Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' முதல்வர் அலுவலகம் வருவதற்குள்...!'  -உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பின் பின்னணி

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க இருக்கிறது. ' அவசரகதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பல மர்மங்கள் இருக்கின்றன' என்கின்றனர் அரசியல் கட்சி வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப் போகலாம் என அரசியல் கட்சிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தன. இந்நிலையில், ' வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும்' என அறிவித்துவிட்டார் மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன். இந்த அவசர உத்தரவை அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெறும் வேலையைத் தொடங்கிவிட்டாலும், மக்கள் நலக் கூட்டணி உள்பட பல கட்சிகள் எந்தவித அவகாசமும் இல்லாமல் திணறி வருகின்றன.

இதுகுறித்துப் பேசும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ' உள்ளாட்சித் தேர்தலுக்கு இரவோடு இரவாக தேர்தல் அட்டவணையை வெளியிட்டுவிட்டு, மறுநாள் காலையிலேயே வேட்புமனுத் தாக்கலைத் தொடங்கி வைக்கும் கலாச்சாரத்தை தேர்தல் ஆணையம் கடைபிடித்து வருகிறது. தேர்தல் அட்டவணையை சில நாட்களுக்கு முன்பாகவே வெளியிடாததன் மர்மம் என்ன?  தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே இருப்பதால், முறைகேடுகளுக்குத்தான் வழி அமைக்கும்' எனக் கொந்தளித்திருந்தார். ' இப்படியொரு அறிவிப்பு அதிரடியாக வெளிவர வேண்டிய அவசியம் என்ன?' என்ற கேள்வியை அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். 

" 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12 ஆயிரம் ஊராட்சிகளில் 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்குப் போட்டி நடக்கிறது. கடந்த சில நாட்களாகவே, ' தேர்தல் தேதி அறிவிக்கப்படும்' என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கேற்ப, முதல்வரின் ஒப்புதலைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் காத்திருந்தனர். இன்னமும் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்த தேர்தலை சீக்கிரம் நடத்தி முடித்துவிட்டால், ஆளுங்கட்சி அனைத்து இடங்களையும் கைப்பற்றுவது எளிதாகும் என முதல்வருக்கு குறிப்பு அனுப்பப்பட்டது. மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை மாற்றுவதற்கு, மருத்துவனை ஓய்வு துணை நிற்கும் என கார்டன் வட்டாரம் உறுதியாக நம்புகிறது. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் ஓட்டு வித்தியாசத்தில் பெரிய மாற்றம் இல்லை. இதே அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலும் அமைந்துவிட்டால், அனைத்து உள்ளாட்சிப் பதவிகளையும் கைப்பற்றுவது சிரமம் என்பதில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். அதிகாரிகளின் துணையோடு அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது கார்டன். அதையொட்டியே அவசர அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது" என்றவர், 

" இதனால் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் அதீத உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது. முதல்வர் எழுந்து வருவதற்குள், கவுன்சிலர் பதவிகளுக்கான வசூலை முடித்துவிடும் வேலையில் தீவிரமாக உள்ளனர். மாநகராட்சி மேயர் பதவி தொடங்கி ஊராட்சி வார்டு உறுப்பினர் வரையில், மாவட்ட செயலாளர்களை சரிக்கட்டியவர்களே பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ' சிட்டிங் கவுன்சிலர்களால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர். நல்ல ஆட்களை பரிந்துரை செய்யுங்கள்' என தலைமைக் கழகம் அறிவுறுத்திவிட்டது. இதையே சாதகமாக வைத்துக் கொண்டு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை பேசி முடித்துவிட்டனர். தற்போது மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைப் பட்டியலின் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. முதல்வர் பூரண உடல்நலம் பெற்று கோட்டைக்குத் திரும்புவதற்குள், உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்துவிடும்" என்றார் விரிவாக. 

" பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் சீட் வழங்குகிறார்கள் என்பதில் எந்த உண்மையுமில்லை. சென்னையில் இந்தமுறை கவுன்சிலர் சீட்டுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் பலர், மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான். ' கட்சியில் எத்தனை ஆண்டுகாலமாக பதவியில் இருக்கிறார்?' 'சிறைக்குச் சென்றது முதல் கழகத்தின் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தது வரையில்' அனைத்தையும் ஆய்வு செய்துவிட்டுத்தான், பட்டியலே இறுதி செய்யப்பட்டது. கவுன்சிலர் சீட்டுகளுக்குப் பேரம் பேசுகிறார்கள் என்ற தகவலில் உண்மையில்லை" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

உள்ளாட்சி தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது! 

-ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்