Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சீட்டுக்காக போராடுவதை விட செல்போன் டவரே மேல்!" -இது அ.தி.மு.க. மகளிரணி அதிர்ச்சி

சென்னையில் கவுன்சிலர் சீட் கிடைக்காத விரக்தியில் செல்போன் டவரில் ஏறியும், உண்ணாவிரத போராட்டத்திலும் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
  
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதிலிருந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை 127வது வார்டில் கவுன்சிலர் சீட் கிடைக்காத விரக்தியில் வட்டச் செயலாளர் சேகர் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அடுத்து 128, 129 ஆகிய வார்டுகளில் சீட் கிடைக்காத மகளிரணியினர் ராயபேட்டை தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இன்று மகளிரணியினர் வடபழனியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீஸார் தடியடி நடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மகளிரணி நிர்வாகிகள் ஸ்ரீதேவிபாண்டியன், ஜெயந்தி ஆகியோர் கூறுகையில், "மாவட்டச் செயலாளர் ரவி, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கவுன்சிலர் சீட் கொடுத்துள்ளார். இதைக்கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டால் போலீஸார் அதை தடுக்கின்றனர். ஆண் நிர்வாகிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பெண் நிர்வாகிகள் மீது தடியடி நடத்துவோம் என்று போலீஸார் கூறினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். அடுத்து புகார் மனுக்களை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம். இருப்பினும் எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்" என்றனர்.

இதற்கிடையில் 158வது வார்டில் சீட் கிடைக்கவில்லை என்று நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே உள்ள 100 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர் அ.தி.மு.க.வினர். 158வது வார்டு பெண்கள் வார்டாக மாற்றப்பட்டது. இதனால் தற்போதைய கவுன்சிலர் சேகரின் மனைவி கவிதாவுக்கு அந்த வார்டில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இது வட்டச் செயலாளர் பர்மா கண்ணன் தரப்பினர் அதிருப்தியடைந்தனர். இதனால் இன்று நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் எதிரில் உள்ள இரண்டு செல்போன் டவர்களில் பர்மா கண்ணனின் தம்பி மணிகண்டன் பாபு, உறவினர்கள் தினகரன், தேவகுமார் ஆகியோர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழே இறங்கும்படி மைக்கில் தெரிவித்தனர். அடுத்து தீயணைப்பு வீரர்கள் மூலம் அவர்களை கீழே இறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைப்பார்த்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "யாராவது மேலே ஏறினால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்" என்று மிரட்டினர். தொடர்ந்து "மாவட்டச் செயலாளர் வந்து வேட்பாளர் கவிதாவை மாற்றுவதாக உறுதியளித்தால் மட்டுமே கீழே இறங்குவோம்" என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காலை 7.30 மணிக்கு ஏறியவர்கள் முற்பகல் 11 மணிக்கு இறங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நோட்டீஸ் 

உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக 128, 129 வது வட்ட மகளிர் அணி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அம்மா அவர்களுக்காக உழைத்தவருக்கு வாய்ப்பு இல்லை. பணம் இருந்தால் வி.என்.ரவியிடம் கவுன்சிலர் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  


எஸ்.மகேஷ் 

படங்கள்: எம். உசேன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ