Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆர். போல் ஜெயலலிதாவும் நக்சலைட்டுகளை வேரறுக்க வேண்டும்! - பொன்.ராதாகிருஷ்ணன்

திண்டுக்கல்: எம்.ஜி.ஆர். போல் முதல்வர் ஜெயலலிதாவும் நக்சலைட்டுகளை வேரறுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் தர்மாவின் கார், அதிகாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்கடுத்த சில நாட்களில் இந்து முன்னணி பிரமுகர் சங்கர் கணேஷ் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

அதேபோல் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஜி.போஸ் வீட்டு முன் நிறுத்தியிருந்த காரும் எரிக்கப்பட்டது. இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல், கட்சி பிரமுகர்களின் கார்கள் எரிப்பு, பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு என தொடர்ச்சியாக இந்து அமைப்புத் தலைவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள், தமிழக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''1989-ம் ஆண்டு திண்டுக்கல் அருகே நாகராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டது முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த பதட்டம் தொடர்கதையாகி வருகிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சங்கர் கணேஷ் மீது நடந்த தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கும்.

அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க. அலுவலகம் மற்றும் மாநில நிர்வாகியின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. இதனை அடுத்து மிரட்டல் கடிதமும் அனுப்பி உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் போலீசாருக்கு சவால் விடும் நிகழ்வாகும். எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் ஜனநாயக முறையில் சேவை செய்வதுதான் எங்கள் கடமையாகும்.

மேலும், 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நக்சலைட்டுகளை வேருடன் அழித்தது போல, தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் நக்சலைட்டுகளையும், பயங்கரவாதத்தையும் வேருடன் அழிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக இந்து அமைப்பினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது இரண்டு இயக்கத்துக்கோ, 2 மதங்களுக்கோ நடக்கும் மோதல் அல்ல. உலக அளவில் உள்ள பயங்கரவாதத்துக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பேசிய பின்தான் கடந்த 15 நாட்களாக இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் சவாலாக ஏற்று கண்டு பிடிக்க வேண்டும்" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ