Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சைதை துரைசாமி... வேலூர் கார்த்தியாயினி... நெல்லை புவனேஸ்வரி... சரிந்தது இப்படித்தான்!

ள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை முதல்வரும், பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வௌியிட்டார். தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளும் தற்போது அ.தி.மு.க வசம் உள்ளன. இதில் 7 மேயர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 3 மேயர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. 2 மேயர்கள் புதுமுகங்களுக்கு வாய்ப்பு உள்ளன. தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலில் மேயர் தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் வாக்காளர்களே மேயர்களை தேர்வு செய்தனர். ஆனால், இந்த முறை கவுன்சிலர்களே மேயர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. இன்று அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் சென்னை மேயராக இருக்கும் சைதை துரைசாமி பெயர் இல்லை. இதனால் அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்து வேலூர் மேயர் கார்த்திகாயினி, திண்டுக்கல் மேயர் மருதராஜ், நெல்லை மேயர் புவனேஸ்வரி, தூத்துக்குடி மேயர் அந்தோணிகிரேஸ், ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், திருப்பூர் விசாலாட்சி, கோவை மேயர் ராஜ்குமார், ஆகியோருக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திருச்சி மேயர் ஜெயா, சேலம் மேயர் சவுண்டப்பன், தஞ்சாவூர் மேயர் சாவித்திரி கோபால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 மாநகராட்சிகளுக்கு புதுமுகங்கள் வாய்ப்பு  உள்ளது.

சைதை துரைசாமி: எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வரும் சைதை துரைசாமிக்கு சமீபகாலமாக இறங்குமுகம். 2011 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட சைதை துரைசாமிக்கு வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. அதில் வெற்றி பெற்று மேயர் பதவிக்கு வந்த சைதை துரைசாமி, மாநகராட்சியை அம்மா புகழ்பாடும் மன்றமாகவே மாற்றினார். அடுத்து வந்த திட்டங்களிலும் அம்மா பெயர்கள் இடம் பெற்றன. அம்மா உணவகம், அம்மா வாரச் சந்தை, அம்மா திரையரங்கு என அம்மா பெயரில் பல திட்டங்களை அறிவித்தார். இதில் அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பாட்டிற்கு வந்தன. மீதமுள்ள திட்டங்கள் அறிவிப்போடு நிற்கின்றன.

மாநகராட்சி மன்ற கூட்டங்களில் மேயர் சைதை துரைசாமிக்கும், அ.தி.மு.க கவுன்சிலருக்கும் இடையே முட்டல், மோதல்கள் இருந்தன. இதற்கு கீழ் மட்ட கட்சியினரை சைதை துரைசாமி மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அ.திமு.க கவுன்சிலர்களின் அடாவடி வசூலால் ஆளுங்கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டது. இதுதொடர்பான உளவுத்துறை அறிக்கை ஜெயலலிதாவின் பார்வைக்கு வந்தவுடன், கவுன்சிலர்களை அழைத்து கடும் டோஸ் விட்டார். இதன்பிறகும் கவுன்சிலர்கள் திருந்தவில்லை. இதன் எதிரொலி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் அ.தி.மு.க.வை விட தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வாறு பல காரணங்களுக்காக சைதை துரைசாமி கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு சைதை துரைசாமியை கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது என்று கூட வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, கார்டனுக்கு அழைக்கப்பட்ட சைதை துரைசாமியை ஜெயலலிதா கடுமையாக எச்சரித்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த சமயத்தில் அவர் ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் வீட்டில் வருமானவரியினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை, சைதை துரைசாமிக்கு உள்ளாட்சித் தேர்தலில் வேதனை அளிக்கும் செய்தியாக மாறி விட்டது. இதுவே சைதை துரைசாமிக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு அளிக்கப்பட்டதாக சொல்கின்றனர் கட்சியினர். இது ஏற்கனவே தெரியும் என்கிறது சைதை துரைசாமி தரப்பு.

வேலூர் மேயர் கார்த்தியாயினி: வேலூர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணிக்கும், கார்த்தியாயினிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குள் சென்ற போது நீதிபதி குன்ஹாவை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் கார்த்தியாயினி. இதனால் சர்ச்சையில் சிக்கிய அவர் மன்னிப்பு கேட்டார். இதற்கிடையில் மாவட்டச் செயலாளருக்கும், மேயருக்கும் ஏற்பட்ட மோதல் இந்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் தடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட கார்த்தியாயினி விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கு வீரமணி வாய்ப்பு வழங்கவில்லை. அடுத்து கட்சிப்பதவியும் கேட்டுள்ளார். அப்போது, கார்த்தியாயினிடம், "நீ அதிகம் படித்திருக்கிறாய். இதனால் கல்லூரியில் பேராசிரியை வேலை பார்க்கலாமே. நாங்கள் தான் படிக்கவில்லை. இதனால் அரசியலில் இருக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார் கே.சி.வீரமணி. மேலும், கார்த்தியாயினி, கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனாலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுகிறது கட்சி வட்டாரம்.

நெல்லை புவனேஸ்வரி: தி.மு.க ஆட்சியின் போது ஓட்டை உடைசலாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதைக் கண்டித்து தனி ஒருத்தியாக பஸ் நிறுத்தத்தில் நின்ற அரசு பஸ்சின் மேற்கூரை மீது ஏறி குடைப்பிடித்து பிரபலமானவர்தான் இந்த புவனேஸ்வரி. கட்சிக்குள் ஏகப்பட்ட களேபரம் இருப்பினும் புவனேஸ்வரிக்கு ஒரு முன்னாள் அமைச்சர் லிப்ட் கொடுத்தார். அடுத்து யாருமே எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டகாற்று புவனேஸ்வரிக்கு பக்கம் வீசியதால் நெல்லை மாநகராட்சியின் மேயரானார். மாநகராட்சி கூட்டத்திலேயே மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு காரணம் மேயர், துணை மேயர் ஆகியோரது வீடு ஒரே வார்டில் இருந்தது. இதனால் நீயா... நானா என்ற ஈகோ பிரச்னை இருவருக்கும் இடையே தலைதூக்கியது. மாநகராட்சியின் கடைசி கூட்டத்தில் கூட என் மீது புகார் கொடுத்த பேடிகள் இந்த கூட்டத்தில் இருக்கிறார்கள் என்று பப்ளிக்காக சொன்னார் புவனேஸ்வரி.

அம்மாவை போல நானும் வழக்குகளிலிருந்து மீண்டு வருவேன் என்றார் புவனேஸ்வரி. இதற்கு கட்சியினர் அம்மாவும், புவனேஸ்வரியும் ஒன்றா என்று கேள்வி எழுப்பினர். புவனேஸ்வரி மீது ஊழல் குற்றசாட்டுக்கள் இருந்ததால் இந்தமுறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கட்சியினர் தெரிவித்தனர். அடுத்து அவரது குடும்ப குற்றச்சாட்டும் அவருக்கு இறங்குமுகமாக அமைந்து விட்டது என்றனர் கட்சியினர். 

இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத கட்சியினர், "மகளிர் தினத்தன்று செலவழிப்பட்ட நிதியும், வெள்ளவடிகால் ஓடை மற்றும் தார்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆகியவற்றிலும் ஊழல் நடந்ததற்கு மேயரே காரணம். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேயருக்கும், துணைமேயருக்கும் ஆரம்பத்தில் இருந்தே தகராறு. இதனால் மாநகராட்சியில் உருப்படியாக எந்த பணிகளும் நடக்கவில்லை. இதுவே புவனேஸ்வரிக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை" என்றனர்.

எஸ்.மகேஷ்

படங்கள்: 
எல்.ராஜேந்திரன், ச.வெங்கடேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close