Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ஸ்டாலின் சொல்வதுதான் இறுதிக் கணக்கு!' -'கறார்' கருணாநிதி; கலங்கும் காங்கிரஸ் 

ள்ளாட்சித் தேர்தலில் 7 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது தி.மு.க தலைமை. ' சட்டமன்றத் தேர்தலைவிடவும் அதல பாதாளத்திற்கு கட்சி சென்றுவிட்டது' எனப் புலம்புகின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். 

சட்டமன்றத் தேர்தலில் எட்டு இடங்களை வென்று, மூன்றாவது பெரிய கட்சியாக சபையில் அமர்ந்தது காங்கிரஸ். அதற்கேற்ப, ' நாற்பது சதவீத இடங்களையாவது உள்ளாட்சியில் பெற்றுவிட வேண்டும்' எனக் களத்தில் குதித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், தி.மு.க தலைமை அறிவித்த இடங்களில் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டனர் கதர் தொண்டர்கள். ' எம்.எல்.ஏ, எம்.பி தேர்தலில் தலைவர்கள் போட்டியிடும்போது வேண்டிய தொகுதிகளைப் பெற்றுவிடுகின்றனர். தொண்டர்கள் அனைவரும் உள்ளாட்சியை மட்டும்தான் நம்பியுள்ளனர். எங்களுக்காக பேசுவதற்குத் தலைமையும் தயாராக இல்லை. எனவே, தி.மு.க போட்டியிடும் வார்டுகளில், அவர்களை எதிர்த்து நாங்கள் நிற்போம்' என்ற எதிர்க்குரல் காங்கிரஸில் தலைதூக்கியுள்ளது. வார்டு பங்கீட்டில் திருப்தி இல்லாததால், நேற்று அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர். 

காங்கிரஸ் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ' சென்னையில் உள்ள 200 வார்டுகளில் எட்டு சீட்டுதான் ஒதுக்க முடியும்' என தி.மு.க தலைமை உறுதியாக இருந்தது. ' ஏற்கெனவே வென்ற 2 வார்டுகளோடு மேலும் நான்கு வார்டுகள் என 14 சீட்டுகளைத் தருகிறோம்' என இறுதியில் முடிவாகியுள்ளது. தலைவரும் ஏற்றுக் கொண்டு வந்துவிட்டார். இதன்பின்னரும், மாநிலம் முழுவதும் உள்ளாட்சியில் கூடுதல் இடங்களைப் பெறுவதற்காக, கருணாநிதியை சந்திக்கும் முடிவில் இருந்தார் திருநாவுக்கரசர். இதற்குப் பதில் அளித்த தி.மு.க தலைமை, ' உள்ளாட்சியைப் பொறுத்தவரையில், ஸ்டாலின் எடுப்பதுதான் இறுதி முடிவு. அவரிடமே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என கருணாநிதி உறுதியாகக் கூறிவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவதற்கு தி.மு.க விருப்பம் காட்டவில்லை. ' மாவட்ட செயலாளர்களிடம் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். 

மாவட்டங்களில் தி.மு.க நிர்வாகிகளோடு கெஞ்சிக் கூத்தாடி சீட் வாங்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் சார்பில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட விருப்ப மனு வாங்குவதற்கு 25 பேர்கூட வரவில்லை. அந்தளவுக்குத்தான் கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், ' பத்து சதவீத இடங்களாவது கிடைக்கும்' என நம்பினோம். இப்போது ஏழு சதவீதத்திற்கும் குறைவாகவே வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல நகராட்சிகளில் ஓர் இடம் பெறுவதற்கே போராடிக் கொண்டிருக்கிறோம். ' எந்த வார்டுகளில் தி.மு.க தோற்கும்' என நினைக்கிறார்களோ, அந்த வார்டுகளை எங்களுக்கு ஒதுக்குகின்றனர். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் மூன்று வார்டுகள் மட்டுமே எங்களுக்கு ஒதுக்கப்பட்டன. 

இதுகுறித்த அதிருப்தியை திருச்சி நேருவிடம்வெளிப்படுத்தினோம். ' எட்டு வார்டுகளாவது தாருங்கள்' எனக் கேட்டோம். இதற்கு மேல் தருவதற்கு அவர் மறுத்துவிட்டார். சேலத்தில் 60 வார்டுகளில் 5 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. 2006 உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க எங்களுக்கு ஒதுக்கிய இடங்களில் பாதி அளவுக்குக் கூட இப்போது தரவில்லை. தி.மு.கவின் செயல்பாடு குறித்து, அகில இந்திய தலைமையின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். டெல்லித் தலைமையோ, ' அவர்கள் கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொள்ளுங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்' என அறிவுறுத்திவிட்டது. தொண்டர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் திருநாவுக்கரசர்" என்றார் ஆதங்கத்தோடு. 

' தி.மு.கவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியிலேயே போட்டி வேட்பாளர்கள் களத்தில் நின்றால், அது அ.தி.மு.கவுக்கே சாதகமாக முடியும்' என்ற குரல்களும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் எதிரொலிக்கிறது. 

-ஆ.விஜயானந்த் 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ