Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இளவரசனுக்கும் ராம்குமாருக்கும் ஏன் இவ்வளவு பாகுபாடு?'  -மார்ச்சுவரி மர்மம் சொல்கிறார் டாக்டர்.டிகால்

ராம்குமார் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. ' இளவரசன் வழக்கைப் போலவே, வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசு செயல்படுகிறது' என ஆதங்கப்படுகிறார் பிரபல உடற்கூறு மருத்துவர் டிகால். 

சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘எனது மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் தங்களது தரப்பு மருத்துவர் ஒருவரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளின் கருத்தில் முரண்பாடு ஏற்பட்டதால், மூன்றாவது நீதிபதியின் கருத்தை அறிவதற்காக, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது மூன்றாவது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்குமா என்பதற்கு இன்றைக்குள் விடை தெரிந்துவிடும். 

'புழல் சிறையில் ராம்குமார் இறந்து ஐந்து நாட்களைக் கடந்துவிட்டன. மின் கம்பியைக் கடித்துத்தான் அவர் இறந்தார் என்பதை உடற்கூறு ஆய்வில் நிரூபிக்க முடியுமா?' என்ற கேள்வியை, பிரபல உடற்கூறு மருத்துவர் டிகாலிடம் கேட்டோம். தமிழ்நாட்டை உலுக்கிய சாதிக் பாட்ஷாவின் சடலத்தை உடற்கூறு செய்து, அதிரடியாக பல சந்தேகங்களைக் கிளப்பியவர். இதுவரையில், இரண்டாயிரம் உடல்களுக்கும் மேல் பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறார். அவர் நம்மிடம், " ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் மார்ச்சுவரிக்குள் கொண்டு சென்றுவிட்டால், தடயத்தைக் காப்பாற்ற முடியும். அதுவும், நான்கு டிகிரி உறைநிலையில் உடல் வைக்கப்பட்டிருந்தால், நூறு நாட்கள் ஆனாலும், புத்தம் புதிய உடலாகவே இருக்கும். இந்த உறைநிலையை சரியாக பராமரிக்காவிட்டால், ஆதாரங்களைக் காப்பாற்றுவது சிரமம். நான் பார்த்த வரையில் ஆறு மணி நேரத்திற்குள் மார்ச்சுவரிக்குள் ராம்குமார் உடலை அனுப்பிவிட்டார்கள்.

உறைநிலையை எப்படி பராமரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மின் கம்பியைக் கடித்தும், அவரது வாயில் எரிந்ததற்கான காயம் இல்லை என்கின்றனர். நீர் பதம் இருக்கும் சமயத்தில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். வாயின் உள்பகுதிக்குள் மின் கம்பியை அழுத்திக் கடித்திருந்தாலும், கால் வழியாக மின்சாரம் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த இடத்தில் காயம் கட்டாயம் ஏற்படும். மின் கம்பியைக் கடிக்கும்போது புண் ஏற்படுவதற்குக் காரணம், உடலின் உள் மின்சாரம் பாயும்போது, தோல் அதைத் தடுக்கும் வேலையில் ஈடுபடும். 

ஒருமுறை அண்ணா நகரைச் சேர்ந்த ரேவதி என்பவர், மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்துவிட்டதாகக் கூறி, பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்திருந்தனர். ' அவர் தற்கொலை செய்து கொண்டார்' என உடற்கூறு மருத்துவர் தெரிவித்தார். நான் ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்மணியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அதன்பிறகு உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருப்பதை கண்டறிந்தேன். இதன்பின்னரே கொலை வழக்காக மாற்றப்பட்டது. ரேவதி வழக்கில் தற்கொலை என்று முதலில் சான்று கொடுத்தவரும் அரசு மருத்துவர்தான். எனவே, ராம்குமார் மரணத்தில் தனியார் மருத்துவர் உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான். அதற்கு ஏன் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதுதான் மர்மமாக இருக்கிறது.

தர்மபுரி இளவரசன் மரணத்திலும் எனக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. அவரது மரணத்தில் தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன. அவரது கை மற்றும் காலில் உள்ள காயத்தின் அடிப்படையில், எந்தக் காயம் முதலில் ஏற்பட்டது? இரண்டு ஒரே நேரத்தில் நிகழ்ந்தவையா என்பதைக் கண்டுபிடித்திருந்தால் கொலையா? தற்கொலையா? என்பதை எளிதாகச் சொல்லியிருக்க முடியும். ஆனால், இளவரசன் மரணத்தில் தனியார் மருத்துவர் உடனிருக்க அரசுத் தரப்பு அனுமதிக்கவில்லை. ராம்குமாருக்கும் இளவரசனுக்கும் மட்டும் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறது? அரசிடம் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான், பொதுமக்களுக்கு அதன்மேல் நம்பிக்கை வரும்" என்றார் கொந்தளிப்புடன். 

-ஆ.விஜயானந்த் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ