Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விஜயகாந்த் திட்டினார்... கலைஞர் வருடிக் கொடுத்தார்!'  - மாஜி தே.மு.தி.கவின் பரவசம்

தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ பால அருள்செல்வம், நேற்று இரவு தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்துவிட்டார். ' ஒரு முன்னாள் எம்.எல்.ஏ என்றுகூட பார்க்காமல் திட்டினார் விஜயகாந்த். மனவருத்தத்தில் இருந்த எங்களை அரவணைத்துக் கொண்டார் மு.க.ஸ்டாலின்' என நெகிழ்கிறார் அருள்செல்வம். 

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அலசுவதற்காக, நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் வந்திருந்தனர். கூட்டத்தை தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பேசிய மாவட்ட செயலாளர்கள், ' உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலைவிட படுதோல்வியை சந்திப்பதைவிடவும், உள்ளாட்சியில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது. அப்படியே போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும், தேர்தல் செலவுகளை கட்சித் தலைமைதான் ஏற்றுக் கொள்ள வேண்டும்' எனப் பேசியுள்ளனர். நிர்வாகிகளின் பேச்சு குறித்து விஜயகாந்த்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் நிர்வாகி ஒருவர்.

அப்போது அரங்கிற்குள் நுழைந்த விஜயகாந்த், ' தேர்தலில் போட்டியிடக் கூடாது எனச் சொல்லும் கட்சி நிர்வாகிகள் யாரும் எனக்குத் தேவையில்லை. அவர்கள் தாராளமாக கட்சியை விட்டுச் செல்லட்டும்' எனக் கொந்தளித்தார். ' கட்சித் தலைவரே சொல்லிவிட்ட பிறகு இங்கே நமக்கென்ன வேலை?' என முடிவெடுத்துவிட்டு, வெளியில் வந்த நாகை மாவட்ட செயலாளர் அருள்செல்வம், தஞ்சை தெற்கு மா.செ ஜெயப்பிரகாஷ், தஞ்சை வடக்கு மா.செ பரமசிவம் உள்ளிட்டவர்கள், தி.மு.க கூடாரத்தில் ஐக்கியமாகிவிட்டனர்.

' ஒரேநாளில் தி.மு.கவிற்குச் செல்லும் முடிவு ஏன் ஏற்பட்டது?' என்ற கேள்வியை ஏ.ஆர்.பால அருள்செல்வத்திடம் கேட்டோம். 

" சட்டமன்றத் தேர்தலின்போது, ' தி.மு.க அணியில் சேர வேண்டும்' என விஜயகாந்திடம் வலியுறுத்தினோம். எங்கள் கருத்துக்களை கேட்டுக் கொண்டவர், எங்களை ஆலோசிக்காமலேயே, 'மக்கள் நலக் கூட்டணி' என்று அறிவித்தார். இருந்தாலும், தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நானும் போட்டியிட்டேன். தொடர்ந்து கட்சியில் செயல்பட்டு வந்தேன். நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் நான் பேசும்போது, ' கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என ஜி.கே.வாசன், தி.மு.க பொருளாளரை சந்தித்துப் பேசுகிறார். ஆனால், யாரைப் பற்றியும் சிந்திக்காமல், 'தனியாக நிற்பேன்' என்கிறார் கேப்டன். இதனால் எவ்வளவு தொண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியுமா? கூட்டணி பற்றி முடிவெடுக்கச் சொல்லுங்கள்' என்றேன். 

கூட்டத்தில், நான் பேசிய விஷயத்தை யாரோ கேப்டனிடம் சொல்லிவிட்டார்கள். அரங்குக்குள் வந்த விஜயகாந்த், ' நான் தனியாகத்தான் நிற்கப் போறேன். கூட்டணி எல்லாம் தேவையில்லை' என்றவர், பார்த்தசாரதியைக் கூப்பிட்டு, ' அருள் செல்வம் உள்பட இரண்டு மாவட்ட செயலாளர்களை பேச அனுமதிக்காதீர்கள். கூட்டணி வேண்டும் என்று சொல்பவர்கள் கிளம்பலாம்' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். அதன்பிறகு என்னைப் பேச அனுமதிக்கவில்லை. இதற்கு மேலும் இந்தக் கட்சியில் நீடிக்க வேண்டுமா என முடிவெடுத்தோம். அங்கிருந்து வெளியில் வந்ததும், தி.மு.க பொருளாளர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கேட்டோம்". 

சில மணிநேரங்களில் இப்படியொரு முடிவை எடுக்க, இதுமட்டும்தான் காரணமா? 

" உண்மையில் இதுமட்டும்தான் காரணம். வாசனைப் போல் கட்சித் தொண்டர்களை காப்பாற்றும் எண்ணத்தில் விஜயகாந்த் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை அவர் தேர்வு செய்தார். ' மக்கள் தன்னை நம்பி ஓட்டுப் போடுவார்கள்' என நம்பினார். அந்த நம்பிக்கையில் தவறு இல்லை. ஆனால், மக்கள் ஆதரவை இந்தக் கூட்டணி பெறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் இணைந்து தே.மு.தி.க போட்டியிட்டது. அப்போது எங்களோடு ம.தி.மு.கவும் இருந்தது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் வீசிய மோடி அலையால், 19 சதவீத வாக்குகளைப் பெற முடிந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில், ' விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்' என்று சொல்லிக் கொண்டு போட்டியிட்டதால், மூன்று சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அப்படியானால், விஜயகாந்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். இதன்பிறகும் நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், நாங்கள் என்னதான் செய்ய முடியும்?" 

தொண்டர்கள் என்றால் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். 'தலைவர் திட்டினார்' என்பதற்காக கட்சி மாறுவது சரிதானா? 

" மனம் நொந்துபோய்த்தான் இப்படியொரு முடிவை எடுத்தோம். தொண்டர்களையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தலைமைக்கு இருக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில், 'தொகுதிக்கு பத்து லட்ச ரூபாய் தருகிறேன்' என்றார். கடைசி நிமிடம் வரையில் பணம் தரவில்லை. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் கடன் வாங்கித்தான் செலவு செய்தோம். இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் கடன் வாங்கிச் செலவு செய்ய தொண்டர்களுக்கு விருப்பமில்லை. மேயர் பதவியைப் பெறுவதற்குரிய கவுன்சிலர்கள்கூட கட்சிக்குக் கிடைக்கப் போவதில்லை. இதைச் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை". 

தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்தீர்கள். என்ன சொன்னார்? 

" எங்களைப் பார்த்ததும், ' என்ன திடீர்னு வந்துட்டீங்க? என்று கேட்டார். ' அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லைங்கய்யா. கட்சி பின்னால் போய்க் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க எங்களுக்கு ஒத்துவராது. உங்கள் தலைமையில் பணி செய்ய வந்திருக்கோம்' எனச் சொன்னோம். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். விரைவில் தஞ்சை, நாகை மாவட்டத்தில் நிர்வாகிகள் இணைப்பு விழாவை நடத்த இருக்கிறோம்". 

தே.மு.தி.கவின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது? 

" நாங்கள் அனைவரும் விஜயகாந்த் என்பவரை நம்பித்தான் கட்சிக்குள் நுழைந்தோம். கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்ட, மாவட்டத்தில் கட்சியை வளர்த்தோம். ஆனால், பின்னாளில் அது குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. மனைவி சொல்வதைத்தான் அவர் கேட்கிறார். இதனால் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அவரைவிட்டு வெளியே போய்விட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதற்குக்கூட ஆள் தேடுகிறார்கள். இந்த சூழலில் அந்தக் கட்சி வளருமா?" எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார் பால அருள்செல்வம். 

-ஆ.விஜயானந்த்  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ