Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நாங்க வெயிட் பண்றோம் சார். அம்மா வந்தாதான் வீட்டுக்கு போவோம்!” - அப்போலோ வாசலில் தொண்டர்கள்


விசுவாசம்னா நாக்கை கூட அறுத்து காட்டுறது அ.தி.மு.க தொண்டர்கள் ஸ்டைல். ஜெயலலிதா நீதிமன்றம் போனபோது ஒட்டுமொத்த தமிழகத்தையும் காவடி, பூஜைன்னு பக்திமயமாக மாத்துனது, அழுது ஆர்ப்பாட்டம் பண்றதுன்னு பத்து பேர் கொண்ட குழுவை வச்சு புது புது டெக்னிக்கில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துற ஏரியால அவங்க தான் அன்னபோஸ்ட். ஜெயலலிதா சும்மா இருக்கும் போதே இப்படின்னா ஹாஸ்பிடல்ல இருக்கும்போது...” முதல்வர் அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனை வளாகத்தில் கவலையான முகத்தோடு யாரிடம் இருந்தாவது நல்ல செய்தி வராதா என காத்துக் கொண்டு இருக்கின்றனர்.ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டநாளில் இருந்து இன்று வரை மருத்துவமனை வளாகத்தை விட்டு நகராமல் சில தொண்டர்கள் காத்து கிடக்கின்றனர்.

பத்து நாட்கள் மருத்துவமனை வளாகத்தை விட்டு நகராமல் கொங்கு மண்டல தொண்டர்களுக்கும், மீடியாவிற்கும் யார் யார் எந்த நேரத்தில் வந்தனர் என அச்சு பிசகாமல் அப்டேட் கொடுத்து கொண்டு இருந்த சேலத்தை சேர்ந்த அன்பரசுவிடம் பேசினோம்.  ''15 வருசம் அம்மா வீட்டை விட்டு எங்க போனாலும் கான்வாய் ரூட்ல போய் நின்னு வணக்கம் வச்சுருவேன். ஒருமுறை அம்மா டெல்லில இருந்து வந்த அப்ப நல்ல மழை. ஏர்போர்ட் வாசல்ல நனைஞ்சிக்கிட்டே வணக்கம் வச்சேன். அப்ப என்ன பாத்து சிரிச்சுகிட்டே வணக்கம் சொன்னாங்க. அதை என் வாழ்நாளிலே மறக்க முடியாது.மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க வருவாங்க, பாக்கலான்னு நினைத்து தான் சென்னை வந்தேன். அப்புறம் பாத்தா உடம்பு சரி இல்லன்னு அப்பல்லோவுல சேர்த்து இருக்குறதா தகவல் வந்துச்சு.22-ம் தேதி ராத்திரி இங்க வந்தேன். இன்னிக்கு வரைக்கும் எங்கையும் போகல. முதல் 4 நாளைக்கு ரூமுக்கு போய் குளிச்சுட்டு வந்தேன். அப்புறம் கைல காசு இல்ல. இங்கயே தங்கிட்டேன். போலீஸ்காரங்க எல்லாருக்கும் என்ன அடையாளம் தெரியும்.உனக்கு வேற வேலையே இல்லையா போய் தொலைய வேண்டிதானன்னு திட்டுறாங்க. எனக்கு இது தான் சார் வேலையே. அம்மா வீட்டைவிட்டு வெளிய போனாலே திரும்ப வீடு போற வரைக்கும் தெருவுல காத்து இருந்து அனுப்பிட்டு தான் போவேன். இப்ப ஹாஸ்பிடல இருக்கும் போது எப்படி சார் ஊருல போய் இருக்க நிம்மதியா இருக்க முடியும்?அம்மா எப்ப வீட்டுக்கு போறாங்களோ அப்ப தான் நானும் போவேன்” எனக் கூறி கொண்டே எதோ அமைச்சர் வந்து இருக்காரு என்னன்னு கேட்டுட்டு வந்துறேன் என மருத்துவமனையை வாசலை நோக்கி ஓடுகிறார் அன்பரசு.

கையில் ஜெயலலிதா படம் போட்ட பெரிய மோதிரமும் முறுக்கு மீசையும் என கடந்த 10 நாட்களில் அப்பல்லோ மருத்துவமனைக்கு மற்றொரு அடையாளமாகவே மாறிப் போய் உள்ளார் விருதுநகர் மாவட்டம் ஆகாசபட்டியை சேர்ந்த பொன்னுப்பாண்டி. 45 வருஷம் ஆச்சு கட்சியில சேர்ந்து. இதுவரை மாசத்துக்கு ஒரு முறையாவது வந்து தெருவுல நின்னு அம்மாவ பாத்துட்டு போயிருவேன். அம்மா ஹாஸ்பிடல் வந்த அன்னைக்கு இங்க வந்தேன். வீட்ல எல்லாம் போன் பண்ணி வையுதுக.ஆனா அம்மா எப்படி இருக்காங்கன்னு தெரியாம ஊருக்கு போய் என்ன பண்றது? தினமும் எம்.எல் ஏ ஹாஸ்டல்ல போய் குளிச்சிட்டு காலையில இங்க வந்துருவேன். அம்மா உணவகத்துல 4 இட்லி, மதியம் ஒரு தயிர் சாதம்,ராத்திரிக்கு 3 சப்பாத்தின்னு ஒரு நாள் சாப்பாடு 20 ரூபாய்ல முடிஞ்சுரும்.அமைச்சர்களே உள்ள போய் பாக்க முடியலை. அப்புறம் நம்ம எல்லாம் எப்படி போறது! லண்டன் டாக்டரும், கவர்னரும் வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் ஆறுதலா இருக்கு. பல வருசமா மோதி இப்ப தான் என் சொந்த ஊருல வார்டு கவுன்சிலர் சீட்டு கிடைச்சது. அம்மா இப்படி இருக்கும்போது அவங்கள விட்டுட்டு போய் எப்படி பிரச்சாரம் பண்ண முடியும்? அது தான் கவுன்சிலர் சீட்டை வேண்டான்னு சொல்லிட்டேன். நமக்கு பதவி எல்லாம் வேண்டாம்னே அம்மா வந்தா போதும் என கண் கலங்கினார்.

 

எதுக்கு தம்பி இப்படி கஷ்டப்படுற.. வீட்டுல இருக்க கூடாதா என காவல் துறையினரில் இருந்து கட்சிக்காரர்கள் வரை அனைவரும் அறிவுரை கூறி கொண்டு இருந்தது விழுப்புரம் மாவட்டம் மணிவண்ணனை பார்த்து தான்.இரண்டு காலும் ஊனமுற்ற மணிவண்ணன் மருத்துவமனை வந்து 10 நாட்களை ஆகின்றன. அங்கேயே தூங்கி கட்சிக்கார்கள் வாங்கி கொடுக்கும் உணவை சாப்பிட்டு கொண்டு வாசலிலே காத்து இருக்கிறார்.


”டிரஸ் கூட மாத்தல. ராத்திரி கொசு கடிச்சு கை எல்லாம் வீங்கி இருக்கு. ஆனா அத பத்தி எல்லாம் கவலை இல்லை சார். அம்மா வெளில வர்றத பாத்துட்டேன்னா அது போதும். எல்லாரும் லூசு அறிவு இல்லன்னு சொல்றாங்க சொல்லிட்டு போகட்டும்.ஹாஸ்பிடல் உள்ள இருந்து வெளில வர்றவங்க கிட்ட நான் எதுவும் கேக்குறதும் இல்ல. யார்ட்டையும் பேசுறதும் இல்ல. அம்மா நல்லா இருப்பாங்கன்னு என மனசாட்சி சொல்லுது சார்.அத விட உண்மையை வேற யாரு சொல்லிறப்போறாங்க.வீட்ல எல்லாம் சொல்லிட்டு வந்துட்டேன் என்ன தேடாதீங்கன்னு. அம்மா என்னிக்கு வீட்டுக்கு போறாங்களோ அன்னைக்கு நானும் வீட்டுக்கு வந்துருவேன் அதுவரைக்கும் எத்தனை நாள் ஆனாலும் இங்க தான்” என தீர்க்கமாக சொல்லி முடித்தார்.

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்று அப்போலோ வாசலில் மனுவோட நின்றவர்களை பார்த்து அம்மா இப்படி இருக்கும் போதும் இவங்களுக்கு மனு கொடுக்க எப்படி தான் மனசு வருதோ என இவர்கள் கவலைபட்டு கொண்டதை பார்த்து இதுதான் அ.தி.மு.கவின் பலமும் பலவீனமும் என்பது புரிந்தது.

-பிரம்மா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close