Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழைக்கு முன், பக்கிங்காம் கால்வாய்க்கு விடிவு பிறக்குமா?

டந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையை தமிழகத்தில் உள்ள பிற மாவட்ட மக்கள் எளிதில் மறந்து போயிருக்கலாம். ஆனால், சென்னை மக்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தலைநகர் மக்களுக்கு பலவித துயர அனுபவங்களை கொடுத்த மழை அது. அந்த பெருமழைக்கு பிறகே, சென்னை பெருநகரத்தின் முறையற்ற கட்டமைப்பு பற்றியும், ஆக்கிரமிப்புகள் பற்றியும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற்றது. தாங்கள் முறையற்ற கட்டமைப்புகளில் வாழ்ந்து கொண்டிருப்பதை மக்களையே உணர வைத்தது. சென்னை மழையை வைத்தே தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களே வழக்கு தொடுப்பது, போராட்டங்கள் செய்வது என்று ஈடுபட்டு வருகிறார்கள். அரசுத் துறைகளும் சற்றே சுறுசுறுப்படைந்துள்ளன.

ஆனால் சென்னையில் கடந்த பெருமழைக்கு பிறகு, நீர்நிலைகள் பாதுகாப்பில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று சூழலியலாளர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். சென்னை பெரு வெள்ளத்துக்கு முக்கிய காரணங்களில் தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லை என்பதும் ஒன்று. இதற்கு ஆக்கிரமிப்புகள் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இன்னொன்று பக்கிங்காம் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற வழியில்லை என்பதையே முக்கிய காரணமாக முன் வைக்கிறார்கள் சூழல் செயற்பாட்டாளர்கள். குறிப்பாக தென்சென்னை பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு பக்கிங்காம் கால்வாயை சீரமைக்கப்படாததே காரணம் என்கிறார்கள்.

மழைக் காலம் தொடங்கிவிட்டதால், சென்னை மாநகரில் ஓடும் நீர்வழிப் பாதைகள் குறித்து பல்வேறு அமைப்புகளும் அரசை நோக்கி கேள்விகள் கேட்டு வருகின்றன. கடந்த மழையின்போது வெள்ளத்துக்கு காரணமாக இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகள், கால்வாய்கள், ஏரிகள் சரிசெய்யப்பட்டு விட்டனவா? மீண்டும் ஒரு பெருமழை வந்தால் சென்னை தாங்குமா உள்ளிட்ட கேள்விகளை பல தன்னார்வ அமைப்புகள் கூட்டங்களை நடத்தி மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது.


சதுப்புநில நீர் வெளியேறும் பக்கிங்காம் கால்வாய்:

அண்மையில் சூழலியல் மற்றும் நகர சார்பியம் என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் பக்கிங்காம் கால்வாய் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் உதயராஜன் பேசும்போது, “சென்னையில் இருக்கிற அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி சீரமைத்தாலும், பக்கிங்காம் கால்வாயை சீரமைக்காவிட்டால் சென்னையில் வெள்ளப்பெருக்கு கண்டிப்பாக ஏற்படும். ஏனென்றால் தென்சென்னையின் பெருவாரியான தண்ணீர் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளின் வழியாக சென்று பக்கிங்காம் கால்வாயை அடைகிறது. பக்கிங்காம் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் முட்டுக்காடு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பக்கிங்காம் கால்வாய்தான் முக்கிய வழியாக இருந்து வருகிறது.

இதேபோன்று வடசென்னையில் ஓடும் ஒட்டேரி நல்லா, கேப்டன் கார்ட்டன் ஆகிய கால்வாய்களின் தண்ணீரும் பக்கிங்காம் கால்வாயைத்தான் சென்றடைகிறது. கூவம், அடையாறு ஆறுகளைவிட பக்கிங்காம் கால்வாய் வழியாகத்தான் கூடுதல் தண்ணீர் வெளியேறுகிறது. ஆனால், இந்த இரண்டு ஆறுகளில் இருக்கும் கழிவுகளைவிட பக்கிங்காம் கால்வாயில் கழிவுகள் அதிகமாக உள்ளன. சென்னையில் 45 கி.மீ. தொலைவுக்கு ஓடும் பக்கிங்காம் கால்வாயில் 1970 வரை ஓரளவுக்கு பராமரிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. சொல்லப்போனால் நிலத்தடிநீர்மட்டத்தில் கடல்தண்ணீர் கலக்காமல் காப்பாற்றும் வேலையை பக்கிங்காம் கால்வாய் செய்து வருகிறது. இல்லையென்றால் பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்துவிடுவது போன்று மற்ற பகுதிகளிலும் இதேபோன்று நிகழ வாய்ப்பிருக்கு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, இந்த கால்வாயின் வழியாக சென்னை மாநகரின் 50 சதவிகித மழைத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கால்வாயை சீரமைக்காவிட்டால் சென்னை இன்னொரு பேரிடரை சந்திக்க நேரிடும்" என்றார்.

பக்கிங்காம் கால்வாய் சீரமைப்பில் ஊழல்?


இதேபோன்று பக்கிங்காம் கால்வாய் முறையாக அகலப்படுத்தபடவில்லை. அதில் பணிகள் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட நிதியிலும் ஊழல் நடந்துள்ளது என்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறது அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு.

இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்ராம் வெங்கடேசன் பேசும்போது, "பக்கிங்காம் கால்வாய் மீது வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் பாதையை அமைக்கும்போதே அதன்மீது மிகப் பெரிய ஆக்கிரமிப்பு அரங்கேறியது. அடையாறு, கூவம் ஆறுகளில் உபரித் தண்ணீர் இந்த கால்வாய் வழியாகத்தான் வெளியேறி கொண்டிருந்தது. பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, வேளச்சேரி ஏரி, மடிப்பாக்கம் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளின் தண்ணீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்து, ஒக்கியம் மடுவு வழியாக பக்கிங்காம் கால்வாயை வந்தடையும். கால்வாயிலிருந்து தண்ணீர் கடலை சென்றடையும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் கடந்த 2009-ம் ஆண்டு, ஒக்கியம் மடுவிலிருந்து முட்டுக்காடு வரையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் 13 கி.மீ. தொலைவுக்கு அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.78 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகள் 2012 மற்றும் 13-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. அதாவது கால்வாயின் அகலத்தை 20 மீட்டரிலிருந்து 100 மீட்டராக அகலப்படுத்துவதாக திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. இதில் நாலரை கிலோமீட்டருக்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீதி 8 கிலோமீட்டருக்கு 25-லிருந்து 40 மீட்டர் வரைக்குமே அகலப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக ஒதுக்கப்பட்ட 78 கோடியில் பொதுப்பணித்துறை செய்திருக்கும் பணிகளோடு ஒப்பிடும்போது 39 கோடிக்கு மட்டுமே பணிகள் நடந்துள்ளன. மீதி 39 கோடி என்ன ஆனது என்றே தெரியவில்லை.நீர்த்தேக்கங்களுக்கு வழங்கும் முக்கியத்துவம் தண்ணீர் வெளியேறும் பகுதிகளுக்கு வழங்குவது இல்லை.கடந்த மழைக்கு பிறகு மாநகராட்சியின் மூலம் மழைநீர் வடிகால் பாதைகள் தூர்வாரப்பட்டுள்ளது. ஆனால், நீர்வழி பாதைகளில் குப்பைகள், கழிவுகள் அடர்ந்துள்ளன. ஆக்கிரமிப்புகளும் பெரியளவில் அகற்றப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் சீரமைப்பு பணிகள்தான் நடந்து வருகின்றனவே ஒழிய, மழை வெள்ளத்துக்கு காரணமான நீர்வழிப் பாதைகளில் எந்த வேலைகளும் நடக்கவில்லை.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர புதுப்பித்தல் இயக்கம் என்ற திட்டத்தின் சார்பாக 2009-ம் ஆண்டில் பொதுப்பணித்துறைக்கு 633 கோடியும், சென்னை மாநகராட்சிக்கு 800 கோடியும் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகையை கொண்டு முறையாக நீர்நிலைகளை பாதுகாத்திருந்தாலே கடந்த மழையின்போது ஏற்பட்டிருந்த பாதிப்புகளை தடுத்திருக்கலாம். நாங்கள் அரசுகளிடம் கேட்பது, ஒதுக்கப்படும் தொகைக்கும், செயல்படுத்தப்படும் பணிகள் பற்றியும் வெளிப்படையாக தெரிவியுங்கள். இல்லையேல், வெப்சைட்டில் பதிவிடுங்கள் என்று கேட்கிறோம். அதை செய்ய மறுக்கிறார்கள். சரி... இந்த முறையாவது மழைக்கான பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்றால், பட்ஜெட்டின்போது மழை குறித்தான பணிகள் ஆவணப்படுத்தப்படும் என்று அறிவிக்கிறார்கள். அது என்னமாதிரி ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு என்னமாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் இதுவரை இல்லை" என்று என்று ஆதங்கப்பட்டார்.

சென்னையில் பெய்த தென்மேற்கு பருவமழையே அச்சுறுத்திவிட்டு சென்றிருக்கிறது. அடுத்து வரப்போகும் வடகிழக்கு பருவமழைக்குள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? பக்கிங்காம் கால்வாய்க்கு விடிவு பிறக்குமா?

பக்கிங்காம் கால்வாய் வீடியோ..

 

 

அ.முகமது யூசுப் (மாணவ பத்திரிகையாளர்)
படங்கள்: ப. சரவணக்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close