்வில் 100க்கும் மேற்பட்டவர்களின் பெயர் இதுபோல பலமுறை வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் ஆய்வு செய்தால் எத்தனை வாக்காளர்களுக்கு பல இடங்களில் தேர்தல் ஆணையம் வாய்ப்பு கொடுத்துள்ளது தெரியவரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே வாக்காளரே பலமுறை வாக்களிக்கலாம். இதுபோன்ற குளறுபடிகளால் தேர்தலை எப்படி நியாயமாக நடத்த முடியும். அதிகாரிகள் இதுபோன்ற குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்" என்றார் சமூக அக்கறையுடன். 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வட்டாரத்தில் விசாரித்தால், "போலி வாக்காளர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கத்தில் குறிப்பிட்ட ஒரே பெயர் பல இடங்களில் இடம் பிடித்திருப்பது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. அதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஒரே பெயர் பல இடங்களில் வருவதற்கு வாக்காளர்கள் ஆன்லைனிலும், நேரில் விண்ணப்பித்து இருப்பார்கள். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்து இருக்க வேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறே இதுபோன்ற குளறுபடிக்கு காரணம் " என்றனர். 

இந்த வாக்காளர் பட்டியல்தான் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ