Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மா வந்தால்தான் நிறைவேறும் எங்கள் மருத்துவக்கனவு! - காத்திருக்கும் மாணவர்கள்

ருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் (National Eligibility Entrance Test) எனப்படும் இந்தியா முழுமைக்குமான தேசிய பொது நுழைவுத்தேர்வினை மத்திய அரசு கொண்டுவந்தது. இதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட  பல மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்விற்கு  தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடை இந்த ஆண்டு விலக்கப்பட்டு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. பிளஸ்டு தேர்வு நடந்த சமயம் இந்த அறிவிப்பு வெளியாகததால் முதற்கட்ட நுழைவுத்தேர்வை தமிழக மாணவர்கள் பலர் எழுதவில்லை.
இந்நிலையில் கடந்த ஜூலை 24-ம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட நீட் தேர்வை எழுதிய  13 ஆயிரம் தமிழக மாணவர்களில் தகுதி பெற்றது சுமார் 4000க்கும் குறைவானவர்களே.

பிளஸ் டு வில் 1150 ஐ தாண்டி மதிப்பெண் பெற்றவர்கள் கூட நீட் தேர்வில் தகுதி இழந்தனர். நீட்தேர்வில் கேள்வித்தாள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டது, கேள்வித்தாள் இந்தி ஆங்கிலம் என்ற இருமொழிகளில் தயாரிக்கப்பட்டிருந்தது, மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர் நீட் தேர்வுக்கு தயாராகும் அளவு போதிய காலம் இல்லாதது போன்ற காரணங்களால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தகுதிபெற முடியாமல்போனது.  காஞ்சிபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்ற மாணவர் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித்தரம், பாடத்திட்டம், கற்பிக்கும் முறை இவற்றில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் உள்ள நிலையில் தேசிய அளவில் பொது தகுதித் தேர்வு என்பது மாற்றுத்திறனாளிக்கும் இயல்பான மனிதனுக்கும் ஒரே விதபோட்டி என்பதுபோல என்கிறார்கள் கல்வியாளர்கள். மருத்துவக்கனவில் பயின்று மத்திய அரசின் குழப்பமான கல்விக்கொள்கையால் தமிழக மாணவர்கள் தங்கள் மருத்துவக்கனவு பலிக்காமல்போய் மனமுடைந்துபோயுள்ளனர்.
இந்நிலையில் சுயநிதி கல்லுாரிகளில் சேருவதற்கு கூட நீட் தகுதி தேவைப்படுவதால் போதிய பொருளாதார வசதி இருந்தும் தங்கள் பிள்ளைகளின் மருத்துவக்கனவை நிறைவேற்ற முடியாமல் பெற்றோர்கள் முழிபிதுங்கி நிற்கின்றனர்.

நீட் தகுதித்தேர்வினால்  மாணவர்கள் கல்லுாரிகளில் சேர முடியாமல் போனதால் தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள இடங்கள் நிரப்ப்படாமல் வீணாகும் நிலை உள்ளது. நீட் தகுதித்தேர்வில் தோல்வி அடைந்து மாணவர்கள் சேராமல் போனதால் காலியாக உள்ள இந்த இடங்களை மாநில அரசின் வசம் கல்லுாரிகள் திரும்ப ஒப்படைத்தால் மட்டுமே தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறும்.  காரணம் நீட் தகுதித்தேர்வில் தகுதிபெறாதவர்களுக்கு விதிவிலக்கு அளித்து இந்த இடங்களை அவர்களை கொண்டு நிரப்பும் உரிமை தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு.

ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய அளவிலான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழக கல்லுாரிகளில் உள்ள 90  இடங்களில் மாணவர்கள் சேராததால் அந்த இடங்களை மாநில அரசுக்கு திரும்ப கொடுத்தது மத்திய அரசு. அந்த இடங்களில் நீட் தகுதிபெறாத மாணவர்களைக்கொண்டு சமீபத்தில் நிரப்பியது மாநில அரசு. இந்த முறையிலேயே தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லுாரிகளில் நீட் தகுதி இழப்பால் நிரப்பப்படாமல்  உள்ள காலியிடங்களை மாநில அரசு கேட்டுப்பெற்று அந்த இடங்களில் இவர்களுக்கு ஒதுக்கலாம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

நீட் தகுதியிழப்பு அடைந்தவர்களில் பலர் போதிய வருவாய்க்கொண்டவர்கள் உள்ளனர். இந்த இடங்களை நேரடியாக மாநில அரசு ஒதுக்கீட்டின்படி ஒதுக்க சிக்கல் ஏதும் இருந்தாலும் பேமண்ட் சீட் என்ற அடிப்படையில் ஒதுக்கலாம். இப்படி செய்வதால் நீட் தகுதி தேர்வினால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு மருத்துவக்கனவு நிறைவேறும். அப்படியில்லாதபோது இந்த இடங்கள் நிரப்பப்படாமல் இந்த ஆண்டு வீணாகவே செய்யும். தனியார் நிகரிநிலை பல்கலைக்கழகங்களும் நிரப்பப்படாமல் விடுபட்டுள்ள இடங்களை தமிழக அரசு கேட்டு பெறலாம்.

இதனிடையே நேற்று இரவு தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் சில அரசுக்கு 300 இடங்களை திருப்பி ஒப்படைத்துள்ளன.

“ 30 ந்தேதிக்குள் மருத்துவப்படிப்பு தொடர்பான பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கும் நிலையில் தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து நல்லதொரு முடிவை எடுக்க குறைந்த கால அவகாசமே மாநில அரசுக்கு உள்ளது. இதனால் உடனடியாக சுயநிதி கல்லுாரிகளுடன் கலந்துபேசி இதற்கு தீர்வு காணவேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் சர்ச்சை எழுந்தபோது மாநில அரசுகள் விரும்பினால் தங்கள் மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கலாம் என யோசனை தெரிவித்திருந்தது. அதையும் அரசு கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றது பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பு.

நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்கவேண்டியது தமிழக அரசின் கடமை. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

- எஸ்.கிருபாகரன்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ