Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்து அமைப்பினர் தொடர் கொலை ஏன்? பின்னணி தகவல்கள்

           

மிழக அளவில் ஓசூர்,கோவை என்று பல்வேறு இடங்களில் இந்து அமைப்புத் தலைவர்கள் தொடர் கொலைகள் தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று(புதன்) முன் தினம்தான் இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் டெல்லியில் தமிழக இந்து அமைப்பினருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி பேட்டியளித்திருந்தார். ஒருநாள் கடந்த நிலையில், கோவையில் நேற்று (வியாழன்) இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. பதற்ற சூழல் தொடருவதால்  பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.        

கொல்லப்பட்ட இந்து அமைப்புத் தலைவர்கள்:

கடந்த 12 நாட்களில் மாநில அளவில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினரின் மீது கொலை வெறித்தாக்குதல்கள்  அதிகரித்துள்ளன.இது மத ஒற்றுமையை சிதைத்துவிடுமோ என்றும் மீண்டும் 1992 திரும்பிவிடுமோ என்றும் பீதியை பொதுமக்கள் மத்தியில் பரவவிட்டுள்ளது.கலவரச் சூழல் வந்துவிடக்கூடாது என்பதால் மாநிலம் முழுக்க காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


19.09.2016: ஓசூர் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் சூரி வெட்டிக்கொலை

சூரி(42). விஸ்வ ஹிந்து பரிஷத் கிருஷ்ணகிரி மாவட்ட செயலராகப் பொறுப்பில் இருந்துள்ளார். அந்தப் பகுதியில், ரியல் எஸ்டேட் மற்றும் கேபிள் டிவி தொழில் செய்துவந்துள்ளார். அவர் கொலையானது குறித்து ஓசூர் போலீசார் தெரிவித்துள்ள தகவலில்,"சூரி ஓசூர் பகுதியில் ரவுடியாக வலம் வந்ததுடன், கட்டப்பஞ்சாயத்து மற்றும் நிலத்தை மிரட்டி எழுதி வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். 8 வழக்குகளில் தொடர்புடைய சூரி தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். இதனால் அவர் பலரை பகைத்துக் கொண்டார்.இதுவே கொலையாகக் காரணமாக இருந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

22.09.2016: இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை

சசிகுமார்(36). இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று(வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சுப்பிரமணியபுரம் அருகே வரும்போது, 2 இருசக்கர வாகனங்களில் அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் 4 பேர்,வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோடி சசிகுமாரைத் துரத்திச் சென்ற மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த சசிகுமார்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு மத்திய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன்  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.


19.09.2016: திண்டுக்கல் மாவட்ட இந்துமுன்னணி செயற்குழு உறுப்பினர் சங்கர் கணேஷ் வெட்டப்பட்டார்.

சங்கர் கணேஷ்(30). இவர் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி தபால் நிலையம் எதிரில்,தனது நண்பரின் கடையருகே சென்றபோது மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் அவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து அமைப்பினர் தொடர்ந்து தாக்குதலில் சிக்குவது குறித்து கவலை தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை விதிக்கவேண்டும் என்றும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தினார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இந்து முன்னணி அமைப்பினர் வேலூர், திருவள்ளூர், கோவை, கோத்தகிரி,  ராமேஸ்வரம்,கிருஷ்ணகிரி,தாம்பரம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை அடுத்தடுத்து நடத்தினர்.

10.09.2016:வேலூர் இந்து முன்னணி பிரமுகர்கள் வீடு மற்றும் பஸ் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு

வேலூர் மாவட்டம் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ்.கடந்த 10 ம் தேதி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனது வீட்டினுள் தூக்கிக் கொண்டிருந்தார். அப்போது  அவரின் வீட்டின்மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதே போல வேலூர் சங்கரன்பாளையம் இந்துமுன்னணி பிரமுகர் டி.கே.டி.சீனிவாசன் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. அதில் பேருந்து சேதமடைந்துள்ளது.

மேலும்,இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மண்டலத் தலைவர் தர்மாவின் வீடு தாக்கப்பட்டு அவரது கார் எரிக்கப்பட்டுள்ளது. செஞ்சியில் விநாயகர் சதுர்த்தியின் போது, அங்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் பந்தல் மற்றும் விநாயகர் சிலை எரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் சம்பவங்கள் தமிழக இந்து அமைப்பினர் மீது குறி வைக்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாக இந்து அமைப்புத் தலைவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாகப் பல்வேறு துறை மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாளிகை ஆகிய அலுவலகங்களில்  மனு அளிப்பதற்காக அர்ஜுன் சம்பத்து டெல்லி கடந்த புதன் கிழமை சென்று இருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத்,

தமிழகத்தில் ஹிந்து இயக்கத் தலைவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு ஹிந்து இயக்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம்.

சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை சம்பவத்தை பயன்படுத்தி தமிழர்களின் ஒற்றுமை, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை சீர்குலைக்க குறிப்பிட்ட சில இயக்கங்கள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளோம்." என்று கூறினார்.

இந்து அமைப்பினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஜகவின் பொதுச் செயலாளர்  வானதி சீனிவாசன்,"சமீப காலமாக தமிழகத்தில் ஹிந்து இயக்க தலைவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தமிழகத்தில் ஹிந்து இயக்க தலைவர்களின் கொலை மற்றும் தாக்குதல் வழக்குகள் அனைத்தையும் மாநில அரசு உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பிடம்(CBI) ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கைச் சீர்குலைக்க சதி

இந்து அமைப்பினர் மீதான கொலைவெறித் தாக்குதல் குறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாகக் குழு பிரதிநிதி ராஜேஷிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில்," அண்மையில் விநாயகர் சதூர்த்தி எழுச்சியாகக்  கொண்டாடினோம். மேலும் எங்கள் அமைப்பிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மக்களின் இயக்கமாக மாறி வருகிறோம். இதனை சகித்துக் கொள்ளாத சில சக்திகள் கொலை வெறித்தாக்குதல்கள் நடத்துகின்றன. எங்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. தமிழகக் காவல்துறையும்,உளவுத்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்துக்களின் பாதுகாப்பில் தமிழக அரசு மெத்தனமாக  இருக்கிறது. இயக்க தலைவர்களுக்கு பயமுறுத்தலை  உண்டாக்க சிலர் சதி செய்கினறனர்.தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யவும் தண்டிக்கவும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

-சி.தேவராஜன்

 

               

எடிட்டர் சாய்ஸ்

MUST READ