Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ராமதாஸ் கண்களுக்கு, தீபிகா படுகொலை தென்படவில்லையா?'  -கொதிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் 

நாகப்பட்டினத்தில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தீபிகா வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டது காவல்துறை. 'தலித் இளைஞனைக் காதலித்ததற்காகக் கொல்லப்பட்டிருக்கிறார் தீபிகா. இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட ராமதாஸ் பேச மறுப்பது ஏன்?' எனக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அப்பாராஜபுரம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவிச்சந்திரன். இவருடைய மகள் தீபிகா. தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். கடந்த 19-ம் தேதி மாலை ஆறு மணியளவில் கட்டையால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளான அரசனும் ராஜ்மோகனும் கைது செய்யப்பட்டுவிட்டனர். " வன்னிய சமூகத்தைச் சேர்ந்த தீபிகாவும் தலித் சமூகத்தைச் சேர்ந்த விஜயசுந்தரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். அதேநேரத்தில், கல்லூரி மாணவரான அரசனும் ஒருதலையாக தீபிகாவைக் காதலித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே படுகொலை நடந்துள்ளது" எனக் கொந்தளிக்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர். அவர் நம்மிடம், 

" தீபிகாவுக்கு அவருடைய தாய்மாமனைத் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். தன்னுடைய காதலரான விஜயசுந்தரை சந்தித்து, ' நான் என் தாய்மாமனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். தயவுசெய்து நமது காதலை நிறுத்திக் கொள்வோம்' என்று கூறியிருக்கிறார். இதை ஏற்றுக் கொண்டு விஜயசுந்தரும் ஒதுங்கிவிட்டார்.  இந்த நிலையில்தான், கொடூரமான முறையில் கட்டையால் அடித்து தீபிகா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தப் பெண்ணை நாணல்படுகை பகுதியைச் சேர்ந்த அரசன் என்கிற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். காதலுக்கு தீபிகா எதிர்ப்பு தெரிவித்ததால், தன்னுடைய நண்பர் ராஜ்மோகனுடன் இணைந்து தீபிகாவை கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் தலித் இளைஞர் விஜயசுந்தருக்கு ஐந்து முறை தீபிகா செல்போனில் இருந்து அழைப்பு சென்றிருக்கிறது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் விஜயசுந்தர் போனை எடுக்கவில்லை. ஒருவேளை போனை எடுத்திருந்தால், விஜயசுந்தரும் வரவழைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். 

முழுக்க முழுக்க சாதிரீதியான ஆணவத்தாலும் ஒருதலைக் காதலாலும்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என சந்தேகப்படுகிறோம். இத்தனைக்கும் கொலைச் சதியில் ஈடுபட்டவர்களும் தீபிகாவின் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான். தன் சாதிக்காரனே தன் சாதிப் பெண்ணைக் கொலை செய்வது பற்றியெல்லாம், மருத்துவர் ராமதாஸுக்கு எந்தக் கவலையும் இல்லையா? மிகக் கொடூரமான முறையில் ஒரு கல்லூரி மாணவி கொல்லப்பட்டிருக்கிறார். நாடகக் காதலை எதிர்க்கிறோம்; ஒருதலைக் காதலைக் கண்டிக்கிறோம் என்றெல்லாம் முதல்வர் வரையில் புகார் கொடுக்கும் பா.ம.கவுக்கு, தீபிகா படுகொலை கண்ணில் படவில்லையா? எங்களுடைய கோரிக்கை எல்லாம், தீபிகாவைக் கொலை செய்தவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இது சாதிரீதியிலான ஆணவப் படுகொலையா என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்" எனக் கொந்தளித்தார் கதிர். 

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ