Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கே போனது ரூ.5.75 கோடி? கொள்ளையர்கள் கொடுத்த அதிர்ச்சி! 

சேலத்திலிருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரசின் ரயிலின் மேற்கூரையை துளைப்போட்டு நடந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸாருக்கே அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள் கொள்ளையர்கள். கொள்ளை நடந்த ரயில் பெட்டியில் எந்தவித கைரேகைகளும் கிடைக்காதது போலீஸாருக்கு கொள்ளை சம்பவம் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

சேலத்திலிருந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை எழும்பூருக்குப் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸில் 5.75 கோடி ரூபாய் கொள்ளைப்போனது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். 50 நாட்களாகியும் கொள்ளையர்களை குறித்து எந்தவித தடயங்கள் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ரயில் கொள்ளை சம்பந்தமாக தனிப்படைகள் வெளிமாநிலங்களில் முகாமிட்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். முக்கியமான தகவல்கள், தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களின் உருவங்கள் கூட கிடைக்காமல் கொள்ளையர்களைத் தேடி வருகிறோம். இதனால் கொள்ளைப் போன ரயில் பெட்டிகளில் உள்ள கைரேகை மூலம் கொள்ளையர்களைத் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது கொள்ளைப்போன ரயில் பெட்டியிலிருந்து எந்த கைரேகையும் கிடைக்கவில்லை. இது எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு இடத்தில் கைரேகைப்பதிவு கிடைக்கும். ஆனால் இந்த ரயில் கொள்ளையில் எந்தவித கைரேகையும் பதிவாகவில்லை என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கைதேர்ந்த கொள்ளையர்களால் மட்டுமே இது போல செயல்பட முடியும். இதனால் இந்த வழக்கை வேறு கோணத்தில் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து கைரேகைப்பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், "ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பெட்டியை அங்குலம், அங்குமாக ஆய்வு செய்து கைரேகைகளை பதிவு செய்தோம். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு மரப்பெட்டிகள் மற்றும் துளையிடப்பட்ட ரயில் மேற்கூரை ஆகியவற்றிலும் கைரேகைகள் இருக்கிறதா என்று பார்வையிட்டோம். ஆனால், அதில் எந்த ரேகையும் இல்லை. இதனால் கொள்ளையர்கள் கைகளில் கையுறை அணிந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்க வேண்டும்" என்றனர்.

பெயரை வெளியிட விரும்பாத கைரேகை நிபுணர் ஒருவர் கூறுகையில், "கண்ணாடி போன்ற பொருட்களில் கைரேகை எளிதில் பதியும். ஆனால், மரப்பொருட்களில் கைரேகை பதிவது கடினம். ரயிலின் மேற்கூரையில் கொள்ளையர்களின் கைரேகைகள் பதிந்திருந்தாலும் காற்றின் வேகம், தட்பவெட்பநிலை, பொருளின் தன்மை ஆகியவற்றால் அவைகள் அழிந்து விட வாய்ப்புள்ளது. இந்த ரயில் கொள்ளையிலும் மேற்கூரையில் கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி இருந்தாலும் காற்றின் வேகத்தின் காரணமாக அது அழிந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் ரயில் கொள்ளையில் எந்தவித கைரேகையும் கிடைக்கவில்லை. மேலும் பணம் கொண்டு வரப்பட்ட மரப்பெட்டிகளிலும் கைரேகைகள் பதிவாகவில்லை" என்றார். 

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ