Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அப்துல் கலாம் ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமா?’  -பொன்ராஜ்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரைப் பயன்படுத்த, அவரது ஆலோசகர் பொன்ராஜின் கட்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேற்று நீக்கிவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ' ஒரு குடும்பத்திற்குள் கலாமின் சிந்தனைகள் அடைபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது' எனக் கொந்தளிக்கிறார் பொன்ராஜ். 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் வெ.பொன்ராஜ். ' அப்துல் கலாம் எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவர். அரசியல் காரணங்களுக்காக அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்துதை தடை செய்ய வேண்டும்' என கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து கலாமின் பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது உயர் நீதிமன்றம். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ' கலாம் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது' என்று கூறி, தடை நீக்கப்பட்டுவிட்டது.

" நேற்று இரவுதான் இப்படியொரு உத்தரவு வந்த தகவலை என்னிடம் தெரிவித்தார் வழக்கறிஞர் குமார். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், மிகச் சிறந்த கல்வியாளராக இருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய சிந்தனைகளை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் யாரும் உருவாகவில்லை. அதேபோல்தான், கலாமின் சிந்தனைகளையும் ஒரு குடும்பத்திற்குள் அடக்கிவிட முடியாது" என கொந்தளிப்போடு நம்மிடம் பேசினார் பொன்ராஜ். 

தொடர்ந்து, " எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைத்திருக்கிறது. அப்துல் கலாம் என்பவர் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல. நாட்டின் எதிர்காலத் தேவைகளுக்குத் தீர்வைச் சொன்னவர். நான் அந்தக் கட்சியை ஆரம்பிக்கவில்லை. இளைஞர்களாக சேர்ந்து தொடங்கிய கட்சி. நான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன். அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தவர். மூன்று பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு தீர்வைக் கொடுத்தவர். எரிசக்தி சுதந்திரத்தைப் பெற்ற நாடாக இந்தியா உருவாக வேண்டும் எனப் பாடுபட்டவர். நதி நீர் இணைப்பு, நீர்வழிச் சாலை என தண்ணீர் பிரச்னைகளுக்குத் தீர்வைச் சொன்னவர். அவரை எப்படி ஒரு குடும்பத்திற்குள் முடக்க முடியும்?

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவருடைய பாதையில் பயணிக்கத் துடிக்கிறார்கள். அந்தப் பணியை நான் மேற்கொள்ளாவிட்டால், அவருடன் நான் இருபது வருடம் இருந்தும் என்ன பயன்? நேற்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. இதுவரையில் இப்படிப்பட்ட கனவை நான் காணவில்லை. ஒரு வருடமாக அவர் என் கனவில் வரவில்லை. இதைச் சொன்னால் கேலியும் கிண்டலும் செய்வார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் அந்த கனவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால் சொல்கிறேன். 

நேற்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்று எனக்குத் தெரியாது. என்னுடைய கனவில், எங்கள் ஊரான விருதுநகருக்கு கலாம் சார் வருகிறார். அவரை ஒரு கூட்டத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் என்னிடம், ' மக்களோடு பழகு; அவர்களோடு இரு;  அவர்களுக்காக உழை' என்றார். இந்தக் கனவு ஏன் வந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதை கலாம் சாரின் ஆசியாகவே எடுத்துக் கொண்டேன். நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க இருக்கிறோம். கலாமின் கனவுகளை நனவாக்கும் வகையில், கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளைத் தொடங்க இருக்கிறோம்" என்றார் பொன்ராஜ். 

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்