Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த கோயிலுக்கு எந்த 'மதம்' என கோவைக்கு தெரியுமா?

'நான் இந்த மதம் நீ அந்த மதம்' என இப்போது கோவை மோதிக் கொண்டிருக்கிறது. கலவரத்தில் ஈடுபடுகிறது. வெடிகுண்டுகளை வைத்து மனிதர்களைக் கொல்கிறது.உயிரோடு எரிக்கிறது. கடைகளைத் தாக்குகிறது. வாகனங்களை புரட்டிப் போடுகிறது. மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் பதற்றமான நகரம் என பெயர் எடுத்திருக்கிறது.

ஒரு காலத்தில் இந்தியாவில் வேறு எந்த மண்ணிலும் இல்லாத இந்து - முஸ்லிம் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக  விளங்கியது கொங்கு மண். இந்தக் கால கோவை நகரம் அதனை மறந்தே விட்டது .

கோவையை அடுத்த அவினாசி அருகே ஒரு கிராமத்துக்கு சென்றால் ஒரு சிறிய மாரியம்மன் கோயிலை காணலாம். அந்த கோவில் சற்று வித்தியாசமாக காணப்படும். வழக்கமாக இந்து கோயில்களில் கோபுர கலசங்கள்தான் இந்து முறைப்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த கோயில் கோபுரம் மட்டும் மசூதிகளில் இருப்பது போல, கலசம் இருக்கும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இந்த கோயில் கட்டப்பட்டது.  இந்த கோயில் கட்டப்பட்டதற்கும் ஒரு சுவாரஸ்ய பின்னணி இருக்கிறது.

மைசூர் மன்னர் ஹைதர்அலி கொங்கு மண்ணை கைப்பற்றிய சமயத்தில், அவரது ராணுவ வீரர்களைத் தங்க வைக்க ஏராளமான காலனிகளை ஏற்படுத்தினார். அவினாசி அருகேயும் ஒரு காலனி உருவானது. இந்த காலனி கொங்கு மண்ணில் வடக்கு மற்றும் தெற்கு கிராமங்களை இணைக்கும் முக்கிய இடத்தில் அமைந்திருந்தது. அவினாசியில் இருந்து சத்தியமங்கலம் சென்று அங்கிருந்து எளிதாக ஹைதர் அலியின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டிணத்துக்கும் மிக வேகமாக சென்று விட முடியும். அதனால், அவினாசி பகுதிக்கு ஹைதர் அலி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அந்த கால நிர்வாக முறைப்படி, ஒவ்வொரு கிராமங்களையும் நிர்வகிக்க வரி வசூலிக்க கிராம நிர்வாக அதிகாரிகளை ஹைதர் அலி நியமிப்பது வழக்கம்.

அவினாசி அருகே அமைக்கப்பட்ட காலனிக்கு ராவுத்தர் என்பவரை ஹைதர் அலி கிராம நிர்வாக அதிகாரியாக நியமித்திருக்கிறார். புதியதாக நியமிக்கப்பட்ட ராவுத்தர் கருணை உள்ளம் கொண்டவர்.  காலனி மக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொண்டார். முக்கியமாக வரிவிதிப்பில் கருணையுடன் நடந்து கொண்டார். ஏராளமான  மக்கள் நலத்திட்டங்களை செய்தார். அப்போதிருந்தே கொங்கு மண் வர்ததகத்திற்கு பெயர் போனது. அவினாசி முக்கிய சந்திப்பு என்பதால், இந்த வழியாகத்தான் அனைத்து வணிகர்களின் வண்டிகள் செல்லும். பெருஞ்சாலைகளில் வணிகர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவும் கொள்ளைக் கும்பலும் உலவும். அந்தக் கொள்ளைக் கும்பல்களை எல்லாம் ராவுத்தர் ஒழித்துக்கட்டினார். அதனால், வணிகர்கள் பயம் இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபட முடிந்தது.

இப்படி தனது நற்செயல்களால் மக்கள் மனதில் இடம் பிடித்த ராவுத்தருக்கும் ஒரு பிரச்னை வந்தது. அவரது குழந்தையை 'சிக்கன்பாக்ஸ்' எனப்படும் சின்னம்மைத் தாக்கியது அப்போதெல்லாம் சின்னம்மை வந்தால் 'மாரியத்தா உடல்ல இறங்கியிருக்கா' என்பார்கள். 'அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்து அவளை வேண்டிகிட்டா போயிடுவா ' எனவும் கூறுவது உண்டு.

ராவுத்தரிடமும் சிலர் 'மாரியாத்தா குழந்தை மேல வந்திருக்கா' என்றனர். ராவுத்தருவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஆனாலும் மனதில் நினைத்துக் கொண்டார், 'தாயே எனது மகளை குணப்படுத்தி விடு... நான் உன் நினைவாக உனக்கு கோயில் கட்டுகிறேன் ' என வேண்டிக் கொண்டார். குழந்தை ஆச்சரியமான வகையில் வெகு விரைவாக குணமடைந்தது. இதையடுத்து, ராவுத்தர் தனது வேண்டுகோளின்படி, அந்த காலணியில் மாரியம்மனுக்கு சிறிய கோயில் கட்டினார்.இஸ்லாமியன் மாரியாத்தாவுக்கு கோயில் கட்டினான் என்பதற்கு அடையாளமாக கோயில் டூம் மட்டும் இஸ்லாமிய முறையில் அமைத்தார்.

தனது அறச் செயல்களாலும் சமூக நல்லிணக்கப் பணிகளாலும் அந்த கிராம மக்களின் இடம் பிடித்த ராவுத்தர் மறைந்த பிறகு, அவரது பெயரையே அந்த கிராமத்துக்கு மக்கள் சூட்டினர். அந்த கிராமம்தான் ராவுத்தர்பாளையம். இப்போதும் இந்த கிராமத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ராவுத்தன்'' என்று பெயர் சூட்டும் பழக்கம் இருக்கிறது.

-எம்.குமரேசன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ