Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையை தெரியப்படுத்த வேண்டும்!' உயர் நீதிமன்றம் கருத்து

 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்து, பல்வேறு வதந்திகள் வெளியாகின்றன. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வந்தாலும், அரசாங்கத்தின் சார்பில் தெளிவான அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்தப் பிரச்னையை கையில் எடுத்த, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், “தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வு பாதிப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தொடக்கத்தில் அறிவித்தது. ஆனால், அதைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் புதிது புதிதாக வெளியாகின்றன. முதல்வர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதால் அரசாங்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

டிராபிக் ராமசாமியின் மனு இன்று (அக்டோபர் 4-ம் தேதி), சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில், டிராபிக் ராமசாமி தன் மனுவை விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதைக்கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு இன்று பட்டியலில் இல்லை. அதனால், வழக்கை இன்று விசாரிக்க முடியாது. ஆனாலும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பவர், அந்த மாநில மக்களின் பிரதிநிதி. அதனால் அவரது உடல்நிலை குறித்து, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் கடமையும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது” என்று கருத்து தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர்கள், இதுகுறித்து பதில் அளிக்க தங்களுக்கு போதிய அவகசாம் வேண்டும் என்று கேட்டனர். அதை ஏற்றுக் கொண்டு வழக்கை நீதிபதிகள் நாளை ஒத்திவைத்தனர்.

டிராபிக் ராமசாமியிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டோம். முதலமைச்சர் உடல்நிலை பற்றிய விபரங்களைக் கேட்டு நான் நேற்று மனுத்தாக்கல் செய்தேன். அது விசாரணைக்கு வராததால் நீதிபதிகளிடம் முறையிட்டேன். என் மனுவில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட நீதிபதிகள், முதல்வர் உடல்நலம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவது அரசின் கடமை என்று தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தற்காலிக முதல்வர் நியமனம், முதல்வரின் உடல்நலம் குறித்த அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்"என்றார்.

- ஜோ.ஸ்டாலின், எஸ்.மகேஷ்,

எடிட்டர் சாய்ஸ்

MUST READ