Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால்..!'' - கர்நாடகா ஏன் பதறுகிறது?

காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாடு- கர்நாடகா இடையில் நடக்கும் காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினையை, காவிரி மேலாண்மை வாரியம் முழுமையாகத் தீர்க்கும் என தமிழக மக்களும், நடுநிலையாளர்களும் நம்பியிருக்கின்றனர். பல்லாண்டுகளாகப் பட்ட வேதனைகள் தீர்ந்து, விடிவு காலம் பிறக்கபோகிறது என தமிழக விவசாயிகள் காத்திருக்கும் வேளையில், பதறியடித்துகொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது கர்நாடகா.

''காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க கூடாது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரம்பு மீறிய செயல்'' என திருவாய் மலர்ந்திருக்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. தேவகவுடா மட்டுமல்ல, பொரும்பாலான கர்நாடக அரசியல்வாதிகளில் கருத்தும் இதுவே.. ''காவிரி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க இத்தகைய மேலாண்மை வாரியமே சிறந்த தெரிவு'' என்று மத்திய நதிநீர் ஆணையத் (CWC) தலைவர் ஜி.எஸ்.ஜா உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தைக் கண்டு கன்னடர்கள் அஞ்சுகின்றனர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் என்ன நடக்கும் என தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் விளக்கினார். '' கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹேரங்கி கபினி, தமிழகத்தில் உள்ள மேட்டூர், அமராவதி, பவானிசாகர், கேரளாவில் உள்ள பானசுரசாகர் அணை ஆகிய எட்டு அணைகளின் நீர் நிர்வாகமும் காவிரி மேலாண்மை வாரியத்தில் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அணைகளில் தண்ணீர் திறந்துவிடுவதும், நிறுத்துவதும் மேலாண்மை வாரியத்தில் உத்தரவுப்படியே நடக்கும்.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி தண்ணீரைப் பகிர்ந்து தர வேண்டியது காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்பு. 10 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் இந்த வாரியம், சட்டப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும். பருவமழை குறைவாகப் பெய்யும் காலங்களில் இருக்கும் தண்ணீரை, விகிதாச்சார அடிப்படையில் பகிந்துக்கொடுப்பார்கள். இதனால் தமிழகத்துக்குத் தண்ணீர் அளிக்க நேரிடுமே என்ற வயிற்று எரிச்சலில் மேலாண்மை வாரியத்தைக் கன்னட அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள்.'' என்றார்.

காலியாகும் பெங்களூரு பவர் சென்டர்..

75 சதவிகித பெங்களூரு நகரம் காவிரி ஆற்றுப்படுகையின் பகுதியாக இல்லாத போதும், காவிரியில் இருந்து பெங்களூருவின் கடைகோடிப் பகுதிக்கும் தண்ணீர் செல்கிறது. ஆண்டுதோறும் 10 டி.எம்.சி தண்ணீரை பெங்களூரு நகரம் பெறுகிறது.

இந்தியாவின் 40 சதவிகிதத் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியும், 38 சதவிகித மின்னணுப் பொருள் ஏற்றுமதியும் பெங்களூருவில் இருந்துதான் நடக்கிறது. பாஸ்டன், லண்டன் நகருக்கு அடுத்து உலகின் நான்காவது பெரிய தொழில்நுட்பம் நகரம், இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெங்களூரு இவ்வளவு வேகமாக வளர்ந்ததற்கு அதன் உள்கட்டமைப்பும், தண்ணீர் வசதிகளும்தான் காரணம். இந்த நிலையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கு தண்ணீர் அளிக்கப்பட்டால், பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என கன்னடர்கள் அஞ்சுகின்றனர். இதனால் பெங்களூருவில் உள்ள முதலீடுகளும் வெளியேறிவிடுமோ என்ற பதற்றமும் கன்னடர்களுக்கு உள்ளது.

இன்னும் 4 வாரங்கள் காத்திருப்போம்..

-ஆ.நந்தகுமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ