Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னொரு மழைக்கு சென்னை தாங்குமா...?

‘பீகாரில் வெள்ளம், உணவுக்காகத் தவிக்கும் மக்கள்’ என்று தொலைக்காட்சிகளிலும், திரையரங்குகளிலும் அரசின் செய்திப் பிரிவு வழங்கும் குறும்படத்தைப் பார்த்து ‘உச்’ கொட்டாதவர் நம்மில் வெகுகுறைவுதான்.

இன்று அதேநிலையை, ‘சென்னையில் வெள்ளம் - 2015’ என்று நாமே நேரடியாகப் பார்த்து அனுபவித்துவிட்டோம். மீண்டும் அதே போன்றதொரு நிலையை, இயற்கை நமக்களித்தால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா? எந்த நேரமும் உடையக்கூடிய வலுவில்லாத ஆற்றங்கரை, ஏரிக்கரைப் பகுதிகள், ஜீவனைத் தொலைத்திருக்கிற சென்னையின் கூவம் இவை தவிர செயற்கையாய் உருவாக்கப்பட்ட பக்கிங்ஹாம் கெனால் மற்றும் கேப்டன் கெனால் இவைகளில் அடைந்திருக்கும் தூர்வாரப்படாத குப்பைகள் இன்னொரு பெருமழையைத் தாங்குமா, தெரியவில்லை.

சென்னை மக்கள், 2015-ம் ஆண்டு சந்தித்த அந்தப் பெருமழை மீண்டும் நம்மைத் தாக்குமோ என்று பீதியுடன் காத்துக் கிடக்கின்றனர்... யாருக்கும் ‘மழை வருது, மழை வருது... குடை கொண்டு வா’ பாடலை சமீப காலமாக கேட்கப் பிடிக்கவில்லை. ஊரில் இருக்கும் விவசாயப் பயிர்கள் கொடுமழையால் அழுகியதைவிட, சென்னையில் வாங்கிய ஃப்ளாட்கள் மூழ்கியதுதான் அவர்களுக்குக் கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. சென்னையிலும் மூழ்கடிக்கும் வெள்ளம் வந்துவிட்டதே என்பதை அறிந்து பதறினர். சென்னை வெள்ளத்தால், புறநகரில் தீப்பெட்டி போன்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மார்க்கெட், அப்படியே சரிந்தது. கட்டிய வீடுகள் விலை போகவில்லை, குடிபோக வாங்கியவர்கள் வந்த விலைக்கு விற்றனர். ஏ.டி.எம். கார்டுகள் எதற்கும் பயன்படவில்லை. நடுத்தரக் குடும்பங்களும், தொண்டு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் மாடி வீட்டு ஏழைகளுக்கு, சோறுபோட்ட நாட்களும், வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய நாட்களும் வரலாறாகின. சாதிகளும், மதங்களும், இனம் - மொழி அம்சங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கோயில்களில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் பள்ளிவாசல்களில் இந்துக்களும், பிற மதத்தவரும் ஒரே போர்வையில் குளிரைவிரட்டிய அன்பை இந்தச் சென்னை மழை பிரசாரம் ஏதுமின்றிச் செய்து முடித்தது. பல நல்ல விஷயங்களைச் சென்னை பெருவெள்ளம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது... அதை மட்டும் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, வெள்ளத்துக்கான காரணங்களை அப்படியேவிட்டு வைத்திருக்கிறோம்... ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்ற கூற்றுக்கு தமிழகம்தான் அடையாளம் என்றாலும், அதில், பிரதான அடையாளமாக கொள்ளப்படுவது, சென்னை.

நாட்டின் கோட்டை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் சிறைத் துறை இயக்குநரகம் தொடங்கி முக்கியமான அத்தனை தலைமைத் தொடர்பு மையங்களும் சென்னையைத்தான் தலைமையாய்க் கொண்டு இயங்குகிறது. கனவுத் தொழிற்சாலையான ‘கோலிவுட்’டில் தொடங்கி அத்தனை பிரதான வணிக மையமும், வாழ்வாதாரமும் சென்னையின் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது. சென்னையில் மீண்டும் நவம்பர் 8, 2015-ன் சீற்றம் வந்தால் அதை எதிர்கொள்ளும் சூழல் இந்த நிமிடம் வரையில் நம்மிடம் இல்லை என்பதே உண்மை.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இவை கடல் மட்டத்தில் இருந்து 0.40 மீ உயரத்தில்தான் உள்ளன. சென்னைப் பெருநகரம் கடல் மட்டத்துக்கு இணையாக சமதளத்தில் இருப்பதால் மழை நீரானது வேகமாகச் செல்லாது. ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் விரைந்து செல்லாது. இதனால்தான் சென்னை நகரில் வெள்ளம் வடிய நாளாகிறது. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துத் துறையின் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 5, 2016 அன்று சட்டசபையில் இப்படிப் பேசினார்.

“சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாலைகள், சுரங்கப் பாதைகளில் மழைநீரை துரிதமாக வெளியேற்ற மின்மோட்டார், மின் ஆக்கி மற்றும் தேவையான சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதிகள் ரூ.31.25 கோடி மதிப்பில் உடனடியாக மேற்கொள்ளப்படும். சென்னை ஆலந்தூர் தில்லை கங்கா நகரில் உள்ள வாகனச் சுரங்கப் பாதைக்குக் கூடுதலாக ஓர் உயர்மட்ட சாலை மேம்பாலம் ரூ.85 கோடி மதிப்பில் கட்டப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டில் தயாரிக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் - செய்யாற்றில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை கொசஸ்தலையாற்றில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை... இவைகளுக்கான பூர்வாங்கப் பணிகள் விரைந்து தொடங்கப்படும்” என்றார்.

சென்னை நகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை (2015-ன் வெள்ளத்தின்போது) முதல் அமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டுப் பேசியபோது, “மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிட்டது. மாதக்கணக்கில் பெய்ய வேண்டிய மழை, இப்படி ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிட்டால், எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் மழைநீர் தேங்குவதையும், அதனால் சேதங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது. அப்படித்தான் இங்கேயும் மழைநீர் தேங்கி, சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதை அறிந்தவுடன் அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகள் இரவு - பகல் என்று பாராமல் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்” என்றார்.

இன்னொரு பெருமழை வரும்வரை இவைகளெல்லாம் ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளாக மட்டுமே இருக்க முடியும்... ‘வந்து விட்டால்?’ என்ற கேள்வி குறித்து யாரும் கவலைப்பட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை, என்பதே இப்போதைய நிஜம்!

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ