Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவில் இருந்து மீண்டு வந்த அரியலூர் கோவில் சிலைகள்!

 
அரியலூர் : அமெரிக்கா அரசால் இந்திய பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்ட சிலைகளில் 4 சிலைகள் அரியலூர் கோயில் சிலைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலைகள் அமெரிக்கா சுங்கத்துறையால் பறிமுதல் செய்து வைக்கபட்டிருந்தது. இதை அண்மையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியுடம் அந்நாடு ஒப்படைத்தது. இதில் தமிழகத்துக்கு சொந்தமான சிலைகளில் 4 சிலைகள், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி கோயிலுக்கு சொந்தமான  சிலைகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
 
இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று நடத்தினர். ஶ்ரீபுரந்தான் மற்றும் சுத்தமல்லி கிராமத்துக்கு சென்று, மக்களுடன் கருத்து கேட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், கருத்து கேட்புக்கு பிறகு அந்த சிலைகள் அந்த கிராமத்துக்கு சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தினர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்மாணிக்கவேல், "அரியலூர் மாவட்டம்  ஸ்ரீபுரந்தான் சிவன் கோயில்  மற்றும் சுத்தமல்லி வரதராஜன் பெருமாள் கோயிலில் கடந்த  2008ம் ஆண்டு 28 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து ஜெயங்கொண்டம் மற்றும் உடையார் பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இவ்வழக்கின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா ஒப்படைத்த சிலைகளில் 4 சிலைகளில் விநாயகர், மாணிக்கவாசகர் ஆகிய இரண்டு சிலைகள் ஸ்ரீபுரந்தானில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், சோமாஸ்கந்தர் அம்மன், சக்கரத்தாழ்வார் சிலைகள், சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது. இதை இன்று உறுதிப்படுத்திக்கொண்டோம்.
 
தற்போது கொண்டு வந்துள்ள சிலைகள் 11 ஆம் நூற்றாண்டு மற்றும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன் சிலைகளாகும். இந்த நான்கு சிலைகளின் மதிப்பு ரூ.15 கோடிக்கும் அதிகம். இந்த ஐம்பொன் சிலைகள் நாளை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அமெரிக்க அருங்காட்சியகத்திலிருந்து 468 சிலைகள் அமெரிக்க அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 31 சிலைகளும் அடங்கும்," என்றார்.
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் சிலைகள் மீண்டும் அதே கோயிலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
- எம்.திலீபன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ