Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலக்கத்தில் முடிந்த காவிரி கூட்டம்..! என்ன சொல்ல வருகிறார் உமாபாரதி?

டெல்லியில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி தலைையில் நடந்த காவிரி நீர் பங்கீட்டு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட இருமாநில அரசுகளின் கருத்துக்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி விவகாரம் தொடர்பான கூட்டம் டெல்லியில் இன்று மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது. உண்மை நிலையை அறிய மத்திய அரசு நிபுணர் குழு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் கர்நாடகவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். 2015-16ம் ஆண்டு நீர்பருவ ஆண்டு மிக மோசமானதாக அமைந்துள்ளது என்று பேசினார். 

கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உரையை தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் படித்தார். அதில், "உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கர்நாடகா தொடர்ந்து மீறினாலும், நீதிமன்ற வழிகாட்டுதலை ஏற்று தமிழகம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. மாநிலங்களுக்கு இடையே காவிரி நதியை, தனக்கே உரியதாக கர்நாடகா கருதுகிறது. இது தொடர்பான வழக்கில் 1991ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்த வரிகளை மேற்கோள் கொள்ளலாம். மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நிதியை ஒரு மாநிலத்தில் இடம் பெற்றிருப்பதாக கருதக்கூடாது. அதன் நீரோட்ட அடிப்படையில் எந்த மாநிலமும் தனி உரிமை கொண்டாடக்கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான நதிகளில் அனைத்து மாநிலங்களுக்கும் சமஉரிமை உள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் உள்ள உரிமையை பறிக்கும் வகையில் திட்டமிட்டு கர்நாடகா ஈடுபடுகிறது. மத்திய அரசால் பயனில்லாததால், தமிழக உரிமையைப் பெற நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வழியில்லை. வெள்ளக் காலங்களில் தனது அணைகளைக் காப்பாற்ற தண்ணீரைத் திறந்து விடுகிறது கர்நாடகா. மற்ற காலங்களில் நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா நடந்து கொண்டதில்லை. விவசாயத்துக்கு காவிரி நீரை நம்பியுள்ள தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் மூலமே நீதி கிடைத்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். கர்நாடகா தண்ணீர் தர மறுப்பதை நீதிமன்ற அவமதிப்பதாக கருத வேண்டும்.  டெல்டா பகுதியில் ஒருபோக சம்பா பயிரையாவது காப்பாற்ற தண்ணீர் திறப்பது அவசியம். கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் உமாபாரதி, "தமிழகத்திற்கு தண்ணீர் திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கூறியிருந்தார். ஆய்வு செய்ய தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை. இருதரப்பு கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன. இந்த இரு கருத்துகளும், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்" என்று கூறினார்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் அளித்த 4 வார கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் கூறினார்.  

சகாயராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close