Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரியின் சொச்ச நீரில் வெள்ளாமை வீடு சேருமா? அல்லாட்டத்தில் விவசாயிகள்

காவிரியில் இருந்து ஜூன் 12-ம் தேதி திறக்கவேண்டிய தண்ணீரை கர்வம் பிடித்த கர்நாடக அரசு திறக்காமல் போனதால் குறுவைச் சாகுபடி பொய்த்துப்போனது. தமிழக அரசு சார்பில் கடிதம்... தலைவர்கள் அறிக்கை...  விவசாயிகள் கண்ணீர்... உச்ச நீதிமன்றம் உத்தரவு என்று பலகட்ட போராட்டத்துக்குப் பிறகு கடந்த 6-ம் தேதி மாலை கனத்த இதயத்தோடு தண்ணீரைத் திறந்துவிடுவதாக அறிவித்தது கர்நாடக அரசு.

மேட்டூர் அணையின் நிலை என்ன?

கர்நாடகத்தில் இருந்து வரவேண்டிய தண்ணீர் காலதாமதமாகத் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லை. 90 அடியாக உயர்ந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால், சம்பாவுக்கான காலம் கடந்துவிட்டதால் இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று நீர்மட்டம் 87 அடியாக இருக்கும் நிலையிலேயே தண்ணீரை, தமிழக அரசு திறந்துவிட்டுள்ளது. நொடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனவசதி பெறும்.

தண்ணீரைத் திறந்துவிட்டதற்காக கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில தினங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இரு மாநிலங்களுக்கு இடையே தற்போது கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. இதனால் திறந்துவிட்ட தண்ணீரையும் கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை தமிழக அரசு திறந்துவிட்டுள்ளது. தற்போது  திறக்கப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர், விவசாயத்துக்குப் போதுமா என தமிழக விவசாயச் சங்க பிரதிநிதிகளிடம் கேட்டோம்.

‘‘80 நாட்களுக்கு தண்ணீர் தேவை!’’

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் சாமி நடராஜன், ‘‘தற்போது திறந்து  விடப்பட்டுள்ள தண்ணீரை ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிட்டிருந்தால் சம்பாவுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும். இப்போது திறந்துவிடப்பட்டிருக்கும் தண்ணீரால் முழுமையான விவசாயம்  நடைபெறாது. உதாரணமாக, நீண்டகால பயிரைவைத்தால் மழைக்காலத்தில் சிக்கிக்கொள்ளும். அதனால், நாம் குறுகியகாலப் பயிரைவைக்க  வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இன்னும் 80 நாட்களுக்கு தண்ணீர் அதிகமாகத் தேவைபடுகிறது.  திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வந்துசேர எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. சுமார் 32  பெரிய ஆறுகள், 22 கிளை கால்வாய்கள் உள்ளன. இவை, எல்லாம் சரியாகத் தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது நடவுப்பணி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் இப்போதுதான் நாற்றுவிடத் தொடங்கி உள்ளார்கள். ஒரு மாத பயிராக இருக்கும்போது சரியாக வடகிழக்குப் பருவமழை வேறு தொடங்கும். இதனால் பயிர், மழையில் சிக்க வாய்ப்புள்ளது. இப்படிப் பல பிரச்னைகள் உள்ளன’’ என்றார்.

‘‘வீடுவந்து சேருமா சம்பா?’’

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ‘‘இயற்கையும் இறைவனும் மனதுவைத்தால் மட்டுமே சம்பா வெள்ளாமை வீடுவந்து சேரும். கர்நாடக அரசு  தண்ணீர் திறந்துவிடாத காரணத்தால், கடந்த 5 ஆண்டுகளில் குறுவைச் சாகுபடியில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை ஆகஸ்ட் 15-ம் தேதியாவது திறந்துவிட்டிருந்தால் சரியான முறையில் சம்பா சாகுபடி நடந்திருக்கும். இதுவும் காலதாமதமாகத் திறக்கப்பட்டு உள்ளதால், சிறப்பான சாகுபடி என்பது இயற்கைதான் முடிவு செய்யும்’’ என்கிறார்.

‘‘கர்நாடக அரசை கலைக்க வேண்டும்!’’

தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் நல்லுசாமி, ‘‘காலிங்கராயன் அணையில் தண்ணீர்  திறக்கப்பட்டபோது விவசாயிகள் சேடை பாய்ச்சி நடவுப் பணியைத் தொடங்கி இருந்தார்கள். தண்ணீர் வற்றிப்போனது. அதனால் நிலம் காய்ந்துகிடக்கிறது. விவசாயிகளுக்கு ஏகப்பட்ட நஷ்டம். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட தண்ணீரால், சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுவிடுமா என்கிற பயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதில், தமிழக அரசும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். சரியான நேரத்தில்  காவிரி நீரைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே டெல்டா விவாயிகள்  கரையேறுவார்கள். காவிரி நீரைப் பெறுவதில் எந்தச் சமாதானமும் செய்துகொள்ளக் கூடாது. கிருஷ்ணராஜர் சாகர் அணைக்கு வருகிற தண்ணீரில் தமிழகத்தின் உரிமை என்ன என்பதை முதலில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். அதற்கான வாதத்தை நமது வழக்கறிஞர்கள் எடுத்துவைக்க வேண்டும். கே.ஆர்.எஸ் அணையில் தணணீர் தேக்கிவைப்பதை கர்நாடக அரசு கைவிட வேண்டும். தமிழக விவசாயிகளின்  நிலைமையை அவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு கர்நாடக அரசுதான்  காரணம். எனவே, இனிமேலும் தண்ணீர் திறந்துவிடுவதில் பிடிவாதமாக இருந்தால்... கர்நாடக அரசைக் கலைப்பதில் மத்திய அரசு தயங்கக் கூடாது’’ என்றார்.

‘‘குறுவைச் சாகுபடிதான் பொய்த்துவிட்டது. சம்பாவாவது நன்றாகச் சாகுபடியாகுமா’’ என்று குரல் எழுப்புகின்றனர் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள்.

- கே.புவனேஸ்வரி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ