Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் மூடப்பட்ட அரசு பள்ளிகள் எத்தனை தெரியுமா?

 

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 மாவட்டங்களில் உள்ள 38க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 155 பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையத்தில் உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் சமீபத்தில் என்.ஜி.ஓக்கள் 155 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில், மூடப்படும் நிலையில் இருக்கும் 155 பள்ளிகளில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதில் 111 பள்ளிகளில் 25 க்கும் குறைவான மாணவர்களே பயில்கின்றனர். மேலும், 36 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். 37 சதவிகித பள்ளிகள் மேற்கூரை இல்லாமல் செயல்படுகின்றன. 77 சதவிகிதம் பள்ளிகள் ஆய்வகங்கள், கம்ப்யூட்டர் அல்லது நூலக வசதிகள் இல்லாமலும், 50 சதவிகிதம் பள்ளிகள் விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் இல்லாமலும், 38 சதவிகிதம் பள்ளிகள் பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாமலும், 75 சதவிகிதம் பள்ளிகள் போதிய வகுப்பறைகள் இல்லாமலும் உள்ளது தெரியவந்துள்ளது. 22 ஆரம்பப் பள்ளிகளில் ஒரு ஆசிரியரும், 103 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.


 இதையடுத்து இந்த ஆய்வு அறிக்கை பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து மூடப்படும் நிலையில் உள்ள பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அவற்றைத் தரம் உயர்த்தவோ அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைக்கவோ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்,


தாய் எட்டடி பாயந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பது போலத்தான் இந்த தேசிய கல்விக்கொள்கை இருக்கிறது. இங்கு இருக்கின்ற பள்ளிகளில் போதுமான வசதி இல்லை, ஆசிரியர்கள் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, செயல்பட தகுதியற்ற பள்ளிகள் என பட்டியலிட்டு அந்த பள்ளிகளை மூட முயற்சி செய்கிறார்கள். தற்போது அரசு முடிவெடுத்திருப்பது, ஆசிரியர்கள், மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை, அதாவது குறைந்த அளவே செயல்படும் நான்கைந்து பள்ளிகளை ஒரே இடத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.


காமராஜர் முதல்வராக இருந்த போது பொது மக்களின் நன்கொடை மூலம் பள்ளிகள் கட்டப்பட்டன. அந்த பள்ளிகள் தான் இப்போதும் அரசு பள்ளிகளாக செயல்படுகின்றன, அவற்றை அரசு  மூட முடிவெடுத்திருப்பது காமராஜருக்கு செய்யும் துரோகம்.
இது பொருளாதாரத்தில் பின் தங்கியிருப்பவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் செயலாகும். மேலும், பள்ளிகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் போது மாணவர்கள் வெகு தூரத்திலிருந்து படிக்க வரவேண்டிய சூழல் ஏற்படும். இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பானது கேள்விக் குறியாகிவரும் இன்றைய சூழலில் இந்த முயற்சியால் முதலில் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள். உலகத்தின் எந்த நாட்டிலும் இதுபோன்ற நடைமுறை கிடையாது.

இந்த பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக அப்பள்ளிக் கூடத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். வகுப்பிற்கு, பாடத்திற்கு, தேவையான ஆசிரியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என ஆட்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்"என்றார்.

-வே. கிருஷ்ணவேணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ