Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி நிறுவன மோசடி: செபியை முற்றுகையிட்ட 300 பேர்!

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மூன்று பேருந்துகளில் சென்னை வந்த 300-க்கும் மேற்பட்டோர்,  அண்ணா சாலையில் உள்ள சந்தைக் கட்டுப்பாட்டு ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னணி இதுதான்....

சில வருடங்களுக்கு முன்பு, பிஏசிஎல் என்ற நிறுவனம் குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாகவும், வட்டி அதிகமாகத் தருவதாகவும் சொல்லி இந்தியா முழுவதும் மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி மோசடியில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் பயனாக, 2013-ல் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதோடு இதன் நிறுவனர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த நிலையில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்த மக்கள் தங்களுடைய பணம் திரும்பக் கிடைக்கும் என்று நீதிமன்றத்தையும் செபியையும் நம்பி கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்து வந்தனர். சமீபத்தில், 'பிஏசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு ஏலத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்ற செய்தி நாணயம் விகடன் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியானது.

அதனைப் பார்த்த பின்பே, 'எப்போது எங்களுடைய பணம் கிடைக்கும்?' என்று தீர்மானமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள கோயம்புத்தூர் வட்டார மக்கள் சென்னை செபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் பேசியபோது, "நாங்கள் 300-க்கும் மேற்பட்டோர் வந்திருக்கிறோம். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏஜெண்டுகள். அந்த நிறுவனத்தை நம்பி எங்களிடம் பணம் கொடுத்தோர் இப்போது எங்களைத்தான் கேட்கிறார்கள். வெளியே தலைகாட்ட முடியவில்லை. இதற்கு முன் செபி வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் மக்களின் பணம் திருப்பி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இதுநாள் வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறோம். பிஏசிஎல் நிறுவன சொத்துக்கள் எப்போது ஏலம் விடப்படும்? எங்களுடைய பணம் எப்போது கிடைக்கும்? என்பதற்கான வெள்ளை அறிக்கையை செபி வெளியிட வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும்" என்றனர்.

செபி தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, "வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதேசமயம் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அனைத்தையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். லோதா கமிட்டி எடுக்கும் முடிவைப் பொறுத்துதான் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். ஏற்கெனவே மல்லையா விஷயத்தில் சொத்துக்களை ஏலத்தில் எடுக்க யாரும் தயாராக இல்லை. சிக்கல்கள் அப்படி இருக்கிறது. இப்படி அலுவலகத்தை வந்து முற்றுகையிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்" என்றனர்.

ஆனாலும் வந்திருந்த மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் வந்து மக்களிடமும் செபி தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியாக மக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

- ஜெ.சரவணன்

படங்கள் : ஆ.முத்துக்குமார், கிரண் குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ