Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆருக்காக ஜெயலலிதா விரதம் இருந்த கோயில்! #Flashback

டந்த 1984 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நள்ளிரவில் சேர்க்கப்பட்டார். மறுதினம் எம்.ஜி.ஆருக்கு பக்கவாதம் தாக்கியது. ஒரு பக்க கை கால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. சிறுநீரகப்பிரச்னையும் உருவானதில் அவர் உடல்நிலை மிகுந்த சிக்களுக்குள்ளானது. அமெரிக்காவின் டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதுதான் அவரைக்காப்பாற்ற ஒரே வழி என தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரும் சத்துணவு உயர்மட்டக்குழு உறுப்பினருமாக இருந்த ஜெயலலிதா அப்போது உள்கட்சி அரசியல் பெரும் நெருக்கடிகளை சந்தித்துவந்தார். கட்சியில் அவரது தலையீடு அதிகரிப்பதாக கூறி ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் சில அமைச்சர்கள் திரண்டு அவருக்கு கட்சியில் மன உளைச்சலை தந்தனர். எம்.ஜி.ஆரின் வட்டத்திலிருந்து அவரை அப்புறப்படுத்துவதில் பெரும் முனைப்பு காட்டிவந்தனர் அவர்கள். ஜெயலலிதாவின் சுறுசுறுப்பான கட்சிப்பணியால் அவரை இழக்கவும் எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. அதனால் எதிரணியின் முயற்சிகளை முனை மழுங்கச்செய்தார். இந்த களேபரங்களுக்கு மத்தியில்தான் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னை காத்துநின்ற எம்.ஜி.ஆரின் நோய்பாதிப்பு ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியை தந்தது.

எம்.ஜி.ஆரை பார்க்கவிடாமல் அப்போலோவிலிருந்தே தங்கள் அரசியலை துவங்கியிருந்தது ஜெயலலிதாவின் எதிர் அணி. அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்லும் வரை சாதுர்யமாக எம்.ஜி.ஆரை பார்க்கவிடவில்லை அவர்கள். இந்நிலையில் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்காக தமிழக கோவில்களில் பிரார்த்தனைகளும் புஜைகளும் நடந்தன. சாமான்யன் முதல் விவிஐபிக்கள் வரை ஏதோவொரு கோவிலில் எம்.ஜி.ஆருக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் ஜெயலலிதா தனது அரசியல் குரு உயிர்பிழைப்பதற்காக தேர்வு செய்தது, மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில். பெரும் வெள்ளத்திலிருந்து ஒரு ஊரையே காத்த ராமருக்கு ஒரு ஆங்கிலேய கலெக்டர் எழுப்பிய கோவில் அது.

சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது ஏரிகாத்த ராமர் கோயில்.  ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்க ராமபிரான் இலங்கை செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருக்க நேர்ந்தது. விபண்டக முனிவர் அதற்கு கைமாறாக, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் தனக்கு காட்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் ராமரிடம். அவ்வாறே ராமர் காட்சி தந்தார். கோயில் கருவறையிலேயே விபண்டக முனிவர் உள்ளார்.

இங்கு உள்ள இறைவனின் திருப்பெயர் கோதண்டராமன். அவரைத்தான் 'ஏரிகாத்த ராமர்' என்று அழைக்கிறார்கள். இறைவியின் திருப்பெயர் ஜனகவல்லித் தாயார். கோதண்டராமர் ஏரிகாத்த ராமர் என அழைக்கப்பட ஒரு சுவையான பின்னணி உண்டு.

அக்காலத்தில் மதுராந்தகம் ஏரி மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். வெள்ளையர் காலத்தில் மழைக்காலங்களில் உடைப்பெடுத்து பயிர்களையும் மக்களையும் அழித்து பெரும் அழிவை தந்து வந்தது இந்த ஏரி. 1795 – 1799 காலகட்டத்தில் Colonel Lionel Blaze (கலோனெல் லையோனெல் ப்ளேஸ்) என்ற ஆங்கிலேயர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். இந்துக்களின் சிலைவழிபாட்டை அவர் கேலி  பேசும் சுபாவம் கொண்டிருந்தார். படிப்பறிவற்ற இந்துக்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கமுடியாமலே கடவுள் என்ற ஒன்றை கும்பிடுகிறார்கள் என்ற கருத்துள்ளவர் அவர். கற்சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம்.

ஒருமுறை மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்ததால் ஏரி உடைந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. ஏரி உடைந்தால் ஊரும் அதைச்சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களும் அழிவது உறுதி. ஊர்ப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களை எப்படியாவது காக்கவேண்டும் என வேண்டினர். இதுதான் சமயம் என அந்த ஆங்கிலேய அதிகாரி, “சதாபொழுதும் நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! அந்த தெய்வத்திடம் சென்று மனு கொடுக்கவேண்டியதுதானே. ஏன் என்னிடம் வந்தீர்கள் என கிண்டலடித்தார்.

மக்கள், “ அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ஸ்ரீராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்” என பதில் சொல்லிவிட்டு அங்கிருந்த  நகர்ந்தனர்.  அதையும் தான் பார்ப்போமே. அப்படி உங்களை அவர் காப்பாற்றிவிட்டால் அவரது மனைவிக்கு ஒரு கோவில் கட்டுகிறேன்” என சிரித்தார் அதிகாரி.  

அன்று நள்ளிரவில் இடி, மழை இன்னும் தீவிரமானது. வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த மழைக்கு நிச்சயம் இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும் என்று நினைத்த அதிகாரி, அதை ஆதாரத்துடன் மேலதிகாரிக்கு சொல்வதற்காக குடையுடன் ஏரிப்பகுதிக்கு வந்தார். மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு மேகம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று வானில் ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.

ஆம், ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும் வில் ஆயுதம். ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி கண்டார். அடுத்தாற்போல் அக்காட்சியைக் கண்ட அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு, மெய்சிலிர்த்தது. தரையில் மண்டியிட்டு விழுந்து ஏதேதோ சொல்லிச் சொல்லி அரற்றினாராம்.

மறுநாள் பொழுது புலர்ந்தபோது வெள்ளம் வடிந்து. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி, தான் கடவுளைக் கண்ட சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன் அன்று முதல் ராமனின் பக்தராகவும் ஆனார். சொன்னபடி ஸ்ரீ தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார். நடந்த சம்பவங்கள் இன்று அந்த ஆலயத்தின் கல்வெட்டிலும் உள்ளது. “இந்த தர்மம் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது” என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம்.

இந்த கோவிலில் மூலவர் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் கைகளைப் பற்றியவாறு, நின்ற திருக்கோலத்தில், கோதண்டராமராகக் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர், இந்த கோவில் கர்ப்பகிரஹத்திற்குள் இல்லாமல் கோயிலுக்கு வெளியே புஷ்கரிணியின் கரையில் தனிக்கோயில் கொண்டுள்ளதும் இந்த கோவிலின் விசேஷம்.

பொதுவாக மற்ற கோவில்களில் சீதை, ராமபிரானுக்கு சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் மூலஸ்தானத்தில், சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு காட்சி தந்ததாகச் சொல்வர்.

“5.11. 1984 ஆம் ஆண்டு தலைவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து என் கண்கள் குளமாகின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும்  அளித்தவர்களில் ஒரு வர் (இந்திரா காந்தி) மறைந்தார். இன்னொருவரான என் தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கிறார்“ என இதுகுறித்து தன் வாழ்க்கைக் குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

மக்களை சூழந்துநின்ற வெள்ளத்திலிருந்து அவர்களை காத்த பெருமை கொண்ட இந்த ராமரை ஜெயலலிதா வணங்கியதற்கு காரணம், தானும் கோஷ்டி அரசியல் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாமல் இருக்க அதிமுகவின் 'ராமச்சந்திரன் அமெரிக்காவிலிருந்து மீண்டு வந்து தன்னைக்காக்கவேண்டும் என்ற கோரிக்கையாக கூட இருந்திருக்கும்.

- எஸ்.கிருபாகரன்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close