Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி பிரச்னைக்கும் நடிகருக்கும் என்ன தொடர்பு? - பிரகாஷ்ராஜின் நியாயமான கேள்வி

ஒவ்வொரு முறையும் காவிரி பிரச்னை எழும்போது, நடிகர்கள் போராட வேண்டும். நடிகர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்து அடங்கும். தமிழிசை போன்றவர்கள் ஒரு படி மேலே போய், நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பார்கள். காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைப்பது உண்மையில் அவரை இக்கட்டான சூழலுக்குத் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?.  நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் தமிழகத்தில் தொழில் நடத்துகிறார். நடிகர் ரஜினிகாந்தின் கருத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மதிக்காத ஒரு மாநிலத்தை என்ன செய்து விட முடியும்?.

காவிரி விவகாரம் இரு மாநில அரசு சம்பந்தப்பட்டது. இந்த மாதிரி சூழலில் நடிகர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது கேலிக்குரியதாகவே தோன்றுகிறது.

                                      

 

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர். கன்னடத் தொலைக்காட்சி உலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு புகுந்து முத்திரை பதித்தவர். சில விஷயங்களை நேரடியாகப் பேசி விடக் கூடியவர். இரு நாட்களுக்கு முன் கன்னட டி.வி ஒன்று அவரைப் பேட்டிக் கண்டது. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது புதிய கன்னடப்படம் பற்றி பேட்டியளித்துக் கொண்டிருந்தார். ஒரு நடிகர் சினிமா பற்றி பேட்டியளிப்பதில் அவருக்கு எந்த சங்கடமும் இருக்கப் போவதில்லை.

ஆனால், திடீரென காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே பிரச்னைக்கு காரணம் யார்? பிடிவாதமாக இருப்பது கர்நாடகமா? தமிழ்நாடா? இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விகள் பிரகாஷ்ராஜ் முன் வைக்கப்பட்டது. அந்தத் தருணத்தில் கோபமடைந்த பிரகாஷ்ராஜ் தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை..அதுவும் கேமரா மேனிடம் 'நான் சொல்வதை அப்படியே ரிக்கார்ட் செய்துவிடுங்கள்' என்று கூறி விட்டே ஆணித்தரமாக சில கருத்துக்களைத் பிரகாஷ்ராஜ் முன்வைத்தார்.

'நாம் இப்போது ‘இதொல்லே ராமாயண‘ படம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். சினிமா பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். காவிரி விவகாரம்  நீங்கள் நினைப்பது போல் தண்ணீர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.  எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி விடக் கூடிய விஷயமும் இல்லை  விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. இது மிகவும் ஆழமான விஷயம். இதுபற்றி மிகவும் தீவிரமாக பேச வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சியில் தேவை இல்லாமல் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு என்னை இக்கட்டுக்குள்ளாக்க வேண்டாம். இதன்மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கிறது. மக்கள் ஏற்கனவே கோபத்தில் விரக்தியில் வேதனையில் இருக்கின்றனர்.

சினிமா நடிகரிடம் காவிரி விவகாரம் பற்றி உங்களுக்கு எப்படி கேட்க தோன்றுகிறது. உங்களுக்கு பொறுப்பு இல்லையா?. மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று ஒரு குறைந்தபட்ச பொறுப்பு கூட இல்லாவிட்டால் அது சரியில்லை. இங்கு இருப்பவர்கள், அங்கு இருப்பவர்கள் எல்லோரும் மனிதர்களே. ஆனால் பிரச்னை தான் வேறு'.என கடும் கோபத்துடன் பதில் அளித்தார்

நடிகர் பிரகாஷ்ராஜ், ரஜினிகாந்த் போல மிகப் பெரிய ஸ்டார்வேல்யூ இல்லாத நடிகராக இருக்கலாம். தனது சொந்த மாநிலத்திலேயே தனது கருத்துக்களை தைரியமாக தெரிவிக்கக் கூடிய மனிதர். அதனால்தான், 'நடிகர்களிடம் ஏன் காவிரி பிரச்னை கொண்டு வருகிறீர்கள் ' என்ற கேள்வியை தைரியமாக கேட்டிருக்கிறார். அந்த கேள்வியில் ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.

- எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ