Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கமிஷனர் சம்பளத்தைக் கொடுத்தார்; பதக்கத்தை பரிசளித்தேன்!' -சர்வதேச வாள்வீச்சில் வெண்கலம் வென்ற டெய்லர் மகள்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வந்திருக்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த தமிழ்கனி. ' நிதிச் சுமையால் போட்டியில் பங்கேற்க வழி தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். சம்பளத்தையே கொடுத்த கமிஷனருக்கு, பதக்கத்தை பரிசளித்துவிட்டேன்' என நெகிழ்கிறார். 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி தியாகராஜனின் மகள் தமிழ்கனி. கோவை அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரையில், ஏராளமான பதக்கங்களைக் குவித்துவிட்டார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டிக்குத் தேர்வாகிவிட்டார் தமிழ்கனி. ஆனால், விமானத்தில் சென்று வருவதற்கான போக்குவரத்து செலவுக்கு வழியில்லாமல் தவித்து வந்தார். பல இடங்களில் ஸ்பான்சர் உதவிகள் கேட்டும் பலன் கிடைக்கவில்லை. மாணவியின் சிரமத்தைக் கேள்விப்பட்ட, கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை மாணவிக்குக் கொடுத்து உதவினார். கடந்த பத்து நாட்களாக நடந்த வந்த தாய்லாந்து வாள்வீச்சுப் போட்டியில் அமெரிக்கா, இத்தாலி, கொரியா, ஈரான் உள்பட 23 நாடுகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வந்திருக்கிறார் தமிழ்கனி. 

தமிழ்கனியிடம் பேசினோம். " இதுவரையில், தேசிய அளவில் மூன்று தங்கப் பதக்கமும் 2 வெள்ளிப் பதக்கமும் 2 வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கிறேன். பள்ளி நாட்களில் இருந்து, ஐம்பது பதக்கங்களுக்கும் மேல் வாங்கியிருக்கிறேன். இதன் காரணமாகவே அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் கிடைத்தது. சர்வதேச போட்டியில் பங்கெடுக்க முடியுமா என மிகுந்த தயக்கத்தில் இருந்தேன். என்னுடைய பெற்றோரும் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். அப்போதுதான் 'சோசியல் கேபிடல்' என்ற இணையதளம் மூலம், விஷயத்தைக் கேள்விப்பட்டு அழைத்தார் கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயன். இதற்கு முன்பு நான் வெற்றி பெற்ற சான்றிதழ்களைப் புரட்டிப் பார்த்தவர், 

தாய்லாந்து சென்று வருவதற்கான 86 ஆயிரத்து 550 ரூபாய் பணத்தை, தனது சம்பளத்தில் இருந்து கொடுத்து உதவினார். அவரைச் சந்தித்த சில நொடிகளில் உதவி கிடைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ' பதக்கத்தோடுதான் உங்களை வந்து சந்திப்பேன்' என அவரிடம் உறுதியளித்திருந்தேன். அந்த உறுதிமொழியைக் காப்பாற்றிவிட்டேன். தாய்லாந்தில் நடந்த போட்டியில், மொத்தம் பத்து சுற்றுக்கள் வாள்வீச்சு போட்டி நடந்தன. இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனையை எதிர்த்து வென்றேன். முதன்முதலாக சர்வதேச போட்டியில் வெண்கலம் வென்றதே மகிழ்ச்சிதான். இது ஒரு தொடக்கம்தான். அடுத்தமுறை, தங்கம் வெல்வதுதான் என்னுடைய இலக்கு. இந்த வெற்றியை கமிஷனருக்கு சமர்ப்பிக்கிறேன்" என நெகிழ்ந்தார். 

கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயனிடம் பேசினோம். " சர்வதேச போட்டியில் நமது மாணவி பதக்கம் வென்று வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. திறமை மற்றும் தகுதியுள்ளவர்களுக்கு எந்தவொரு வாய்ப்பும், வசதியின்மை காரணமாகத் தள்ளிப் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றிவிட்டார் தமிழ்கனி. இதற்கு முழுக் காரணம், எளிய மக்களுக்காக நாங்கள் உருவாக்கியுள்ள சோசியல் கேபிடல் இணையதளம் தான். அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உதவிக்காக காத்திருக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இந்தத் தளத்தின் மூலம் உதவி செய்து வருகிறோம். வரும் காலங்களில் எழுத்து, இசை, விளையாட்டு என பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் உதவி செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார் உற்சாகத்தோடு. 

சம்பளத்தைக் கொடுத்த கமிஷனருக்கு, வெற்றிக் கனியைப் பரிசளித்துவிட்டார் தமிழ்கனி! 

-ஆ.விஜயானந்த் 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ