Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்து முன்னணி நிர்வாகி கொலை..! கோவை திருப்பூரில் அறிவிக்கப்படாத 'பந்த்'

கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் மர்ம நபர்கள் சிலரால் அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். சம்பவத்தை கண்டித்து கோவை, திருப்பூரில் ஏராளமான பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. அறிவிக்கப்படாத பந்த் போல கோவை, திருப்பூர் மாநகரங்கள் முடங்கின.

இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சசிக்குமார். இவர், நேற்று இரவு கோவை, சுப்பிரமணியபாளையத்தில் உள்ள வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல், சசிக்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பிச்சென்றனர்.

இந்த தாக்குதலில் சசிக்குமாருக்கு எட்டு இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதியினரால் மீட்கப்பட்ட சசிக்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சசிக்குமார் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சசிக்குமார் இறந்த தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்து சசிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தோடர்பாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சசிக்குமார் கொலைக்கு கண்டனம் தெரிவித்து, கோவை, திருப்பூரில் கடைகளை அடைக்க வற்புறுத்தியதால், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி, உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை, திருப்பூர் பகுதியில் இயங்கிய 10க்கும் அதிகமான அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. அடுத்தடுத்து பேருந்துகள் மீது தாக்குதல் நடந்ததால் பேருந்து போக்குவரத்து பல இடங்களில் நிறுத்தப்பட்டது. கடைகள் அடைப்பு, பஸ்கள் ஓடாதது உள்ளிட்ட காரணங்களால் கோவை, திருப்பூர் மாநகரில் அறிவிக்கப்படாத பந்த் அமலானது. இதனால் கோவை, திருப்பூர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் கூடிய இந்து முன்னணியினர் சசிக்குமார் கொலையை கண்டித்து அரசு மருத்துவமனையில் இருந்து டவுன் ஹால் நோக்கி ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் இரங்கல்...

இது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ''கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், நேற்று இரவு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான துயரச் சம்பவம் கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

சசிகுமார், இந்து முன்னணியில் பல ஆண்டுகள் சமூகப் பணி ஆற்றியவர். சுற்றியுள்ள மக்களுக்கு பல நன்மைகளை செய்தவர். அப்படிப்பட்டவரின் கொலைச் சம்பவம், மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க செயலாகும். சசிக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க, தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கொலையால், சசிக்குமாரை இழந்து கண்ணீர் வடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி இயக்கத்தின் நண்பர்களுக்கும் எனது சார்பாகவும், தமிழக பா.ஜ.க. சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

- ச.ஜெ.ரவி

படங்கள் : தி.விஜய்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ