Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மேயராக அதிமுக சார்பில் வளர்மதி,கோகுலஇந்திரா போட்டி?

      

சென்னையின் அடுத்த மேயராக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி,கோகுல இந்திரா ஆகியோர் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ஆளும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளிலும் கவுன்சிலர் சீட் கேட்டு நூற்றுக்கணக்கானோர் அதிமுகவில் விருப்பமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அதே போல எதிர்க்கட்சியான திமுகவிலும் விருப்பமனுத் தாக்கல் நடந்து வருவதால் அறிவாலயமும் பரபரப்பில் இருக்கிறது.சென்னை உட்பட ஆறு மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில், சென்னையின் மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வளர்மதி போட்டியிடுகிறார் என்றும்,இன்னொரு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் போட்டியிடப்போவதாகவும் தகவல்கள் றெக்கைக் காட்டியுள்ளன.இது அதிமுகவினர் மத்தியிலேயே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து சிட்டிங் கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டோம். அவர் கூறுகையில்," சென்னையைப் பொறுத்தவரை கடந்த  சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வென்றது என்றால் அதற்கு முழு பொறுப்பும் இப்போதைய மேயர் சைதை.துரைசாமியைத்தான் சாரும்.அவரின் பதவிக்காலம் முழுக்க ஒரு  ஐ.ஏ.எஸ். அதிகாரியைப் போல மேலோட்டமாகவே இருந்துவிட்டார்.களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை. இன்று சிட்டி  திமுக வசம் போய்விட்டது என்று கூறப்படுவதற்கு அவரே காரணம். அடுத்து மாவட்ட செயலாளர்கள்.

கட்சியில் எந்தப் பதவியாக இருந்தாலும் பணம் கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு  எப்படி கட்சிக்காரன் ஓட்டுப்போடுவான் என்று எதிர்ப்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது கூட ஆயிரம் விளக்குப் பகுதியில் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு கவுன்சிலர் சீட் 50 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு மாவட்ட செயலாளரே பொறுப்பு என்றும் நம்பத்தகுந்த தகவல்கள்  கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 200 வார்டுகளில் 100 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் புதிய நபர்கள் கவுன்சிலராக  வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.அதற்காக திடீர் என்று மதிமுகவில் இருந்து வந்தவருக்கு கவுன்சிலர் சீட் என்றால்  எப்படி ஏற்றுக்கொள்ளமுடிடியும்?

முதல்வருக்குத் தெரியும்.யாரை மேயராக்குவது கவுன்சிலராக்குவது என்று.முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா இருவரில் ஒருவர் மேயராகும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.மேலும் கவுன்சிலர் நூர்ஜகானுக்கும்  வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.ஆனால் எல்லா முடிவும் அம்மாவின் கையில். உள்ளடி வேலைகள் சட்டமன்றத் தேர்தல்  போல நடக்காமல் இருந்தால் சென்னை பெருமாநகராட்சி எங்களுக்குத்தான்" என்றார் அதிரடியாக.

சென்னை, சேலம்,கோவை,தஞ்சை,வேலூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால்  மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் போட்டா போட்டி நிலவுகிறது.கோவையில் அதிமுக சார்பில் மேயர்  பதவிக்குக் கடும் போட்டி நிலவுகிறது. கோவை துணை மேயர் லீலாவதி உன்னி, சாவித்திரி பார்த்திபன், மணிமேகலை ஆகிய 3 பேர் மத்தியில் போட்டியுள்ளதாகத் தெரிகிறது. அதிமுக தலைமை வரையில்  இவர்களின் பெயர்கள் அடிபடுவதால் 3 பேரில் யாராவது ஒருவரை தலைமை செலக்ட் செய்யும் என்று  கோவை அதிமுகவினர் கூறுகிறார்கள். மொத்தமுள்ள 100 வார்டுகளில் சிட்டிங் கவுன்சிலர்கள் பெரும்பாலானவர்கள் மீண்டும் போட்டியிட விருப்ப மனுக்கள் வாங்கியுள்ளனர்.

அதே போல சேலத்தில் கவுன்சிலர் சாந்தா உள்ளிட்ட சிலரின் பெயர்கள் மேயர் பதவிக்கு அடிபடுகின்றன. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு யாருக்குக் கிடைக்கிறதோ அந்த நபருக்குத்தான் மேயர் பதவி என்கிறார்கள் சேலம் அதிமுகவினர். இதனால் அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில்  லோக்கல் அதிமுக பிரமுகர்கள் முகாமிட்டு வருகிறார்கள்.

திமுகவைப் பொறுத்தவரை விருப்பமனுக்கள் பெற இன்று கடைசி நாள் என்பதால் அக்கட்சிப் பிரமுகர்கள் பரபரப்பாக இயங்கிவருகின்றனர். சிட்டிங் கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் மீண்டும் போட்டியிடுகிறார்.அதே போல முக்கிய திமுக கவுன்சிலர்கள்  விருப்பமனுக்கள் பெற்றுள்ளனர்.இது தொடர்பாக மாமன்ற உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸிடம்  விசாரித்தோம். அவர் கூறுகையில்," ஆளுங்கட்சியிடம் போலீசும்,அதிகாரமும் இருக்கிறது. எங்களிடம்(திமுக) மக்கள் ஆதரவு இருக்கிறது. எங்கள் கட்சியின் சார்பில்,மேயராகப் போட்டியிடும் பெண் யார் என்பதை தலைவர் முடிவு செய்வார்.தேர்தலைச் சந்திக்க நாங்கள் முழுமையாகத் தாயாராகவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் களைகட்ட தொடங்கியுள்ளது.

சி.தேவராஜன்.      

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ