Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அவர்கள் தயார் என்றால், நாங்களும் தயார்!'  -உள்ளாட்சிக்கு ஸ்டாலினின் அதிரடி ஸ்கெட்ச்

றிவாலயத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின். ' ஆளுங்கட்சி அனைத்திற்கும் தயாராக இருக்கிறது. அவர்களைவிட பல மடங்கு நாமும் தயாராக இருக்க வேண்டும்' என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் அவர். 

உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெறும் வகையில், தி.மு.கவில் பல அதிரடியான திட்டங்கள் தயாராகியுள்ளன. அதன் ஒருபடியாக, ஸ்டாலின் மேற்பார்வையில் மாநிலம் முழுவதும் 28 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை எந்த வகையில் எதிர்கொள்வது; சிக்கலான மாவட்டங்களில் நிலவும் உள்கட்சி பூசலை சமாளிப்பது; தேர்தல் செலவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், " காலை 10.45 மணிக்குத் தொடங்கிய கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடந்தது. ஸ்டாலின், துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களுக்கு சம்பந்தமில்லாதவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வேலையே, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை அடையாளம் கண்டறிந்து போட்டியிட வைப்பதுதான். ' ஆளுங்கட்சிக்கு எதிராக மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்' என்பதை கவுரவப் பிரச்னையாகவே ஸ்டாலின் பார்க்கிறார். 

அதற்கேற்ப, வார்டுகளில் பணவலிமை உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் கொடுப்பது என்றும் வேட்பாளரது வெற்றியை பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மாநிலம் முழுவதும் 89 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் சொல்லும் ஆட்களுக்கு சீட் கொடுக்கும் முடிவில் தலைமை உள்ளது. ' வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதில் எந்த எம்.எல்.ஏ உறுதியாக இருக்கிறாரோ, அவர் பரிந்துரை செய்யும் ஆட்களுக்கே சீட் வழங்கப்படும். அதற்கான செலவுகளையும் அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தமுறை கட்சி சார்பில் தேர்தல் நிதி வழங்கப்படப் போவதில்லை' என்பதை உறுதியாகவே தலைமை தெரிவித்துவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்கட்சி பூசல் நிலவுகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகள் வேலை பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, அந்த மாவட்டத்திற்கு செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார். கோஷ்டி பூசல் அதிகமுள்ள மாவட்டங்களுக்கு கரடுமுரடான ஆட்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

சென்னை மாவட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடிக்கு ஆஸ்டின், திருச்சிக்கு தேவராஜ், விழுப்புரத்திற்கு தாயகம் கவி, திண்டுக்கல்லுக்கு சுப.சீத்தாராமன், திருவண்ணாமலைக்கு தலைமை நிலையச் செயலாளர் சதாசிவம், திருநெல்வேலிக்கு சூர்யா வெற்றிகொண்டான் என அதிரடியான ஆட்களை நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு கூட்டத்தின் முடிவில் பேசிய பொருளாளர் ஸ்டாலின், ' மாவட்டங்களில் எப்படியெல்லாம் பேலன்ஸ் செய்ய முடியுமோ, அனைத்து வழிகளையும் கையாண்டு வெற்றியை உறுதி செய்யுங்கள். உள்ளூரில் கழக வழக்கறிஞர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். ஆளுங்கட்சி தரப்பினர் குச்சி எடுப்பதற்கு முன்பே, நாம் குச்சியை பயன்படுத்திவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் பின்வாங்கிவிடக் கூடாது. வெற்றி ஒன்று மட்டும்தான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்' எனக் கண்டிப்பான குரலில் அறிவுறுத்தினார். 

உள்ளாட்சிக்கு விருப்ப மனு வாங்கும் தேதியை 24-ம் தேதி வரையில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தி.மு.க தலைமை. ஆளுங்கட்சிக்கு எதிரான உள்ளாட்சி யுத்தத்திற்கு தயாராகிவிட்டார் ஸ்டாலின். தேர்தல் நாளுக்காக காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். 

-ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ