Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சிநேகலதா. இன்ஜினீயரான இவர் துரைப்பாக்கம், மேட்டுக்குப்பத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மேட்டுக்குப்பம் பகுதியில் சிநேகலதா நடந்து சென்ற போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் கத்தி முனையில் அவரிடம் செயினைப் பறித்தனர். இதை மளிகைக்கடை நடத்தி வரும் சேகர், தடுக்க முயன்றனர். அப்போது கொள்ளை கும்பல், சேகரின் காதில் கத்தியால் வெட்டினர்.

இதுகுறித்து சிநேகலதா, துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். வழிப்பறி நடந்த சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பிரபல வழிப்பறி கொள்ளையனான சிந்தாரிப்பேட்டை மீன்கார்த்திக், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸார், நேற்றிரவு பிடித்து கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையின் போது கார்த்திக் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கார்த்திக்கை போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை போலீஸார் மூடிமறைக்க முயன்றனர்.

கார்த்திக் உறவினர்களால் இந்த சம்பவம் இன்று காலையில் தெரியவந்தது. உடனடியாக கார்த்திக் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கார்த்திக்கின் உடல் வைக்கப்பட்டுள்ள விவரத்தை கூட போலீஸார் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதனால் கார்த்திக் உறவினர்கள் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவனை பிணவறை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை என அலைந்தனர். அடுத்து மாலையில் கார்த்திக்கின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள விவரம் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது.

இதற்கிடையில் கார்த்திக்கின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஒருக்கட்டத்தில் போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்திலிருந்து போலீஸ் நிலையத்தை நோக்கி பொது மக்கள் கற்களை வீசத்தொடங்கினர். அடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்கவில்லை. இதன்பிறகு தடியடி நடத்தி பொது மக்களை போலீஸார் விரட்டியடித்தனர். 

இதற்கிடையில் காவல் நிலையத்திலேயே விசாரணைக்கு சென்றவர் மரணம் அடைந்தது தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதன்பேரில் கார்த்திக்கிடம் விசாரணை நடத்திய போலீஸ் டீம்மிடம், துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் கண்ணகி நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

போலீஸ் நிலையத்தில் மரணமடைந்த கார்த்திக்கு மீன் குழம்பு என்றால் ரொம்ப பிடிக்குமாம். இதனால் அவரை மீன் கார்த்திக் என்றே அழைப்பதுண்டு என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். 

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ