Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எப்படிங்க இப்படிலாம்... நினைச்சா தூக்கமே வர்றதில்லைங்க!' - இயக்குநர் வெற்றிமாறன்

                        

மீபத்தில் டெல்லிப் பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றுக் கடுகை வர்த்தக ரீதியாகச் சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் காந்தி ஜயந்தி தினமான நேற்று (அக்டோபர் 2) தமிழகத்தில் 45 இடங்களில் மரபணு மாற்று பயிர்களுக்கும், உணவு வகைகளுக்கும் எதிராக போராட்டங்களும், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை, தி.நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா பள்ளி வளாகத்தில் 'விதை சத்தியாகிரகம்' என்ற பெயரில் மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பலர் மரபணு மாற்று கடுகுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #BanGmMustard என்ற பெயரில் கோஷங்களும் எழுப்பினர்.
                          
நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி, "மத்திய அரசோட மரபணு தொழில் நுட்பத்துக்கான உயர்மட்டகுழு, வணிகரீதியாக ஜி.எம். கடுகு பயிர் செய்றதுக்கு அனுமதி வழங்குறதுல இறுதி கட்டத்தை நெருங்கிட்டாங்க. இந்தியாவுல உணவு பயிருக்கு முதன்முதலா அனுமதி அளிக்கபட இருக்கிறது இந்த கடுகுக்குத்தான். மரபணு மாற்று உணவு பயிர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்று உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வர்றாங்க. முதல்ல பி.டி கத்திரிக்காய் அறிமுகப்படுத்தும்போது, மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பால் அதை நிறுத்தினாங்க. இப்போ அந்த பி.டி தொழில்நுட்பத்தை கடுகுல புகுத்தியிருக்காங்க. மரபணுமாற்று கடுகு இந்தியாவில் நுழைந்தால், அடுத்து 50 வகையான மரபணுமாற்று பயிர்கள் வரிசையில நிக்குது. பி.டி கடுகை கொண்டு வருபவர்களுக்கு பணம், பலம் ரெண்டுமே இருக்குது. ஆனால், நமக்கான ஒரே பலம் உண்மை. அது ஒன்றுதான் நமக்கு துணை. எக்காரணம் கொண்டும் பி.டி தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் வரவிட மாட்டோம். பி.டியை முழுமையாக ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இங்கே வந்திருப்பவர்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு மரபணு மாற்று கடுகோட தீங்கை எடுத்துச் சொல்லுங்க" என்றார்.
                           
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,"எனக்கு கொஞ்ச காலமாக கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நம் குழந்தைகளுக்கு விஷத்தை உணவாக கொடுத்துக் கொண்டிருக்கிறோமே என்று. இதை நினைச்சு பார்க்கும்போதெல்லாம் இரவில் தூக்கம்கூட வருவதில்லை. நம் எதிர்காலம் என்பது அடுத்த தலைமுறைதான். அவர்களுக்கு ஊட்டும் விஷத்தை நிறுத்தவேண்டும். இன்னும் சில காலங்களில் காற்று, தண்ணீர் எதுவும் இருக்காது. அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுட்டு போகப்போகிறோம் என்பதுதான் நமக்கு முன் உள்ள சவால். இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதை பார்க்கும் போதெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. சில வருஷங்களாகவே ஆர்கானிக், சிறுதானிய உணவுகளைத்தான் சாப்பிட்டு வருகிறேன். அப்போதிருந்தே எனக்கு உடலில் வித்தியாசங்கள் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. மக்கள் விழிக்கும் தருணம் இதுதான். உண்மையான சுதந்திரம், நம்முடைய உணவை நாமே உற்பத்தி செய்து சாப்பிடுவதில்தான் இருக்கிறது. மக்களோட சுதந்திரத்துக்கு எதிராகத்தான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு  கொண்டிருக்கிறார்கள். மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு" என்றார்.
                        
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரம்பர்ய, சிறுதானிய உணவு அரங்குகள், இயற்கை காய்கறிகள், மரக்கன்றுகள், மண்பாண்டங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்த கண்காட்சியும் நடைபெற்றது. தெருக்கூத்து, தப்பாட்டம் என்று பாரம்பர்யத்தை போற்றும் வகையில் நிகழ்ச்சி களைகட்டியது.

- துரை.நாகராஜன்.
படங்கள்: அருணசுபா (மாணவ பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close