Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வதந்தியைப் பரப்புவது வாட்ஸ்அப் அல்ல... அரசாங்கம்தான்!

 


‘‘அண்ணே... மெட்ராஸ்ல இருந்து பெரியண்ணன் குடும்பத்தோட கிராமத்துக்கு வந்திருந்தாங்க. இப்ப தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்காங்க. நைட் ஒண்ணும் பிரச்னை இருக்காதே பத்திரமா போய் சேர்ந்துடுவாங்கதானே! ஏன்னா, கண்டபடி தகவல் வருது. அதான் சந்தேகமா இருக்கு. நீங்க மெட்ராஸ்லதானே இருக்கீங்க. கொஞ்சம் செக் பண்ணி சொல்ல முடியுமா?


''அங்கிள், நான் அரசன் பேசுறேன். ஈ.சி.ஆர்ல இருக்கிற எங்க ஐடி ஆபீஸ்ல இருந்து வெளியில போன ரெண்டு கேப் (வாடகைக் கார்கள்) திரும்பி வந்துடுச்சு. வெளியில நிலைமை சரியில்ல. போரூர்ல வேற ரெண்டு பஸ்ஸை எரிச்சுட்டாங்களாம். என்ன நடந்திட்டிருக்குனு கொஞ்சம் சொல்ல முடியுமா? நைட் ஷிப்டுனா பராவாயில்ல. பத்து மணிக்கு என் ஷிப்ட் முடிஞ்சு வீட்டுக்கு போகணும். நைட் எதுவும் பிரச்னை இருக்காதே?''
''தம்பி... ஒரு வேலையா இலங்கை வரை வந்திருக்கேன். வர்றதுக்கு நாலு நாள் ஆகும். அங்க பாப்பா வேலை பார்க்கிற கம்பெனியில பயந்து கிடக்கிறாங்க. ஷிப்ட் முடிஞ்சு வீட்டுக்குப் போகணும். வெளியில இருக்கற தகவல்கள் சொல்லிக்கிற மாதிரியில்ல. நீ கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட முடியுமா. ராத்திரி நேரத்துல தொந்தரவு பண்றதுக்கு மன்னிச்சுக்கோ''


-மேலே சொன்னவை வதந்திகள் அல்ல என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆம், கடந்த நான்கைந்து நாட்களாகவே தமிழகம் முழுக்க இப்படித்தானே பதைபதைத்து கிடக்கிறார்கள் தமிழக மக்கள். ஆளாளுக்கு போன் போட்டு, 'என்னாச்சு' என்று 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தைப் போல பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.


கடந்த திங்கள்கிழமை தொடங்கி, தினம் தினம் மாலை நேரத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி பரவி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பத்திரமாக செல்லுமாறு அறிவுறுத்தி, முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையை வைத்துப் பரவும் செய்திகள் காரணமாக தமிழகமே நிம்மதியைத் தொலைத்துக் கிடக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த பிரச்னைக்கும் காரணமே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பரவிக் கொண்டிருக்கும் வதந்திகளே என்று முடிவுகட்டி, 'வதந்தியைப் பரப்பினால் கைது நடவடிக்கை பாயும்' என்று எச்சரிக்கையை தமிழகக் காவல் துறை வெளியிட்டுக் கொண்டிருப்பதுதான் வேதனையை கிளப்புகிறது.


'வதந்தி' என்று இவர்களால் சொல்லப்படும் அனைத்துக்கும் காரணமே... ஜெயலலிதாவுக்கு என்னதான் பிரச்னை என்பதை வெளிப்படையாக பகிராமல், ஏதோ ராணுவ ரகசியம் போல தமிழக அரசாங்கம் என்கிற பெயரில் சிலர் கட்டிக்காப்பாற்றிக் கொண்டிருப்பதுதான் என்பது பெரும் ரகசியமா என்ன?
ரயிலில் பயணிக்கும்போது, 'ஜன்னல்கள் அனைத்தையும் மூடிக்கொள்ளுங்கள்' என்று ஒவ்வொரு பெட்டியாக போலீஸ்காரர் வந்து கேட்டுக்கொள்கிறார். ''போலீஸே வந்து சொல்றாங்க. அப்படினா நிலைமை சீரியஸாத்தான் இருக்கும்போல'' என்று பொதுஜனம் பேசிக்கொள்வது இயல்புதானே. இது அப்படியே பரவ ஆரம்பிப்பதும் சாதாரணம்தானே. இதை எப்படி வதந்தி என்பீர்கள்?


'முதல்வர் உடல் நிலை சீராக இருக்கிறது. விரைவில் வீடு திரும்புவார்' என்றே தினம் தினம் அப்போலோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வந்து கொண்டே இருக்கிறது. அந்த 'விரைவில்' என்பதற்கு அர்த்தம் என்ன என்று பொதுமக்கள் விவாதிக்க ஆரம்பித்தால், அதையும் வதந்தி என்பீர்களா?


தமிழகத்தில் யாராவது ஒரு தலைவர் கைது செய்யப்பட்டாலோ... ஒரு தலைவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனாலோ... அல்லது ஒரு தலைவர் மரணமடைந்தாலோ... கண்ணுக்கு முன்பாக நிற்பவர்களையும், நிற்பவற்றையும் அடித்து நொறுக்குவதுதானே வாடிக்கையாக இருக்கிறது. கடைகளில் புகுந்து சூறையாடுவதுதானே பழக்கமாக இருக்கிறது. இத்தகைய சூழலில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உறுதியான விவரம் ஏதும் தெரியாத நிலையில், ஆளாளுக்கு எதையாவது பேச ஆரம்பிக்கிறார்கள். கிடைத்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் பெரும்பாலானவை தவறான தகவல்களாகவேதான் இருக்கக்கூடும். ஆனால், கையில் வந்த தகவலை அசட்டை செய்ய முடியுமா? ஒருவேளை அசட்டையாக இருந்து நாளைக்கு வீதியில் நடமாடும்போது வில்லங்கம் தேடி வந்து நம் தலையில் உட்காரும்போது யோசிக்க முடியுமா?


அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. ‘மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய  ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக மூன்று பேரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம்‘ என்றொரு செய்தி அலையடிக்கிறது.


‘நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக முதல்வர் சிகிச்சை எடுத்து வருகிறார்’ என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்தான் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடுகிறது.
ஆனால், அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? அரசாங்கத்தின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை என்ன செய்கிறது? எங்கே கண்ணுக்குத் தெரியாத ஒரு கிராமத்தில் இருக்கும் கோணவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடுவதைக்கூட, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு என்று செய்தித்தாள்களில் ஒரு பக்கம் வருமளவுக்கு செய்தியை வெளியிடும் தமிழக செய்தித் துறை, ஒரு முதல்வர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் படுத்துக்கிடப்பதைப் பற்றி ஏன் தெளிவாக செய்தியை வெளியிடவில்லை.


மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வந்து முதல்வரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் என்று ஒரு செய்தி வருகிறது. ஆனால், அவர் சந்தித்த போட்டோ எதுவுமே வரவில்லை. அப்போலோ அருகே அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, பதில் எதுவும் சொல்லாமே காரைக் கிளப்பிவிட்டார். அவர் ஒரு மக்கள் பிரதிநிதி... மத்திய அரசின் அங்கம். அவரே ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?


'மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள சி.சி.யூ எனப்படும் க்ரிட்டிகல் கேர் யூனிட்டில் முதல்வர் அனுமதிக்கப்பட்டபோது அங்கே ஏற்கெனவே முப்பது பேர் சிகிச்சை எடுத்து வந்தனர். படிப்படியாக அவர்கள் அனைவரும் வேறு பிளாக்குகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். தற்போது இரண்டாம் தளத்தில் முதல்வர் மட்டுமே சிகிச்சை எடுத்து வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் அனைத்தும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் என அனைவரது செல்போன் எண்களும் பேச்சுக்களும் ஆராயப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து எந்தத் தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றெல்லாம் வரும் செய்திகளின் பின்னணி என்ன? இதில் எல்லாம் உண்மை இல்லை என்றால், மறுப்புகளை வெளியிட வேண்டியதுதானே!


கீழ்த்தள வாசல் வரை அனுமதிக்கப்படும் முன்னாள் அமைச்சர் வளர்மதி, உள்ளே போய் ஜெயலலிதாவிடமே கேட்டுவிட்டு வந்ததுபோல, ''அம்மா நிம்மதியா சந்தோசமா ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களுக்கு தொந்தரவு கொடுக்காதீங்க. நீங்க கூட்டம் போட்டுகிட்டு நின்னா... இவன் 10 பேர்கிட்ட சொல்லுவான்... அவன் 10 பேர்கிட்ட சொல்லுவான். தயவு செய்து கிளம்புங்க. தி.மு.க-காரன் பொய் பிரச்சாரம் செய்வான் கிளம்புங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.


ஜெயலலிதாவைச் சந்தித்து அதிகாரிகள் பலவிஷயங்களை விவாதித்ததாக செய்திகள் வருகின்றன. அப்படி விவாதித்தபோது எடுக்கப்பட்ட போட்டோக்களையாவது போடலாமே. அல்லது விவாதித்த அதிகாரிகளில் முக்கியமான ஒரு அதிகாரியாவது வெளியில் பேசலாமே?!
ஆகக்கூடி அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமல்ல, தமிழக அரசின் உயர் அதிகாரிகள்கூட ஜெயலலிதாவின் உடல் நிலையைப் பற்றி துளிகூட அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.


உடல்நிலை சரியில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். அதைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என்கிற அவசியமில்லைதான். ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை எனும்போது, குறைந்தபட்சம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிற அளவிலான செய்திகளை, அரசாங்கத் தரப்பிலிருந்தே அல்லவா வெளியிட வேண்டும்.
ஏற்கெனவே முதல்வராக இருந்தவர்களுக்கெல்லாம்கூடத்தான் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. அப்போதெல்லாம் இப்படியா பயமுறுத்தினார்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒரு தடவை வடை சாப்பிட்டு வயிறு சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொஞ்ச நேரத்திலேயே அந்த செய்தி வெளியில் பரவி, வேறு வதந்திகள் பரவாமலும்... அதையடுத்து பிரச்னைகள் எழாமலும் தடுத்தது.


உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் பற்றி எந்த செய்தியுமே வெளியில் வந்துவிடக்கூடாது... அவரை யாரும் பார்த்துவிடக்கூடாது... என்று அனைத்தையும் ராணுவ ரகசியமாகவே பொத்தி பொத்தி வைத்துக் கொண்டிருப்பது அரசாங்கமும்... அரசாங்கத்தை தற்போது கையில் வைத்துக் கொண்டிருப்பவர்களும்தான். இதன் காரணமாகத்தான் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் சமூக வலைதளங்கள் என்று முதல்வரின் உடல்நலம் குறித்து பலவிதமான செய்திகள் வதந்திகளாகவும், அதிகாரப்பூர்வமற்றவையாகவும் வட்டமடிக்கின்றன.


ஆக, இப்படியெல்லாம் வதந்திகள் பரவ முழுமுதற் காரணமாக இருப்பதே அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள்தான். எனவே, 'வதந்தியை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காதீர். அப்படி செய்தால் கைது நடவடிக்கை பாயும்' என்று பொதுவெளியைப் பார்த்து மிரட்டும் தமிழகக் காவல்துறை, முதலில் வதந்தி பரவுவதற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.
ஒருவேளை இப்படியெல்லாம் வதந்திகள் பரவி தினமும் தமிழகம் பரபரப்பாகவே இருக்கட்டும் என்று அரசாங்கத்தை கையில் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர்கள் நினைத்தால்... எங்கள் தலையெழுத்து, நடக்கிறபடி நடக்கட்டும்!

-இப்படிக்கு
தினமும் மாலையில் வீடு திரும்புவதற்கு பயந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close