Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அனைத்து இடங்களிலும் போட்டியிட முடியுமா?’  -கலக்கத்தில் ம.ந.கூட்டணி

ள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்காக, நேற்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் நேற்று ஒன்றுகூடியுள்ளனர். ' வேட்பாளர் தேர்வுக்குக்கூட அவகாசம் இல்லாமல், எப்படித்தான் தேர்தலை எதிர்கொள்வது?' எனக் கொந்தளிப்பில் உள்ளனர் தலைவர்கள். 

சட்டமன்றத் தேர்தலைப் போலவே, உள்ளாட்சித் தேர்தலையும் மக்கள் நலக் கூட்டணி சந்திக்கிறது. நேற்று வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு தலைவர்களும், வார்டு பங்கீடு குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். ' மிகக் குறுகிய காலகட்டத்தில் தேர்தலை எதிர்கொள்கிறோம். சட்டமன்றத் தேர்தலிலும் இதேமாதிரியான சூழல்தான் இருந்தது. ஆளுங்கட்சியான அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் தேர்தலை சந்திப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. அவர்கள் பொருளாதாரரீதியாக வலுவாக உள்ளனர். தேர்தல் களத்தில் நாம் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்' எனப் பேசியுள்ளனர். இதையடுத்து, ' மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய வார்டுகளில் வெற்றிவாய்ப்புள்ள பகுதிகளை பகிர்ந்து கொள்ளலாம்' என்ற முடிவுக்கு வந்துள்ளனர். 

மக்கள் நலக் கூட்டணியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " உள்ளாட்சித் தேர்தலை மிகுந்த தயக்கத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆண், பெண் வார்டுகள், தனித் தொகுதிகள் ஆகியவற்றைப் பற்றி அறிவதற்கும் அங்கு பொருத்தமான வேட்பாளர்களை போடுவதற்கும் உரிய கால அவகாசம் இல்லை. உள்ளாட்சிகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பதவிகளுக்குப் போட்டி நடக்கிறது. இதில், பாதி அளவுக்காவது போட்டியிடுவோமோ என்று தெரியவில்லை. எனவே, கூட்டணியில் உள்ள கட்சிகளின் மாவட்டத் தலைவர், செயலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்கிவிட்டோம். அந்தந்த மாவட்டங்களில் உள்ள வார்டுகளில், யாருக்கு செல்வாக்கு என்பதை அறிந்து, பேசித் தீர்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் வி.சி.கவுக்கு நல்ல வாய்ப்புள்ள வார்டுகள் ஏராளம் உள்ளன. 

அதேபோல், ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளுக்கு செல்வாக்குள்ள வார்டுகளைப் பிரித்துக் கொண்டு போட்டியிடுவது; சிக்கல் உள்ள இடங்களில் பேசித் தீர்த்துக் கொள்வது என மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். தேர்தலில் போட்டியிடுவதற்கான செலவுகளையும் வேட்பாளர்களையே ஏற்றுக் கொள்ளும்படி கூறிவிட்டோம். இந்தமுறை பிரசாரத்திற்குத் தலைவர்கள் கூட்டாகச் செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மிகுந்த வேதனையான விஷயம் என்னவென்றால், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தி.மு.கவும் அ.தி.மு.கவும் தயார்நிலையில் உள்ளன. களத்தில் ஆளுங்கட்சியும் தி.மு.கவும் மட்டுமே பிரதான போட்டி என்பதையே நிறுவ முற்படுகின்றனர். சிறிய கட்சிகளை எல்லாம் ஒருபொருட்டாகவே தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆணையத்தின் அவசரத்தால் நாங்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதையும் தாண்டி, ஏராளமான வார்டுகளை மக்கள் நலக் கூட்டணி கைப்பற்றும்" என்றார் நம்பிக்கையோடு. 

அ.தி.மு.க, தி.மு.க, மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.கா என ஏழுமுனைப் போட்டிகளோடு உள்ளாட்சித் திருவிழா களைகட்டுகிறது. 

-ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ