2 Karnataka government is committing wrong again, says Kanimozhi | கர்நாடக அரசு மீண்டும் தவறு செய்கிறது! - கனிமொழி
Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடக அரசு மீண்டும் தவறு செய்கிறது! - கனிமொழி

திருவண்ணாமலை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் கர்நாடக அரசு மீண்டும் தவறு செய்கிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்து உள்ளார்.

தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''வன்முறை கலாச்சாரம் தமிழகத்தில் பெருகிக் கொண்டே உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. ஆனால், இதை பற்றி எல்லாம் தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் தற்போது தமிழக அரசு இல்லை.

சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என கூறுவதில் தான் அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, போலீசார் கண்டுபிடிப்பதில்லை, போலீஸ் துறையை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்ட சம்பவம், புழல் சிறையில் ராம்குமார் இறந்த சம்பவங்களில் பல குழப்பங்கள் நிலவுகிறது. அதனால், இது குறித்து நீதி விசாரணை நடத்தி, உண்மை நிலையை மக்களுக்கு அரசு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும், தமிழத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்குவதில்லை; இது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த அரசாக இருந்தாலும் ஏற்று நடக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் தவறு செய்கின்றனர். தமிழகத்துக்கு தர வேண்டிய நியாயமான தண்ணீரைகூட கர்நாடக அரசு தர மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை குழுவை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய அமைச்சராக இருந்து கொண்டு ஒரு மாநிலத்திற்கான அமைச்சர் போல், கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த விவகாரத்தில், சதானந்த கவுடா ஒருதலைபட்சமாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்க வேண்டும். காவிரி பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்" என்றார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ