Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' உள்ளாட்சியில் இரண்டாம் இடத்துக்கு வாங்க...!'  -தமிழக பா.ஜ.கவுக்கு அமித் ஷா அட்வைஸ் 

ள்ளாட்சி தேர்தலில் தனித்துக் களம் காண்கிறது தமிழக பா.ஜ.க. ' சட்டமன்றத் தேர்தலில் நம்மைப் புறக்கணித்த கட்சிகளுக்கு, இந்தத் தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்போம்' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள். 

தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இதில், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி, மக்கள் நலக் கூட்டணியைத் தவிர்த்து பிற கட்சிகள் தனித்துக் களம் காண்கின்றன. வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் என பா.ஜ.கவிலும் தேர்தல் பணிகள் களைகட்டியுள்ளன. " சட்டமன்றத் தேர்தலைப் போலவே, வெற்றி பெறக் கூடிய உள்ளாட்சி வார்டுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்சித் தலைமை தர இருக்கிறது. வெற்றிக்கான வார்டுகளை அடையாளம் கண்டறிந்து பிரசார வேலைகளை முடுக்கிவிட்டுள்ளோம்" என விவரித்த, தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர், 

" உள்ளாட்சி அமைப்பில் உள்ள ஒரு லட்சத்து முப்பதாயிரம் பதவிகளுக்கும் ஆட்களை நிறுத்துகிறோம். ஊராட்சிகளுக்கு சின்னம் தேவையில்லாததால், உள்ளூரில் செல்வாக்குமிக்க எங்கள் கட்சியின் பிரதிநிதிகளை நிறுத்துகிறோம். கட்சியின் சின்னம் தேவைப்படுகின்ற மாநகராட்சி, நகராட்சிகளில் அனைத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆட்களை நிறுத்தியுள்ளோம். கோவையில் உள்ள மாநகராட்சி வார்டில் ஓர் இடத்தில் மட்டும் கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. கவுண்டம்பாளையம் பகுதியின் அ.தி.மு.க பிரதிநிதி ஒருவர், எங்கள் வேட்பாளரை கடுமையாக மிரட்டியதால் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார். கொங்கு மண்டலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி, எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுகிறோம். இதுவரையில் கட்சியின் சின்னத்தையே பயன்படுத்தாத வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் 120 இடங்களை நாங்கள் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என விவரித்தவர், 

" இந்த உள்ளாட்சித் தேர்தலை டெல்லித் தலைமை சீரியஸாக கவனித்து வருகிறது. ஊராட்சிகளில் இருந்தே கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார் அமித் ஷா. அதையொட்டி தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். ' உள்ளாட்சியில் இரண்டாம் இடம் பிடித்தே ஆக வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறார். மாநிலத் தலைவர் தமிழிசையும், ' சட்டமன்றத் தேர்தலில் எங்களை உதாசீனப்படுத்திய கட்சிகளுக்கு நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம். தேர்தல் முடிவில், பா.ஜ.கவினர் பெறப் போகும் வெற்றியைப் பார்த்து பிரதான கட்சிகள் அதிர்ச்சி அடையப் போகின்றன' என உற்சாகமாகப்  பேசினார். தேர்தலில் இரண்டாம் இடம் பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், மூன்றாம் இடத்துக்குக் கட்டாயம் வருவோம். மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகளால், எங்கள் அளவுக்குக்கூட வாங்குகளைப் பெற மாட்டார்கள். உள்ளாட்சிகளில் போட்டியிடும் பா.ஜ.க தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்" என்றார். 

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவில், ' இரண்டாம் இடமா? ஏழு சதவீத ஓட்டுக்களா?' என்பதற்கான விடை தெரிந்துவிடும். 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ