Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியலா?'- தென்சென்னை பஞ்சாயத்து

அ.தி.மு.கவிலும் குடும்ப அரசியல் தலைதூக்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் குறிப்பிட்ட சிலரது குடும்பத்திற்கு கட்சிப்பதவிகள் ஒட்டுமொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சிலரது குடும்பத்தினருக்கு பதவிகள் வாரி வழங்கப்படுவதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டுகின்றனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவரது குடும்பத்தினருக்கு மட்டும் 8 பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோல சிலருக்கு பதவிகள் கொடுக்க சிலரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிலர் பழிவாங்கப்பட்டுள்ளனர். தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் கோஷ்டி பூசல் தலைதூக்கியுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், "சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டார். இதன்பிறகு கட்சிக்காக உழைத்தவர்களில் பலருக்கு பதவிகள் பறிக்கப்பட்டன. அந்த பதவிகள், குறிப்பிட்ட சிலரது குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளன. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஒருவரது குடும்பத்தினருக்கு மட்டும் 8 பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது மகனுக்கு மீனவரணியில் முக்கியப் பொறுப்பும், மகளுக்கு மகளிரணி பொறுப்பும், மருமகனுக்கு பகுதியில் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 5 பேருக்கு கூட்டுறவு துறையில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு குடும்பத்தினருக்கே 8 பதவிகள் கொடுக்கப்பட்டதால் கட்சிக்காக உழைக்கும் மற்றவர்களுக்கு எப்படி பொறுப்புகள் வழங்க முடியும். 
பதவிகளைப் பெற பணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்து கட்சிகளில் பதவிகளைப் பெறுபவர்கள் கட்சியை வளர்க்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஏனெனில் அடுத்த முறையும் பணம் கொடுத்து கட்சியில் பொறுப்பை பெற்றுவிடலாம் என்று கருதுகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைப்பவர்கள் கடைசி வரை தொண்டனாகவே இருக்கின்றனர். இதில் இன்னொரு வேதனை என்றால் கட்சிக்காக உழைப்பவர்களை நிர்வாகிகள் யாரும் மதிப்பதில்லை. 

மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கொடுக்கவும் பேரம் பேசப்படுகிறது. இதற்காக இப்போதே சிலர் சிபாரிசு மற்றும் பணம் கொடுத்து வருகின்றனர். இதை வசூலிக்க தனி நெட்வோர்க்கே செயல்படுகிறது. இவர்களுக்கு சீட் கொடுக்கவும் காய்நகர்த்தப்படுகிறது. இவ்வாறு கட்சியில் எதற்கெடுத்தாலும் பணம் என்றால் கட்சியும் பிசினஸாக மாறி விடும். எனவே கட்சி பொறுப்புகளை கொடுக்க பணம் வசூலிப்பதை தடுக்க கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ஏற்கனவே தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டவர்களில் சிலர், கட்சித் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு, மொட்டையடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சிப் பதவி கேட்டு கார்டனுக்கும், தலைமை அலுவலகத்துக்கும் மனுக்களை குவித்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் கலைராஜனிடம் கேட்ட போது, பதவி பறிக்கப்பட்டவர்கள் இதுபோல வதந்திகளை பரப்பி வருகின்றனர். கட்சிப் பதவிக்காக யாரிடமும் பணம் பெறவில்லை" என்றார். 

நமது நிருபர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ