Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சாமுவேல் பார்வையிலிருந்து தப்பவே முடியாது'..! இளம்பெண்களின் கண்ணீர் வாக்குமூலம்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பி.இ பட்டதாரி சாமுவேலை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிந்தாரிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். சாமுவேலிடம் விசாரித்த பெண் போலீஸாருக்கே, அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் சமூகவலைத்தளங்கள் மூலம் இளம்பெண்கள், பெண் இன்ஜினீயர்களை சாமுவேல் தன்னுடைய வலையில் வீழ்த்தி இருக்கிறார். 
 
யார் இந்த சாமுவேல்? 

சென்னை மயிலாப்பூரில் குடியிருந்த சாமுவேலுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். அந்த நண்பர்களின் பெற்றோர் சமுதாயத்தில் பிரபலமானவர்கள். இதனால் எப்போதும் பார்ட்டி, ஜாலி டிரிப் என்றே வலம் வரும் சாமுவேல் நட்புக்கூட்டம். பள்ளிப் பருவத்திலிருந்தே ஜாலியாக சென்ற சாமுவேலின் வாழ்க்கை, இன்ஜினீயரிங் கல்லூரிக்குச் சென்றதும் இன்னும் ஜாலியானது. கல்லூரிக்கு சரிவர செல்வதில்லை. அதிகநாட்கள் விடுமுறை எடுத்ததால் கல்லூரி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. மகனின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்று மீண்டும் சாமுவேலின் தந்தை, கல்லூரிக்கு சேர்ப்பதும், அவர் செய்யும் தவறுகளுக்கு கல்லூரி நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையானது. இதனால் இன்ஜினீயரிங் படிப்பு பாதியில் நின்றது. இருப்பினும் நண்பர்களுடன், சென்னை மட்டுமல்ல பெங்களூரு என பல இடங்களுக்கு சிறகு விரித்த பறவைப் போல வலம் வந்துள்ளார் சாமுவேல். 

படம் எடுப்பது எப்படி?

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் சாமுவேலுக்கு அறிமுகமான சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த அந்த பட்டதாரி பெண்ணும் சாமுவேலும் முதலில் நட்பாகவே பழகியுள்ளனர். பிறகு சாமுவேல், அந்த பெண்ணுடன் சேர்ந்து நெருக்கமான புகைப்படத்தை ரகசியமாக எடுத்துள்ளார். புகைப்படம் எடுப்பது எப்படி என்று சாமுவேல் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். போனில் இளம்பெண்களுடன் பேசி அவர்களை குறிப்பிட்ட சில இடங்களுக்கு வரச் சொல்வார். அவர்கள் வருவதற்கு முன்பு செல்போன் கேமரா மற்றும் ரகசிய கேமராக்களை அந்த அறையில் ஆன் செய்து வைத்துவிடுவாராம். அவர்கள் அப்போது நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகிவிடுமாம். அதை அந்த பெண்கள் வெளியே சென்றபிறகு பார்த்து ரசிப்பாராம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மற்ற பெண்கள் புகார் கொடுக்காதது ஏன்?

இந்த புகைப்படங்கள் வெளியானதால் இப்போது சாமுவேல் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார். ஆனால், சிந்தாரிப்பேட்டை இளம் பெண்ணைத் தவிர இன்னும் 10 பெண்களுடன் சாமுவேல் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ளன. ஏன் அவர்கள் சாமுவேல் மீது புகார் கொடுக்கவில்லை என்பது கேள்விக்குறி. அவர்கள் யார் என்ற விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். சாமுவேலை குறித்து அவரது நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளது. சாமுவேலுடன் நெருக்கமாக பழகியப் பெண்களில் சிலருக்கு அவரது முழுவிவரமும் தெரியும். அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில பெண்கள் சாமுவேலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து சிரித்துள்ளனர். இதனால் சாமுவேல் மீது யாரும் புகார்கள் கொடுக்கவில்லை என்று நண்பர்கள், போலீஸிடம் சொல்லி இருக்கிறார்கள். 
  
படங்களை அழிக்க கெஞ்சிய பெண் தரப்பு 

சாமுவேல் மீது போலீஸில் புகார் கொடுத்த பெண் தரப்பு புகார் கொடுப்பதற்கு முன்பு சாமுவேலின் தரப்பினரிடம் பேசியுள்ளனர். அப்போதுதான் சாமுவேல் தரப்பினருக்கு அவரது சுயரூபம் தெரியவந்துள்ளது. சாமுவேலிடம் இருந்த புகைப்படங்களை அழித்து விட அந்த பெண் தரப்பினர் முயற்சியும் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் சாமுவேலிடமே அவர்கள் கெஞ்சியுள்ளனர். ஆனால் அதற்குள் பல புகைப்படங்கள் வைரலாக பரவி விட்டன. அந்த புகைப்படத்தைப் பார்த்த பெண் தரப்பினர் கதறி அழுதனர். இதன்பிறகு போலீசில் அவர்கள் புகைப்பட ஆதாரத்தோடு புகார் கொடுத்துள்ளனர். அதை வைத்தே போலீஸார் சாமுவேலை தேடியுள்ளனர். அப்போது, பெங்களூருவில் உள்ள நண்பர் வீட்டில் சாமுவேல் தலைமறைவாக இருந்தார். இதனால் உறவினர்கள் மூலம் அவரை சென்னைக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர் சிந்தாரிப்பேட்டை மகளிர் போலீஸார். இதற்கு சாமுவேலின் தரப்பினர் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மேலும் ஃபேஸ்புக்கில் அழகாக இருக்கும் பெண்களுக்கு சாமுவேலிடம் இருந்து நட்பு அழைப்புச் செல்லும். அதன்பிறகு அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்துவிடுவார். அப்படித்தான் நானும் சிக்கினேன். சாமுவேலின் பார்வையிலிருந்து அழகான பெண்கள் தப்பவே முடியாது என்று புகார் கொடுத்த  பெண், போலீஸாரிடம் கதறி அழுதுள்ளார். 

'ஒரு பெண்ணை மட்டுமே காதலித்தேன்'

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சென்னை வந்த சாமுவேலை பிடித்து புகார் தொடர்பாக விசாரித்தோம். அப்போது அவர் செய்த தவறுகளை ஒத்துக் கொண்டார். ஆனால், அதை தவறு என்று சொல்லவில்லை. ஜாலிக்காகத்தான் இதை செய்ததாக கூலாக சொன்னார். மேலும், தான் ஒரே ஒரு பெண்ணை மட்டுமே காதலிக்கிறேன். மற்ற பெண்கள் எல்லாம் என் கேர்ள் ஃபிரண்ட்ஸ். அவர்களிடம் நெருக்கமாக நான் பழகியது அவர்களுக்கும் தெரியும். இதனால் நான் யாரையும் ஏமாற்றவில்லை என்று தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் இந்த புகைப்படங்கள் எப்படி வெளியானது என்று எனக்குத் தெரியவில்லை. புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி பணம் கேட்டும் நான் யாரையும் மிரட்டவில்லை என்று எங்களிடம் தெரிவித்தார். அவரிடம் இருந்து கைப்பற்றிய செல்போனில் எந்த புகைப்படங்களும் இல்லை. மேலும் அந்த செல்போனும் தற்போது பயன்படுத்தும் நிலையில் இல்லை. அந்த செல்போனில் ரெக்கவரிசாப்ட்வேரைப் பயன்படுத்தி ஏதாவது படங்கள், வீடியோக்கள் இருக்கிறதா என்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

சாமுவேலின் தந்தை

சாமுவேலை கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த போது அவரது தந்தை அங்கு வந்தார். அவர், தன்னுடைய மகனின் செயலை அறிந்து கண்ணீர் விட்டு கதறினார். சாமுவேலுக்குத் தெரியாமல் இந்த புகைப்படங்கள் எப்படி வெளியானது என்று போலீஸார் விசாரணையில் களமிறங்கியுள்ளனர். அவரது ஃபேஸ்புக் ஐ.டி தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஃபேஸ்புக் வட்டாரத்தில் உள்ளவர்கள் குறித்த விவரம் எதுவும் போலீசுக்கு தெரியவில்லை. மேலும், சாமுவேலின் ஃபேஸ்புக் நட்பில் இருந்த நண்பர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அச்சத்தில் பெண் இன்ஜினீயர்கள் 

சாமுவேல் ஃபேஸ்புக் நட்பு வட்டாரத்தில் அதிகம் இருப்பவர்களில் அவர் படித்த கல்லூரியை சேர்ந்த பெண் இன்ஜினீயர்களே. அவர்களுடனும் சாமுவேல் அதிக நெருக்கத்தில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் படமும் வெளியாகிவிடுமா என்ற அச்சம் சாமுவேலுடன் நெருக்கத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சாமுவேல் மற்றும் அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம்பெண்களின் நெருக்கமான படங்கள் மட்டும் இப்போது வைரலாக சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் இளம்பெண்களின் முகங்கள் தெளிவாக இருக்கின்றன. இதனால் அந்தப்படத்தில் உள்ள இளம்பெண்களின் குடும்பங்களிலும் சிக்கல் எழுந்துள்ளது. அவர்கள் தரப்பினர் அந்த புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உதவியை நாட உள்ளனர்.

இன்னும் பல புகைப்படங்கள்

சாமுவேல் மற்றும் இளம்பெண்களின் புகைப்படங்கள் அனைத்தும் கடந்த ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டவைகள். இதன்பிறகு சாமுவேலுடன் யாரும் நெருக்கத்தில் இருந்தார்களா, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது யாரிடமும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சாமுவேலிடம் இன்னும் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கின்றனர். அவர்களது புகைப்படங்கள் வெளிவராமல் தடுக்கும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீஸாருடன் இணைந்து சிந்தாரிப்பேட்டை மகளிர் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ