Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடநாட்டில் சிலப்பதிகாரத்தைப் பரப்ப குரல் கொடுத்த ம.பொ.சி...!

மிழன் என்னும் இன உணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதியை உண்மையான தமிழ்நாடு ஆக மாற்றுவதற்குச் சிலப்பதிகாரம் ஒன்றே சிறந்த கருவி’’ என்றவர் தமிழறிஞர் ம.பொ.சி. அவரது நினைவு தினம் இன்று.

தமிழகத்தில் தேசியத்துக்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப்பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். ‘மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்’ என்பதே... சுருக்கமாக, ம.பொ.சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது.

‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பு!

நாட்டு விடுதலைப் போரில் ம.பொ.சி ஈர்க்கப்பட்டு, ஆறு முறை சிறைவாசம் அனுபவித்தார். தேசிய இயக்கமான காங்கிரஸில் இருந்தபோதும், தமிழகத்தின் உயர்வே ம.பொ.சி-யின் நோக்கமாக இருந்தது. அதன் காரணமாக 1946-ல் ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவினார். அதன் வாயிலாக, ‘மொழியின் அடிப்படையில் தமிழகம் தனி மாநிலமாக வேண்டும்’ என்ற கோரிக்கையை எழுப்பினார். அப்போது, தென் மாநிலங்கள் இணைந்து சென்னை மாகாணமாக இருந்தது. ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திராவிலிருந்து அன்று பலத்த குரல்கள் ஒலித்தன. அப்போது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட இருந்த நேரம். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’’ என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் ம.பொ.சி. சென்னையில் எழுந்த இந்த எதிர்ப்புக் குரலால் அடங்கிப்போனது ஆந்திரம். ‘தற்காலிகமாவது சென்னையைச் சொந்தமாக்கிக் கொள்கிறோம்’ என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சொல்லப்பட்டது. ஆனால், ‘‘தற்காலிகமாகக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தம்’’ என்று தன் தொண்டர்கள் படைசூழ கடுமையாகப் போராடினார் ம.பொ.சி. இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.


சென்னை கார்ப்பரேஷன் கொடிச் சின்னம்!
தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் போராட்டக்களமாக மாற்றிக்கொண்ட இவர், தன் சுயசரிதை நூலுக்கு ‘எனது போராட்டம்’ என்று பெயர்வைத்தார். ‘சிலம்புச் செல்வர்’ என்று ரா.பி.சேதுப்பிள்ளையால் அழைக்கப்பட்ட ம.பொ.சி., தமிழ்நாட்டு எல்லைகளை மீட்டுத் தந்ததால், ‘எல்லைக் காவலர்’ என்று அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய ‘தமிழரசுக் கழகத்தை’ ஆட்சிக் கட்டிலில் அமர்த்த ஆசைப்படாமல் தன் இறுதிக்காலம் வரை நாட்டின் நலனுக்காகப் பாடுபட்டார். சென்னை கார்ப்பரேஷனில் ஆல்டர்மேனாக ம.பொ.சி இருந்தபோது, தன் கட்சியின் வில், புலி, மீன் சின்னத்தை அதன் கொடிச் சின்னமாக்கினார். தனது வாழ்வின் இறுதிவரை, ‘‘தமிழ்மொழி  தேசியத்தின் ஓர் அங்கமே’’ என்று முழங்கிவந்தார். சிறந்த மேடைப் பேச்சாளரான ம.பொ.சி., சிலப்பதிகாரம் குறித்து மணிக்கணக்கில் பேச வல்லவர். பேச்சாளராக மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அவரது எழுத்துகள் பல நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழிசையைப் பரப்புவதிலும் ம.பொ.சி முன்னின்றார். 1982-83-ல் பாரதியார் நூற்றாண்டு விழாவை தலைமையேற்று திறம்பட நடத்தினார். தமிழக சட்ட மேலவையின் தலைவராக ம.பொ.சி. இருந்த காலகட்டம், மேலவையின் பொன்னான காலம் என்று போற்றப்படுகிறது.

வடநாட்டில் சிலப்பதிகாரத்தைப் பரப்ப குரல்!

‘‘வான்மீகியின் ராமகதையைத் தென்னாட்டவருக்கு அறிவிக்க ஒரு கம்பன் தோன்றியதுபோல, இளங்கோவின் சிலப்பதிகாரத்தை வட நாட்டினருக்கு அறிவிக்க வடக்கில் ஒரு கவிஞன் தோன்றியிருந்தால்... தமிழ்மொழியை - தமிழர் தம் கலாசாரத்தை வட நாட்டவரும் மதிக்க வழி பிறந்திருக்கும். தமிழகத்தில் ஊர்தோறும், வீதிதோறும், வீடுதோறும் ராமாயணப் பாத்திரங்கள் உலவுகின்றன - உலவ உரிமை வழங்கினார் கம்பர். இதுபோன்று வட இந்தியாவின் ஊர்தோறும், வீதிதோறும், வீடுதோறும் சிலப்பதிகாரப் பாத்திரங்கள் உலவ வழிசெய்வாரில்லை. தமிழரிலே சிலர் குறிப்பாக, இந்தி அல்லது சமஸ்கிருதம் பயின்றோர், வடக்கே சென்று இந்தக் குறையைப் போக்கத் தொண்டு செய்யவேண்டும்’’ என்று தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் வட நாட்டில் பரவுவதற்குக் குரல் கொடுத்தார்.


டி.கே.சி-யின் புகழுரை!

‘‘தமிழ்நாட்டில் சிவஞான கிராமணி என்றால், அது ஒரு தனிப்பெரும் பண்பு. அவர், எந்தத் துறையில் இறங்கினாலும் அங்கே வீரத் தத்துவத்தைக் காணலாம். அரசியலில் வீரராய் விளங்குகிறார் என்பது தமிழ்நாடு அறிந்த விஷயம். சமூக இயலும் அப்படியேதான். தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் இசை இவைகளிலும் அபூர்வமான ஆர்வத்தோடுதான் நிற்பார். இதுதான் சிவஞான கிராமணி. தமிழ் முரசில் வரும் தலையங்கங்களிலும் சிவஞான கிராமணியார் வீரத் தொனி கேட்கும்’’ என ம.பொ.சி-யைப் பற்றி டி.கே.சி புகழ்ந்துள்ளது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட ம.பொ.சி-யை நாமும் போற்றி வணங்குவோம்.

- ஜெ.பிரகாஷ்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close