Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓயாத உள்ளாட்சி உள்குத்து..! அதிரும் அ.தி.மு.க

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் கடும் களேபரம் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியான நாளிலிருந்து ஆர்ப்பாட்டங்களுக்கு குறைவில்லை. குறிப்பாக ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வார்டுகளில் அறிவிக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதை எதிர்த்தும், வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்றும் கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆயிரம் விளக்கு மற்றும் திருவல்லிக்கேணி பகுதி அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக தலைமை அலுவலகமான ராயப்பேட்டைக்கு சென்று உறுப்பினர் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். விருகம்பாக்கம் மகளிரணியினர், மாவட்ட செயலாளர் ரவியை கண்டித்து தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் குதித்தனர். 

இதுகுறித்து மகளிரணியினர் கூறுகையில், "கட்சிப்பணிகளில் ஈடுபடாத மகளிரணியினருக்கு கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது போராட்டம் கட்சிக்கு எதிரானது அல்ல. 128, 129 பெண்கள் வார்டாக அறிவிக்கப்பட்டதால் கட்சிக்காக உழைத்த நாங்கள் வாய்ப்பு கேட்கிறோம். ஆனால், அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் சில மாவட்ட நிர்வாகிகளின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது" என்றனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் கூறுகையில், "தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் சீட் கிடைக்காதவர்கள் தேவையில்லாமல் மாவட்ட செயலாளருக்கு எதிராக செயல்படுகின்றனர். வடக்கு மாவட்டத்தில் கட்சியின் உறுப்பினர் அட்டையை ஒப்படைக்கப்போவதாக மிரட்டல் விடுத்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்கள் ஏன் உறுப்பினர் அட்டையை ஒப்படைக்கவில்லை. சீட் கிடைக்காதவர்கள், மாவட்ட செயலாளருக்கு எதிராக தேவையில்லாத தகவல்களை பரப்பி விடுகின்றனர். மருத்துவமனையிலிருந்து முதல்வர் வந்தபிறகு கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொரு கட்சியினரின் கடமை. அதற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கட்சித் தலைமை நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ